கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற கோயிலாகத் திகழ்ந்து வருகிறது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தரும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை வெகு பிரசித்தம். இந்த மண்டல பூஜையின் இறுதியில் நடைபெறும் மகர விளக்கு தரிசனத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு கூடுவது ஆண்டுதோறும் வழக்கம்.
ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின்போதும் முதல் ஐந்து நாட்கள் இந்தக் கோயிலின் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறுவது இந்தக் கோயிலில் கடைபிடிக்கப்படும் நடைமுறையாகும். அந்த வகையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (ஜூன் 15) மாலை 5.30 மணிக்குத் திறக்கப்படுகிறது. கோயில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை செய்யவிருக்கிறார்.
இதனையடுத்து, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். அதன் பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சன்னிதானத்தின் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். நாளை 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்றவை நடைபெறும்.
அதைத் தொடர்ந்து வரும் 20ம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைனில் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல், நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன் பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.