தண்ணீர் பந்தல் ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் கொலு 
தீபம்

ஸ்ரீ மஹா காளியம்மன் கொலுவீற்றிருக்கும் திருக்கோவிலில் நவராத்திரி சிறப்பு கொலு!

சேலம் சுபா

நவராத்திரி வந்து விட்டாலே சேலம் மாநகர மக்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஆம். சேலம் நெத்திமேட்டில் உள்ள தண்ணீர் பந்தல் ஸ்ரீ மஹா காளியம்மன் கோவிலில் உள்ள பொம்மை கொலுவை பார்ப்பது என்றால் அனைவருக்கும் ஆனந்தம்தான். காரணம் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக, கோவில் முழுக்க ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொலுவில் காட்சிப்படுத்தி வைத்திருப்பதுதான்.

தண்ணீர் பந்தல் ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் கொலு

சேலம் நகரத்தின் எல்லையாக விளங்கும் அன்னதானப்பட்டி நெத்திமேட்டில் உள்ள தண்ணீர் பந்தல் ஸ்ரீ மஹா காளியம்மன் அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். இந்தக் கோவிலில் கடந்த 30 வருடத்திற்கு மேல் நவராத்திரி விழா  கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு.

தென் கிழக்கு பார்த்து வீற்றிருக்கும்  காளியம்மன் அழகு தேவதையாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அற்புதமாக காட்சியளிக்கிறார். சிறு கோவில் என்றாலும் அங்கு செய்யப்படும் அலங்கார வேலைப்பாடுகள் மக்களிடையே பாராட்டுகளை பெறுகிறது.

கோவில் முன் அமர்ந்துள்ள கல்யாண கணபதியை வணங்கி விட்டு உள்ளே சென்றால்,  மூலஸ்தான கோஷ்டத்தில் சிவதுர்க்கை, விஸ்வ துர்க்கை, பிரம்மதுர்க்கை ஆகியோரின் அம்சமாக திகழ்கிறார் ஸ்ரீ மஹா காளியம்மன்.

அந்த காலத்தில் சுமை தூக்குபவர்கள் அதிகம் நிறைந்திருந்த இந்த பகுதியில் அவர்கள் இளைப்பாறுவதற்காக அம்மன் குடி கொண்டிருக்கும் இந்த இடத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப் பட்டிருந்ததே பெயர்க்காரணம். அதன் பிறகு பல்வேறு அம்மன்  பண்டிகைகளில் பக்தர்கள் சுமந்து வரும் கரகத்தை ஊர் எல்லையில் வைக்கும் பழக்கத்தை முன்னிட்டு எல்லையருகே உள்ள  இந்த இடத்தில் கரகத்தை வைத்ததால் இவ்விடம் தெய்வ அனுக்கிரகம் பெற்றதாகவும் பின் அம்மன் அருளால் தண்ணீர் பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு  அனைவராலும் வழிபடப்படுகிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள். கோவில் கட்டி 78 ஆண்டுகள் ஆகும் தருணத்தில் கடந்த ஜனவரியில்  மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று உள்ளது. 

கருவறையின் இருபுறமும் ஐந்து படிகளில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது கொலு. கோவில் பிரகாரம் முழுக்க இரண்டு படிகளாக வடிவமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஏராளமான பொம்மைகளை அடுக்கி வைத்திருந்தது கண்கொள்ளாக் காட்சி.

கொலுவில் பெண் மற்றும் ஆணின் சிறு வயது முதல் வயது முதிர்வு வரை உள்ள பருவங்களையும், 60 வயது மணிவிழா தொடங்கி 100 வயது பூர்ணாபிஷேகம் வரை உள்ள காட்சிகளையும், வராகி அம்மனின் ஒன்பது அம்சங்களையும் உள்பட பளிச்சென்று இருந்த அத்தனை பொம்மைகளும் அங்கு வந்தவர்களை கவர்ந்து மகிழ்வித்தன.

இந்த கோவிலில் மாசித் திருவிழா, பௌர்ணமி, ஆடிப்பூரம், வரலட்சுமி நோன்பு,  வெள்ளிக்கிழமை, அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெறுகின்றன. வரலட்சுமி நோன்பின் போது முழு மஞ்சள் கயிற்றால் செய்யப்பட்ட அலங்காரம், ஆடிப்பூரத்தில் முழுக்க முழுக்க வளையல்களால் செய்யப்பட்ட அலங்காரம் என ஒவ்வொரு அலங்காரமும் அனைவரையும் வியக்க வைக்கும் அளவிலேயே இருக்கும். இந்த கோவில் முழுக்க அலங்காரங்களை செய்யும் பணியில்  கடந்த 36 வருடமாக இங்கு அர்ச்சகராக இருக்கும் பாலசுப்ரமணியம் தேர்ந்த கலைஞராக ஒவ்வொன்றையும் சுயமாக கற்றுக்கொண்டு செய்து வருவது பாராட்டுக்குரியது. 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT