கங்கையில் குளித்தால் நாம் செய்யும் பாவங்கள் எல்லாம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பார்கள். புனித நதியான கங்கையில் நீராடுவதற்காகவே தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருவதுண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த கங்கையில் நீராடும் அனைவருக்குமே மோட்சம் கிடைத்துவிடுமா? இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒருமுறை சிவனும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பார்வதிதேவி கேட்டார், ‘ஐயனே! கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்கும் என்று சொல்கிறார்களே? ஆனால், குளிக்கும் அனைவருமே மோட்சத்திற்கு வந்தால் மோட்சம் தாங்காதே?' என்று கேட்கிறார்.
அதற்கு சிவன் சொன்னார், ‘என்னோடு வா! வயதான பெரியவர்களாக போவோம்’ என்று அழைத்தார். கங்கை கரையை அடைந்த சிவன், ‘நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன். நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு. ஆனால், எந்த பாவமுமே செய்யாத ஒருவர்தான் என்னை வந்து காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லிவிட்டு ஆற்றில் விழுந்ததுபோல நடித்தார்.
உடனே பார்திதேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தாள். இதைக்கேட்டு ஓடி வந்தவர்களிடம் பார்வதிதேவி, ‘பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்’ என்று கூறினார். உனே ஓடிவந்த அனைவரும் தயங்கி பின்வாங்கினார்கள்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஆற்றில் குதித்து எம்பிரானை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தான். உடனே பார்வதிதேவி, ‘அப்பா! நீ பாவமே செய்யவில்லையா?' என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் சொன்னான்,'கங்கையில் இறங்கினால் நான் செய்த பாவங்கள் எல்லாம் மறைந்துவிடுமல்லவா? பிறகு என்னால் அவரை காப்பாற்ற முடியும் என்று நம்பி செய்தேன்’ என்று கூறினான்.
பார்வதிதேவியிடம் சிவபெருமான் கூறினார், ‘கங்கையில் குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை. கடமைக்கே என்றுதான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். உண்மையிலேயே நம்பிக்கையுடன் யார் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று ஸ்நானம் செய்கிறார்களோ? அவர்களே மோட்சத்தை அடைகிறார்கள்’ என்று பார்வதிதேவிக்கு விளக்கினார். இறைவன் மீது வைக்கும் பக்தியில் நம்பிக்கை இருக்க வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்று நாமும் கடமைக்கே என்று செய்வது எந்த பலனையும் அளிக்காது.