Gaya 
தீபம்

பாவங்களை நீக்கி முக்தி தரும் புனித 'கயா'!

ராஜமருதவேல்

பீகாரில் அமைந்துள்ள கயா வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். முற்காலத்தில் இது கயாபுரி என்றழைக்கப்பட்டது. கயா நகரமானது இந்துக்கள், பெளத்தர்கள், சமண சமயத்தவர் ஆகிய மூவருக்கும் புனித தளமாக உள்ளது. கயா நகரம் ராமாயணம், மகாபாரதம் காலத்துக்கும் முந்தைய புராதான நகரம் ஆகும். காசிக்கு இணையான ஒரு முக்தி தளம் இது.

முன்னொரு காலத்தில் கயாசுரன் என்பவன் விஷ்ணுவை நோக்கி பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். அவனுடைய கடுந்தவத்தை கண்டு தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலக்கம் அடைந்தனர். கயாசுரனுக்கு காட்சி அளித்த மகாவிஷ்ணு, அவனிடம் என்ன வரம் வேண்டும் என கேட்டார். "தன்னை யாரேனும் பார்த்தாலே அவர்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும்" என்ற வரத்தினை கயாசுரன் பெற்றான். இந்த வரத்தின் மூலம் தவறானவர்களும் முக்தி பெற முடியும் என்பதால் தேவர்கள் கவலை கொண்டனர். ஆயினும் அவன் கேட்ட வரத்தை மகாவிஷ்ணு அளித்தார்.

வரம் பெற்றாலும் கயாசுரன் தனது தவத்தை தொடர்ந்தான். இது பற்றி பிரம்ம தேவர், மகாவிஷ்ணுவிடம் தனது கவலையை தெரிவித்தார். ஒரு யாகம் செய்ய கயாசுரன் உடலை கேட்குமாறு பிரம்மரை அனுப்பினார் விஷ்ணு. கயாசுரன் யாகம் செய்ய தனது முழு உடலையும் கொடுத்தான். அவன் உடலின் மேல் யாகம் நடந்தது. கயாசுரனின் உடல் முழுவதும் பல தேவர்கள், ரிஷிகள் அமர்ந்து மிகப் பெரிய யாகத்தை நடத்தினார்கள்.

பல காலம் நடந்த இந்த யாகம் முடிந்ததும் மீண்டும் எழ முயன்றான் கயாசுரன். அவனை எந்திரிக்க விடாமல் தன் பாதத்தின் மூலம் அழுத்தி வீழ்த்தினார் மஹாவிஷ்ணு. அப்போது கயாசுரன் தான் நீண்ட காலம் உணவு உண்ணாமல் இருந்ததால் பசி எடுப்பதாக விஷ்ணுவிடம் கூறினான். அதற்கு விஷ்ணுவும் எதிர்காலத்தில் அனைவரும் மோட்சம் தேடி அங்கு வருவார்கள், அவர்கள் உனக்கு உணவு படைப்பார்கள் என்று கூறினார். கயாசுரனின் உடல் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் விழுந்தது. அவனது தலை விழுந்த இடம் கயா என்று அழைக்கப்படுகிறது. இராமாயணத்தில் இராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தசரதனுக்கு கயாவில் தான் பித்ரு தர்ப்பணம் செய்தனர்.

Gaya

கயாவில் விஷ்ணு பாத கோவில் உள்ளது. புராதன கோவில் நிலை தெரியவில்லை. தற்போது உள்ள கோவில் இந்தூர் மகாராணி அகல்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது. இங்கு விஷ்ணுவின் பாதச்சுவடு உள்ளது. கோயிலுக்குள் அழியாத ஆலமரமான அக்ஷயவர்வத் உள்ளது, அங்கு தான் பித்ரு தர்ப்பணம் செய்யப்படுகிறது. கோயிலின் உச்சியில் தோராயமாக 51 கிலோ எடையுள்ள தங்கக் கொடியும் உள்ளது.

கயாவிலிருந்து சிறிது தூரத்தில், புத்தகயா நகரம் உள்ளது. சித்தார்த்தர் ஞானம் அடைந்து புத்தராக மாறிய இடமாக புத்தகயா உள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மஹாபோதி கோயில், அதன் உயர்ந்த மஹாபோதி ஸ்தூபி மற்றும் போதி மரத்துடன் உள்ளது. புத்தர் ஞானம் அடைந்த இடத்தில் தியானம் செய்ய பௌத்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர். இந்த இடத்தின் அமைதியான சூழல், அருகில் உள்ள மடங்கள் மற்றும் தியான மையங்கள் மன அமைதியை தருகிறது. கயாவிலிருந்து சிறிது தூரத்தில் மௌரியர் காலத்தைச் சேர்ந்த குடைவரை பராபர் குகைகள் உள்ளன.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT