சங்க இலக்கியம் பலவற்றில் ராமர், ராவணன் பற்றி நிறைய குறிப்புகள் உண்டு. சோழர்களைப் பற்றி சங்க இலக்கியத்தில் எங்கு குறிப்புகள் வந்தாலும் அந்த குறிப்புகள் ராமரின் முன்னோர்களும் சோழர்களின் முன்னோரும் ஒரே குடும்பம் தான் என்பதும் விளக்கும்.
சில இலக்கிய பாடல்கள் பின்வருமாறு:
"தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதற்வற் பயந்தோன் என்பது
நீ அறிந் திலையோ நெடுமொழி அன்றோ?’’
- சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
சிற்றன்னை சொல்லினாள் என்று மனைவியுடன் கானகம் சென்று, அவளை பிரிந்து கடுந்துயர் அடைந்த ராமனாக அவதாரம் எடுத்த திருமால் தான் பிரம்மனை படைத்தவன் என்கிறது சிலப்பதிகாரம்.
"மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே’’
என்னும் சிலப்பதிகார அடிகள், ராவணனை வென்ற ராமபிரானின் வீரத்தைப் போற்றுகிறது.
ராமர் வானர சேனையை வைத்து சேது பாலம் கட்டியதை கூறும் பாடல்:
‘‘நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு"
- சீழ்த்தலை சாத்தனார், மணிமேகலை .
"பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான்,
இலங்கைக்கே பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-
பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்"
- பழமொழி நானூறு
ராமரின் துணையினால் விபிஷனன் இலங்கையின் அரசன் ஆகினான் என்று பழமொழி நானூறு கூறுகிறது
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
- புறநானுறு, ஊன்பொதி பசுங்குடையார்
இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின், சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல என்கிறது புறம்.
இவ்விதம் சங்க இலக்கியங்களில் ராமரை பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த இலக்கியங்கள் கம்பர் ராமாயணம் எழுதும் முன்னரே எழுதப்பட்டவை. கம்பருக்கு முன்னரே ராமரை பற்றி தமிழர்கள் அறிந்து வைத்துள்ளனர்