தீபம்

அக்னி நட்சத்திர காலத்தில் எந்தக் சுபகாரியத்தையும் தொடங்கக் கூடாதா? ஏன்?

கார்த்திகா வாசுதேவன்

மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திர காலம் தொடங்கிறது. இது இம்மாதம் இறுதி வரை நீடிக்கும் இந்த நாட்களை கத்தரி வெயில் என்றும் பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள்.

இந்துக்களின் நம்பிக்கையின் படி அக்னி நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும், மேலும் இது தமிழ்நாட்டைப் பொருத்தவரை முருக பக்தர்களால் மகத்தான வைராக்கியத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இது மே 4 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது.

அதெல்லாம் சரி தான். ஆனால், சினேகிதி ஒருவர், புதிதாக கார் வாங்கி இருக்கிறார். மே 11 ல் அவரது கணவரின் பிறந்த நாள், அன்றைக்கு புதுக்கார் டெலிவரி எடுக்கலாம் என்று தீர்மானித்திருந்தார். ஆனால், இப்போது பிளான் மாறி விட்டது. கேட்டால், ”என் அப்பா, அக்னி நட்சத்திரத்துல எதுவும் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டார், அது முடியஞ்சப்புறம் தான்ப்பா கார் எடுக்கனும் என்கிறார்.” இத்தனைக்கும் அவருக்கு இந்த நல்ல நாள், கெட்ட நாள் நம்பிக்கைகள் எல்லாம் பெரிதாகக் கிடையாது. அப்படிப்பட்டவர்களையே இந்த அக்னி நட்சத்திர காலம் யோசிக்க வைக்கிறது என்றால், காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் தான்.

அக்னி நட்சத்திரத்தின் 14 நாள் கொண்டாட்டங்கள் கிருத்திகை நட்சத்திரத்தின் மூலம் சூரியனின் வான இயக்கத்தால் குறிக்கப்படுகின்றன. மேலும் அக்னி நக்ஷத்திரத்தின் காலம் பரணி நட்சத்திரத்தின் 3-4 வது காலாண்டு மற்றும் ரோகிணி நட்சத்திரத்தின் 1 வது காலாண்டின் மூலம் சூரியனின் இயக்கத்தால் வரையறுக்கப்படுகிறது.

இந்த இந்துப் பண்டிகையானது அக்னி அம்சமாகக் கருதப்படும் கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து அதன் பெயரைப் பெற்றது, அதாவது கிருத்திகை நட்சத்திரமே தமிழில் 'அக்னி நட்சத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல சிவனின் நெருப்பு அவதாரமாகக் கருதப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீட்டுத் திருத்தலங்களான திருத்தணி, பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் இந்த அக்னி நட்சத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இவை அக்னி நட்சத்திரம் குறித்து அனைவருக்கும் தெரிந்த பொதுவான தகவல்களே! ஆனால், இந்து மதத்தைப் பொருத்தவரை திருவிழாக்காலங்கள் என்பவை புனிதமானவை தானே, பிறகு ஏன் அக்னி நட்சத்திர காலத்தில் புதிய விசயங்கள் எதையும் தொடங்கக் கூடாது, திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது என்கிறார்கள்? இதற்கு என்ன காரணம்?! அதையும்

நாம் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் தான். ஏனெனில் பெரியவர்களுக்கு ஓரளவுக்கு விஷயம் தெரியும் என்ற போதும் இந்த நவீன தலைமுறையினருக்கும் இதைப்பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

ஏனெனில், இன்றைக்குப் பெரும்பாலும் முக்கால்வாசிக் குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், அவர்களுக்கு தங்களது சுபகாரியங்களை நடத்த நீண்ட விடுமுறை தினங்களே செளகரியமாயிருக்கின்றன. அந்த நீண்ட விடுமுறை தினங்கள் அமைவதோ வெகு நிச்சயமாக அக்னி நட்சத்திர காலமான இந்த மே மாதத்தில் தான். ஆக, அந்த சமயத்தில் நீங்கள் ஒரு ரிசார்ட்டுக்கு குடும்பத்துடன் சென்று தங்கி ஓய்வெடுக்கப் போகிறீர்கள் என்றால் அது வேறு விஷயம். அப்படி இல்லாமல் புதிதாக குடும்ப விசேஷங்கள் எதையாவது நடத்தப் போகிறீர்கள் எனில் கத்தரி வெயிலின் கொடூரம் உச்சத்தில் இருக்கும் அக்னி நட்சத்திர காலத்தை தவிர்த்து விடுவது நல்லது என்கிறார்கள் ஜோதிடர்கள், அவர்கள் அப்படிச் சொல்ல சம்பிரதாய ரீதியாக காரணங்கள் எதையாவது கூற முற்படலாம். அவை தவிர, மருத்துவர்களும், நம் வீட்டுப் பெரியவர்களும் கூட இதை மறுக்கிறார்கள் எனில் அதற்கு அனுபவ ரீதியாக வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஆகவே அவர்களது கூற்றுப்படி, அகட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது,விதை விதைப்பது, மரம் வெட்டுவது , கிணறு வெட்டுவது, பூமி பூஜை செய்வது, குழந்தைகளுக்குக் காதுகுத்தி மொட்டை போடுவது இது போன்ற விஷயங்களை கட்டாயம் செய்யக் கூடாது என்கிறார்கள்.

ஜோதிட ரீதியாக இதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பிக்கப் பட்டாலும்,யதார்த்தம் நமக்கே புரியக்கூடியது தான்.

மேற்கண்ட கேள்விகளைத் தவிர மற்றொரு பிரதான ஐயம் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திர காலத்தில் சிலருக்கு வந்து விடுகிறது. அது;

அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? என்பதே!

கத்திரி வெயில் காலம் என்பது எப்போதுமே கெட்ட காலமில்லை. இந்த நாட்களில் சுப காரியங்களையும் தாராளமாகச் செய்யலாம். தீவிரமான உடலுழைப்பைக் கோரும் வீடு கட்டுதல் போன்ற கடினமான பணிகளுக்கு இது உகந்த காலம் இல்லையே தவிர, கட்டி முடித்த வீட்டிற்கு குடியேற அக்னி நட்சத்திரத்தில் எந்த தடையும் இல்லை.

அதே போல வாடகை வீடு மாறுதல், புதிய வீடு குடியேறுதல் போன்ற விஷயங்களுக்கும் எந்த தடையும் இல்லை என்கிறார்கள்.

மேலும், உபநயனம் செய்வித்தல், பெண்பார்த்தல், திருமண நிச்சயதார்த்தம், சீமந்தம் ஆகிய சுப காரியங்கள் போன்றவற்றை இந்த காலகட்டத்தில் தாராளமாக நடத்தலாம்.

அதே போல அக்னி நட்சத்திர காலத்தில் மட்டும் பல முகூர்த்த தினங்கள் வருகின்றன. எனவே திருமண சுபகாரியம் செய்ய எந்த தடையும் இல்லை. அதனால் எந்த தோஷமும் இல்லை. மேலும், தோஷங்கள் தீர்க்கும் ஹோமங்கள் செய்யவும் இந்த நாள்கள் மிகவும் உகந்தவை என்கிறார்கள் ஜோதிடர்கள்.

அக்னி நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை:

வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலத்தில் தான தர்மங்கள் செய்வது நல்லது.. குறிப்பாக பிறரின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு தெருவிலும் இலவச தண்ணீர் தொட்டி வைத்து வழங்குவது நல்லது. வீட்டின் முன் ஒரு குடத்தில் குடிநீர் வைப்பது நல்லது.

வறியவர்களுக்கு உணவு, உடை தானம் செய்வதும் புண்ணியத்தைத் தரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். கிராமப்புறங்களில் அக்னி நட்சத்திர காலத்தில் கோழிகள் தன் முட்டைகளை அடைகாக்க அனுமதிக்கப்படுவதில்லையாம். ஏனெனில் முட்டைகளை அடைகாக்க கோழிகள் அமர்ந்தால், ஏற்கனவே அதிக வெப்பநிலை நிலவும் போது, அடை காப்பதற்காக கோழிகள் முட்டைகளின் மீது அமருகையில், கோழிகள் உருவாக்கும் வெப்பம் என இரண்டு விதமான வெப்பங்கள் சேர்ந்து முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருப்பதால் கத்திரி வெயில் முடிந்த பின்னரே கோழிகள் முட்டைகளை அடைகாக்கக் கூட கிராமத்தில் அனுமதி தரப்படுகிறதாம்.

ஆக மொத்தம் எப்போதும் போல அக்னி நட்சத்திர முட்டுக்கட்டைக்கும் கூட அறிவியல் ரீதியாக இப்படியான காரணங்கள் கற்பிக்கப்படுவது நியாயமானவையே என நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது இல்லையா? அது தான் முக்கியமானது.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT