-லதா
அசுரர்கள் மற்றும் தைத்தியர்களின் குருவான பார்கவு என்ற சுக்ராச்சாரியார் சப்தரிசிகளின் ஒருவரான பிருகு முனிவருக்கும் காவியமாதாவுக்கு மகனாக பிறந்தவர்.
சுக்ராச்சாரியார் தனது பெரியப்பாவான அங்கிரச முனிவரிடம் ஞானத்தையும், அதீத கலைகளையும் கற்றறிந்தார். சுக்ராச்சாரியார் ஒன்பது கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் ( சுக்கிரன் என்றால் வெள்ளி ) அம்சம் பெற்றவர். இது அன்பு, மனத்தைக் கவர்தல், பிறப்பித்தல் போன்றவற்றைக் குறிக்கின்றன.
ஒரு முறை தேவர்கள் தங்கள் குருவை தேர்வு செய்வதர்க்காக அங்கிரச முனிவரிடம் வந்தனர். அங்கிரச முனிவர் தனது மகன் பிரகஸ்பதியை விட அதிக புத்தி சார்ந்த யுத்திகளையும், பலவித வித்தைகளையும், மாந்திரீக தாந்திரீக தன்மைகளை பெற்ற சுக்ராச்சாரியாரை நிராகரித்தார். பிரகஸ்பதியை தேவர்களின் குருவாக தேர்வு செய்தார். இதை அறிந்த சுக்ராச்சாரியார் விரக்தி அடைந்து கௌதம முனிவரிடம் மேலும் தனது பலத்தை கூட்ட பல்வித வித்தைகளைக் கற்றார்.
அப்போது ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் மூண்டது. சக்திவாய்ந்த தேவர்களின் தலைவனான இந்திரனை அசுரர்களால் வெல்ல முடியவில்லை. அசுரர்கள் சுக்ராச்சாரியாரை நாடினர். அதனால் சுக்ராச்சாரியார் சிவபெருமானை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். தவத்தின் பலன் கிடைக்காததால் மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் ஒரு மரத்தில் தன் தலையை தலைகீழாக வைத்து தொங்கும் படியாக தவம் செய்தார். இதை அறிந்த தேவர்களின் தலைவன் இந்திரன் சுக்ராச்சாரியாரின் தவத்தால் அசுரர்களின் பலம் கூடிவிடும் என்ற காரணத்தினால் தன் மகள் ஜெயந்தியை அனுப்பி சுக்ராச்சாரியாரின் தவத்தை கலைக்க செய்ய அறிவுறுத்தினார்.
ஜெயந்தி சுக்ராச்சாரியார் இருக்கும் இடத்தில் விஷக்காற்றை உருவாக்கினாள். அவ்விஷக்காற்றினால் சுக்ராச்சாரியாரின் நாசியிலும் கண்களிலும் ரத்தம் வடிந்தது. சுக்ராச்சாரியார் தன் உயிர் நிலைகுலைந்தாலும் தன் தவத்தை கைவிடவில்லை. இதை கவனித்த மகாதேவன், சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி உயிர்ப் பிழைக்க வைத்தார். சுக்ராச்சாரியாரின் தவம் பலன் அளித்தது.
சுக்ராச்சாரியார் தன் ஆசிரமத்திலிருந்து வெகு தூரத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களால் வெல்ல முடியவில்லை. அசுரர்கள் தேவர்களுக்கு பயந்து சுக்ராச்சாரியாரின் ஆசிரமத்தில் அவரது தாயார் காவியமாதாவிடம் அடைக்கலம் புகுந்தனர். தேவர்கள் அசுரர்களை விடுவிக்கும்படி காவியமாதாவிடம் எச்சரித்தனர். காவியமாதா தன் பதி விரதத்தினால் கண்ணுக்குத் தெரியாத படி அசரர்களை மறைத்தார். தேவர்கள் எங்கு தேடியும் அவர்கள் புலப்படவில்லை.
தேவர்கள் விஷ்ணு பகவானை நாடினர். விஷ்ணு பகவான் எச்சரித்தும் காவியமாதா அசுரர்களை விடுவிக்கவில்லை. விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் காவிய மாதா தலையை கொய்தார். இதனை அறிந்த பிருகு முனிவர் கோபம் கொண்டு விஷ்ணு பகவானுக்கு, நீ ஏழு தடவை பூமியில் மனிதனாக அவதரிப்பாய் என்று சாபம் வழங்கினார்.
ஒருமுறை அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடைவிடாது போர் நடந்து கொண்டிருந்தது. அசுரர்களின் வீரர்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தன. தேவர்களால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. காரணம் சுக்ராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தை( இறப்பே இல்லாத மந்திரம் ) பயன்படுத்தினார். இதனால், அசுரர்கள் இறக்காமல் போர் செய்து வந்தனர். இதை அறிந்த சிவபெருமான் சுக்ராச்சாரியாரை தன் வாயில் விழுங்கி தன் வயிற்றில் சிறை வைத்தார். பல ஆயிரக்கணக்கான வருடங்கள் சிவபெருமானின் வயிற்றிலிருந்து அவர் தப்பிக்க முயற்சித்தார். ஆனால், முடியவில்லை. சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்து சிவனின் வயிற்றுக்குள்ளேயே கடுமையாக தவம் செய்ய ஆரம்பித்தார்.
சிவபெருமான் ரிஷியின் பக்தியை கண்டதும் அவரை தன் வயிற்றில் இருந்து விடுவித்தார். இதன் காரணமாக சுக்ரா என்ற அவர், சுக்ராச்சாரியார் என்று வழங்கப்பட்டார். சிவபெருமானின் பிறப்புறுப்பில் இருந்து விந்துவாக அவதரித்ததால் சிவபெருமானின் மகன்களில் ஒருவர் ஆனார் சுக்ராச்சாரியார்.