மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயின் பெருமைகளை சொல்லி மாளுமோ? பூலோகத்தில் நிதர்சனமாக சிவபெருமான் வந்து திருவிளையாடல்கள் நடத்தி பாண்டிய மன்னனின் புதல்வி மீனாட்சியாக அவதரித்த உமையவளை திருமணம் செய்து கொண்டு அருள்பாலித்த தலமல்லவா?
இந்தக் கோயிலுக்கு வெளியே மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோயில்கள், ‘உள் ஆவரணம்’ என அழைக்கப்படுகின்றன. இதேபோல் மதுரை நகருக்கு வெளியேயும் நான்கு திசைகளிலும் நான்கு கோயில்கள் உள்ளன. இவை ‘வெளி ஆவரணம்’ என்று அழைக்கப்படுகின்றன.
மதுரைக்கு தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேரகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம் ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன. இவையே வெளி ஆவரணக் கோயில்களாகும். இதேபோல மதுரை நகருக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை ஐராவதம் வழிபட்ட ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய் கோயில் ஆகிய உள் ஆவரணக் கோயில்கள் உள்ளன.
இவற்றுள் இறைவன் தன்னைத் தானே தோற்றுவித்து வழிபட்ட சிறப்பு உடையதாகக் கருதப்படும் 'இம்மையிலும் நன்மை தருவார் கோயில்' மேலமாசி வீதியில் உள்ளது. இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதர் 'இம்மையிலும் நன்மை தருவார்' என்றழைக்கப்படுகிறார். இது மீனாட்சி சுந்தரேஸ்வார் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இங்கேயுள்ள அம்பாள் 'மத்தியபுரி அம்பாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். உத்ஸவமூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். ‘பூலோக கயிலாயம்’ என்றழைக்கப்படும் இத்தலம் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகத் திகழ்கிறது.
மதுரையை ஆண்ட மீனாட்சியை சிவபெருமான் மணந்து கொண்டார். இத்தலத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்த பின்பே மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்று கொண்டார். எந்தக் கோயிலுக்குப் போனாலும் நாம் லிங்கத்தின் முன் பகுதியையே தரிசிப்போம். ஆனால், இத்தலத்தில் சிவபெருமான் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பார்வதி தேவியுடன் மேற்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்ததால், நமக்கு லிங்கத்தின் பின்புற தரிசனமும் கிடைக்கிறது.
இத்தலத்தில் உள்ள ஒரு விசேஷமான சன்னிதி ஜுரதேவர் சன்னிதியாகும். ஜுரத்தை நீக்கியருளும் ஜூரதேவர் தனது மனைவி ஜுரசக்தியுடன் இங்கே காட்சியளிக்கிறார். காசி விஸ்வநாதர் தனது துணைவியார் விசாலாட்சி தேவியுடன் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயில் சண்டிகேஸ்வரருக்கும் ஒரு விசேஷம் இருக்கிறது. சிவனுக்கு மாலை சாத்தி வழிபட்டு, பின்பு அதே மாலையை சண்டிகேஸ்வரருக்கும் அணிவித்து தங்கள் கோரிக்கைக்காக இவரை சிவனிடம் பரிந்துரைக்க வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். அதனால் இவரை 'சிவனிடம் பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்றே அழைக்கிறார்கள்.
இக்கோயிலின் மற்றொரு விசேஷம் அம்பாள் சன்னிதி பீடத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கல்லால் ஆன ஸ்ரீ சக்ரமாகும். ஸ்ரீ சக்ரம் என்பது பொதுவாக செம்பில்தான் அமைந்திருக்கும். இங்கே கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பத்து இலைகளுடன் கூடிய 'தசதள வில்வ மரம்' இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதுதான் இங்கே தல விருட்சம். இங்கேயுள்ள அம்பாளுக்கு 'மாங்கல்ய வரப்பிரசாதினி' என்னும் திருநாமமும் உண்டு. திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதாலேயே இத்திருநாமம் ஏற்பட்டதாம்.
மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமி தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வந்து இங்கே வைத்து வழிபட்டு பிறகு அம்மண்ணைக் கொண்டு கட்டடம் கட்டத் தொடங்குகிறார்கள். அது மட்டுமல்ல, சிவபெருமானே மதுரையின் அரசராக பொறுப்பேற்குமுன் இங்கு லிங்க பூஜை செய்ததால், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பு சிவனுக்கு 'ராஜ உபசார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொண்ட பின்பே பதவி ஏற்றுக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.
ஆண்டு தோறும் சிவராத்திரியன்று ஹோமத்துடன் சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. இம்மையிலேயே நம் பாவங்களை போக்கி நம்மை ஆட்கொண்டருளும் இத்திருக்கோயிலுக்கு நாமும் ஒருமுறை சென்று ஐயனையும் அம்பாளையும் தரிசித்து வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவோம்.