Hindu temples in Hong Kong 
தீபம்

ஹாங்காங்கில் இரண்டு இந்துக் கோயில்கள்! போய் வருவோமா?

தேனி மு.சுப்பிரமணி

ஹாங்காங்கில் இந்து சமயத்தினர் வழிபாட்டிற்கென்று மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கில் (Happy Valley) ஒன்றும், சிம் சா சுயி (Tsim Sha Tsui) நகரில் ஒன்றும் என இரண்டு இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

Happy valley hindu temple

மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு இந்துக் கோயில்:

இந்தக் கோயில் ஹாங்காங் தீவில், மகிழ்ச்சி பள்ளத்தாக்கு (Happy Valley) எனும் நகரில் உள்ளது. இக்கோயில் ஹாங்காங் இந்து சங்கம் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஹாங்காங்கிலிருக்கும் இரண்டு இந்துக் கோயில்களில், இந்தக் கோயிலேப் பெரிய கோயிலாகவும், அனைவராலும் அறியப்பட்டதாகவும் இருக்கிறது.

1928 ஆம் ஆண்டில், இந்து சமயத்தினரில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, அரசாங்கம் குறிப்பிட்ட அளவிலான நிலத்தை ஒதுக்கித் தந்தது. அவ்விடத்தில் இந்துக்கள் கோயில் கட்ட விரும்பிய நிலையில், அரசாங்கம் அதை அனுமதித்ததுடன் தனது அனுமதியையும் திருத்தம் செய்து வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று புதிய கோயில் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஹாங்காங்கிலுள்ள இந்து சமயத்தவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட பணத்தில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயில் இந்தியா, நேபாளம் மற்றும் இந்தோனேசியாவின் பாலித் தீவுப் பகுதிகளிலிருந்து வந்து குடியேறிய இந்து சமயத்தவரின் கலாச்சார மற்றும் சமூக மையமாகச் செயல்பட்டு வருகிறது.

இக்கோயிலில் பக்தி இசை அமர்வுகள் மற்றும் சமயச் சொற்பொழிவுகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும், திங்கள் மாலையிலும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அமர்வுகளைத் தொடர்ந்து இலவச சமூக உணவு வழங்கப்படுகிறது.

இக்கோயிலில் தியான காலங்கள், ஆன்மீக விரிவுரைகள், யோகா வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்து சமயச் செயல்பாடுகள் நடத்தப்பெற்று வருகின்றன. தீபாவளி, தசரா மற்றும் ஹோலி போன்ற முக்கியமான இந்து சமய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் ஞாயிறு மற்றும் சிறப்பு விழா நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு ஹாங்காங்கில் வீட்டுப் பணியாளர்களாக பணிபுரியும் சிங்களவர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இக்கோயிலில், இந்து சமய முறைப்படி பெயர் சூட்டுதல், திருமண ஒப்பந்த நிகழ்வுகள் மற்றும் திருமணச் சடங்குகள் போன்றவை நடைபெறுகின்றன. திருமணச் சட்டத்தின் கீழ் திருமணங்களைச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகவும் இருக்கிறது.

இக்கோயிலை நிர்வகிக்கும் ஹாங்காங் இந்து சங்கம், இந்து சமயத்தினரின் இறுதி சடங்குகளின் நிர்வாகம், தகனம் மற்றும் தொடர்புடைய சடங்குகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் கேப் கொலின்சன் எனுமிடத்திலுள்ள இந்து சமயத் தகனக் கூடத்தின் பொதுப் பராமரிப்பு போன்றவைகளையும் செய்து வருகிறது.

Kowloon Mandir Hindu Temple, Tsim Sha Tsui

சிம் சா சுயி இந்துக் கோயில்:

ஹாங்காங்கில் சிம் சா சுயி நகரில் ஒரு கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கவுலூன் நிலப்பரப்பில் இருப்பதனால், இதனை கவுலூன் மந்திர் இந்து கோயில் என்றும் அழைகின்றனர்.

1960 ஆம் ஆண்டில் மகாராஜ் ஹரிராம் சர்மா என்பவரால் நிறுவப்பட்டது. துர்கா, சிவன் மற்றும் பார்வதி தேவி, லட்சுமி நாராயணன் சிலைகளுடன் இருக்கும் கோயில் முன்பு அவரது வீடாக இருந்தது. அவரைத் தொடர்ந்து மகாராஜ் சுனில் சர்மா, மகாராஜ் கிரேஷ் சர்மா ஆகியோர் இக்கோயிலுக்கான அறக்கட்டளையை நிறுவி, இக்கோயிலை நிர்வகித்து வந்தனர். 2011 ஆம் ஆண்டுக்குப் பின்பு, இந்த அறக்கட்டளையின் தலைவராக வனிதா கிரேஷ் சர்மா எனும் பெண் நியமிக்கப்பட்டு, அவரது தலைமையின் கீழ் கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அவருக்கும் உதவியாக, மகாராஜ் பங்கஜ் சர்மா, மகாராஜ் ஹிதேஷ் பரத்வாஜ் ஆகியோர் இருந்து வருகின்றனர். இக்கோயிலில் முக்கியமான இந்து சமய விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்தக் கோயிலுக்கு இந்தியர்கள், நேபாளிகள், தமிழர் மற்றும் சிங்களவர் எனப் பலரும் சென்று வழிபடுகின்றனர். இக்கோயிலை இங்கிருப்பவர்கள் ‘கடவுளின் வீடு’ என்று சொல்கின்றனர்.

இந்த இரு இந்துக் கோயில்களைத் தவிர்த்து, தற்போது ஹாங்காங்கில் சில இந்து சமய வழிபாட்டு மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

Wow… Wow… செஸ்வான் நூடுல்ஸ் ரெசிபி! 

பணப்பயிர் சணலின் பயன்பாடுகள் தெரியுமா?

உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!

விவாகரத்து பெற்ற பின்னர் அதை வாபஸ் பெறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? 

Trisha's Beauty secrets: நடிகை த்ரிஷா அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT