80 டன் எடை கொண்ட பாறையை எப்படி கோபுரத்தின் மேலே ஏற்றினார்கள்?
புராண காலத்தில் 'தஞ்சன், தாரகன், தண்டகன்' என்ற மூன்று அசுரர்கள், கடும் தவம் இயற்றி, தங்களை யாரும் வெல்ல முடியாத வரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றனர். இதனால் கர்வம் கொண்டு தேவலோகத்தை வென்று, அக்கிரமத்தின் உச்சத்திற்கே அவர்கள் சென்றபோது சிவபெருமானாலேயே அதை அனுமதிக்க முடியவில்லை. அவர், திருமாலையும், காளியையும் அனுப்பி அம்மூவரையும் வதம் செய்ய வைத்தார். கெட்டவர்களாக இருந்தாலும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கியதால் தஞ்சன் பெயரில் 'தஞ்சாவூர்', தாரகன் பெயரில் 'தாராசுரம்', தண்டகன் பெயரில் 'தண்டகம்பட்டு' என மூன்று ஊர்களுக்கும் பெயர் உண்டாக ஈசன் வழி செய்தார்.
தன் சோழ அரசாட்சியை தென்கிழக்காசிய நாடுகளில் ராஜராஜ சோழன், சிவ பெருமான் மீது கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். இக்கோவில் கட்டுவதற்கான கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து வரவழைத்தார். அவற்றைச் சரியான அளவில் செதுக்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகள் ஆயின. செதுக்கிய அக்கற்களை முறையாக அடுக்குவதற்கு மேலும் 9 ஆண்டுகள். ஆக மொத்தம் 34 ஆண்டுகள் செலவழித்து இந்த அற்புதமான கோவிலை, 1010 ஆம் ஆண்டு கட்டி முடித்தார் ராஜராஜ சோழன். மூலவரான ஈசனை பிரகதீஸ்வரர் என்றும் அம்பிகையை பெரிய நாயகி என்றும் போற்றித் துதித்தார் மன்னன்.
லிங்க ரூபமாக விளங்கும் பிரகதீஸ்வரர் தற்போதைய மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் வடிக்கப்பட்டவர். இதன் உயரம் பன்னிரண்டு அடி. இந்திய கோவில்களை ஒப்பிடும்போது இதுவே மிகப் பெரியது. இங்குள்ள நந்தியும் அவ்வாறே பிரமாண்டமானது. பிரதோஷம், சிவராத்திரி முதலான சம்பிரதாயங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத் திருநாள் வெகு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த கோவிலில் வராகி அம்மன் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அடுத்தபடியாக, வராகி அம்மன் தனிசந்நதி கொண்டிருப்பது இங்கு மட்டுமே. ராஜராஜ சோழன் எந்த ஒரு பணியில் ஈடுபடு முன்னரும் இந்த வராகி அம்மனை வணங்குவதைத் தன் கடமையாகக் கொண்டவர்.
இங்கே கருவூர் சித்தருக்கு தனி சந்நதி இருக்கிறது. கோவிலை கட்டி அஷ்டபந்தனம் சாற்றும் சடங்கை மேற்கொண்டபோது, அது சரியாகப் பொருந்தாமல் விலகி விழுந்து கொண்டேயிருந்தது. அப்போது சோழனின் அழைப்பை ஏற்று இங்கு வந்த கருவூர் சித்தர், சிவன் மீது பதிகங்களை பாடி, இங்கிருந்த ஒரு துஷ்ட சக்தியை தன் எச்சிலை உமிழ்ந்து அழித்த பின்பு, சடங்கை மேற்கொள்ள, அது சரியாகப் பொருந்தியதாக வரலாறு கூறுகிறது.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறப்பே அதன் கலைநயம் மிக்க கட்டமைப்பும், விஞ்ஞானத்திற்கே சவால் விடும் கோபுர வடிவமைப்பும்தான். கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பிரம்ம மந்திரகல் மட்டும் 80 டன் எடை கொண்டது. இதை வெறும் மனித முயற்சியால் மட்டுமே மேலே கொண்டு சென்றிருக்க முடியும் என்றறியும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.
கோவில் கட்டுமானம் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக் கூறுகிறது. அதாவது கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழ் உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை 216. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழ் உயிரெழுத்துக்கள் 12. சிவலிங்க பீடம் 18 அடி. தமிழ் மெய் எழுத்துக்கள் 18 சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழில் மொத்தம் 247 எழுத்துகள்!
திருமண வரம், குழந்தை வரம் கைகூடவும், மனத்துயரங்கள் நீங்கவும், நோய்களில் இருந்து விடுபடவும், தொழில் வியாபாரங்களில் மேன்மை பெறவும், அரசு பணி கிடைக்கவும் பிரகதீஸ்வரரும், பெரிய நாயகி தேவியும் நிறைவேற்றுகின்றனர் என்பது அனுபவ நம்பிக்கை. தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியபின், பக்தர்கள் பிரகதீஸ்வரருக்கு 35 அடி நீள வேட்டியையும், அம்பாளுக்கு 9 கஜ புடவையையும் சாற்றுகின்றனர்.
நுட்பமான கட்டிடக்கலை நுணுக்கங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், 1987ம் ஆண்டு ஐ.நா சபையின் உலக பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பால் ‘பாரம்பரிய முக்கியத்தும் கொண்ட இடம் மற்றும் நினைவு சின்னம்‘ என அறிவிக்கப்பட்டது, நமக்குப் பெருமை அளிக்கும்