‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழியாகக் கருதப்பட்டாலும், சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது மனதார பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பான இனிய திருவாசகத்தினை இயற்றிய பெருமை மாணிக்கவாசகரைச் சாரும்.
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் மாணிக்கவாசகர் ஆவார். மற்ற மூன்று பேர்களும் தேவாரம் பாட, இவர் மட்டும் திருவாசகத்தையும் திருக்கோவையையும் பாடினார். பன்னிரண்டு சைவ சமயத் திருமுறைகளில், ‘திருவாசகம்’ எட்டாவதாக வைக்கப்பட்டுள்ளது. பக்திச் சுவையுடன், மனதை உருக்கும் தன்மையையும் கொண்டது இந்நூல்.
திருவாதவூரில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்து கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியவர். இவரது இயற்பெயர் திருவாதவூரர் ஆகும். தனது புலமையால் தென்னவன் பிரம்மராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். இன்னும் பல பெயர்களும் இவருக்கு உண்டு. வாழ்வின் இறுதி நோக்கம் உயர் பதவி, செல்வம், செல்வாக்கு ஆகியவைகள் இல்லையென உணர்ந்து, சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டார். அரிமார்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணி செய்து, பின்னர் சிவபெருமானால் உபதேசம் செய்யப்பட்டு, மாணிக்கவாசகர் என்கிற திருநாமம் பெற்றுப் புகழடைந்தார்.
தமிழ் கற்ற மாணவரான ஜி.யு.போப் திருவாசகத்தின் மீது ஈடுபாடு கொண்டு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மேலும், ‘உலக வரலாற்றிலேயே மாணிக்கவாசகர் ஒருவரே புலமை, உழைப்பு, நிலையாக பக்தி, துன்பம் பொறுத்தல் போன்ற நற்பண்புகளுடன் அனைவரது மனதையும் கவர்ந்தவர்’ எனக் கூறியுள்ளார்.
மாணிக்கவாசகர் அறிவியலிலும் ஆர்வம் மிக்கர் என்பதை, அவரது பாடல்களின் மூலம் அறியலாம். விஞ்ஞானம், மருத்துவம் என பலவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் முன்பே, மாணிக்கவாசகர் கூறியிருப்பது வியப்புக்குரிய செயலாகும்.
சார்லஸ் டார்வின் என்கிற விஞ்ஞானியால், ‘பரிணாம வளர்ச்சிக்கொள்கை’ உருவாக்கப்பட்டதென பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மனிதராவது வரைதான் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மாணிக்கவாசகரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிவ புராணத்தில் கூறப்பட்ட, ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி’ பாடல் மூலம் மனித வளர்ச்சியையும் தாண்டி, மண் மற்றும் விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய கண்ணுக்குப் புலப்படும், புலப்படாத தேவர்களையும் சேர்த்துள்ளார். அசையும் மற்றும் அசையாத பொருட்களும் இதில் கூறப்பட்டுள்ளன.
இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோ, உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடித்தார் எனக் கூறப்படுகிறது. மாணிக்கவாசகரோ, திருவாசகத்திலுள்ள திருவண்டப் பகுதியில்,
‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி’
எனும் பாடல் வழியே சிவபெருமானின் பெருமையுடன் வானவியல் அறிவையும் அழகாகக் கூறுகிறார்.
ஒரு கருவானது, தாயின் கருப்பையில் வளர்கையில், எப்படிப்பட்ட ஆபத்துக்களை சந்தித்து பின் அவற்றைத் தாண்டி வெளிவருகிறது என்கிற மருத்துவ விளக்கத்தை, தனது போற்றித் திரு அகவலில்,
‘யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம்இல் யோனியின் உள்வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)’
எனப் பாடியுள்ளார். அதாவது, ‘மிகப்பெரிய யானை முதல் எறும்பு வரை கருப்பையில்தான் கரு வளர முடியுமென்பதாகும்’ எத்தனை உண்மை.
இது மட்டுமல்ல, ஆண்டாள் அருளிய திருப்பாவை மாதிரி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையும் பல நூற்றாண்டு காலமாக, மார்கழி மாதத்தில் இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன. இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையுடன், திருப்பள்ளி எழுச்சி பதிகத்தின் பத்துப் பாடல்களையும் சேர்த்து மார்கழி மாதத்தில் 30 பாடல்களாகப் பாடப்படுகின்றன. ‘ஏலோர் எம்பாவாய்’ என்று முடியும் திருவெம்பாவைப் பாடல்களில், மாணிக்கவாசகர் இளம் பெண்ணாகவே மாறிவிடுவதைக் காணலாம்.
‘நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே’
என தன்னைத் தாழ்த்திக் கொண்ட தன்மையான மனப்பாங்கை மாணிக்கவாசகர் இப்பாடல் வெளிப்படுத்துகிறார். சிவபெருமான் தாயை விடக் கருணை கொண்டு அடியாரை ஆள்பவரென்பதை, ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ என்கிற பாடலில் அழகாகக் கூறுகிறார்.
‘திருவாசகத்தின் பொருளென்ன?’ என்று மாணிக்கவாசகரைக் கேட்டபோது, ‘பொருள் இவன்தான்’ என தில்லைக் கூத்தனைக் காண்பித்து, அவனோடு ஜோதியில் கலந்து மறைந்தார்.
32 ஆண்டுகளே வாழ்ந்து, ஆனி மாதம் மக நட்சத்திரத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சேர்ந்த மாணிக்கவாசகரை நினைவு கூறுவோமாக.
‘நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’
மாணிக்கவாசகரின் குரு பூஜை அனைத்து சிவாலயங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் இன்று அவரை மனதில் எண்ணி வழிபடுவோம்.