தீபம்

ராவணன் திருமணம் நடைபெற்ற சிவன் கோயில்!

ஆர்.மகாதேவன்

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள
ஸ்ரீ மங்களநாதர் சுவாமி திருக்கோயில்தான் உலகின் முதல் சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இதுவே சிவபெருமானின் சொந்த ஊர், உலகிலேயே முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகத்தின் அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோயில் என பல்வேறு சிறப்புகளை இந்த ஆலயம் பெற்று விளங்குகிறது. இது தவிர, இத்தலத்தில்தான் ராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும், நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில், நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம், ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம் என பல பெருமைகள் கொண்ட திருத்தலம் இது. ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற வாக்கியம் உருவான தலம். மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம் என பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் திருக்கோயில் இதுவாகும்.

உத்தரகோசமங்கை கோயில் மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என கணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சுமார் 20 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்தல உமாமகேசுவரர் சன்னிதியில் வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். மூலவர் ஸ்ரீ மங்களநாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும், மறுமையில் முக்தியும் கிடைக்கும்.

இத்தல இறைவனை வேதவியாசர், காகபுஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். இக்கோயிலில் உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவரது வலதுபுறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடதுபுறம் பெண்கள் ஆடும் தாண்டவமும் நளினமான கலைப்படைப்பாக உள்ளது. கோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர். இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில்தான் அளித்தான் என்று, ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ நூல் கூறுகிறது.

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம் இதுவே. இக்கோயிலில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம். சொக்கலிங்கப் பெருமான், பார்வதி தேவியை பரதவர் மகளாகச் சபித்து, பின் சாப விமோசனம் தந்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே அம்பிகைக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பிரதோஷத்தன்று இக்கோயிலில் சிவனுக்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்தக் கோயில் சிவனுக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். டெல்லியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, இந்தக் கோயில் மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயன்றான். சிவபெருமானின் அருளால் அந்த முயற்சி தடைபட்டது.

காகபுஜண்ட மகரிஷிக்கு, கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் அறுபதாயிரம் பேர் இத்தலத்தில்தான் ஞான உபதேசம் பெற்றனர். இக்கோயிலில் மங்களநாதர் சன்னிதி, மங்களேசுவரி சன்னிதி, மரகதக்கல் நடராஜர் சன்னிதி, சகஸ்ரலிங்க சன்னிதி ஆகிய நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் நடராஜர் சிலை மரகத கல்லில் அமைந்திருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். அதேசமயம், இதுவே உலகின் முதல் சிவன் கோயில் என்பதால், இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள். இக்கோயில் மரகத நடராஜர் மீது சாத்திக் கொடுக்கப்படும் சந்தனத்தை வெந்நீரில் கலந்து அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர். கோயில் ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை உள்ளது.

ஆண்டுக்கு இரண்டு திருவிழாகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. சிவபெருமானால் பரத நாட்டியக் கலையை உலக மக்களுக்கு முதலில் அறிமுகம் செய்த திருத்தலம் இதுவாகும்.

ஒரு சமயம் மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், சிவபெருமானின் அடியையும் முடியையும் காண முயன்று தோற்றுப்போயினர். ஆனால், முடியைக் கண்டதாக பிரம்மன் கூறிய பொய்க்கு, ‘ஆமாம்’ என்று சாட்சி சொன்னது தாழம்பூ. இதனால்,
‘இனி நீ என்னுடைய வழிபாட்டில் இருக்க மாட்டாய்’ என்று சாபமிட்டார் சிவன். எனவே, பெரும்பாலான சிவாலயங்களில் தாழம்பூ கொண்டு ஈசனுக்கு வழிபாடு செய்யப்படுவதில்லை. ஆனால், உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இறைவனுக்கு தாழம்பூவால் அர்ச்சனை, அலங்காரம் செய்யப்படுகிறது. காரணம், இந்தக் கோயில் பிரம்மனும் பெருமாளும் அடியையும் முடியையும் தேடிய யுகத்துக்கும் முற்பட்டது என்றும், பொய் கூறியவர்களையும் மன்னித்து அருளும் மனம் படைத்தவர் இத்தல மங்களநாதர் என்றும் சொல்கிறார்கள்.

இக்கோயில் நடராஜர் சிலை மரகதத்தால் ஆனது என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே காட்சி தரும். திருவாதிரை திருநாளுக்கு முந்தைய தினம் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம், ஆராதனை செய்யப்படும். அன்றைய தினம் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பின்னர் மீண்டும் சாத்தப்படும் சந்தனக்காப்பு, அடுத்த திருவாதிரை திருநாள் வரை இருக்கும். இன்று ஒரு நாள் மட்டும் சந்தக்காப்பு இல்லாத மரகத நடராஜரை தரிசித்து அருள் பெறலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT