தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கணேஷ். என்ன செய்வது, எப்படிப் படிச்சாலும் புரியல, எத்தனை தடவை சொன்னாலும் புரிஞ்சுக்க முடியல, தொலைதூரத்தில தெரிகிற விளக்கோட வெளிச்சம் பக்கத்துல போகப்போக மறையிற மாதிரி ஆரம்பத்துல புரியிற மாதிரி இருக்கிற கணக்கு போகப்போக புரிய மாட்டுதே. இந்தத் தடவை பத்தாவது வேற. நிறைய மார்க் வாங்கலன்னாலும் அட்லீஸ்ட் பாஸ் பண்ணிட்டாகூட போதும். ஆனா, அதுவே முடியுமானு தெரியலையே… இப்படி பல எண்ணங்கள் வந்து அலை அலையாய் மனசுக்குள் மோத, அப்படியே படியில் சாய்ந்தவன் கண் அசந்து தூங்கிவிட்டான்.
தன் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த பழனிராஜன் டூவீலரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வர மணி இரவு ஒன்பதைக் கடந்திருந்தது. வந்தவர் உள்ளே நுழையும் முன்னே அரை வெளிச்சத்தில் படிக்கட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசைப் பார்த்தார். என்ன இவன் இப்படி இங்கேயே தூங்குகிறானே. சாப்பிட்டானா, இல்லையா என்றுகூட தெரியலையே என நினைத்தவர் அவன் பக்கத்தில் உட்கார்ந்தார்.
“கணேஷ், டேய் கணேஷ், எழுந்திருடா... என்னடா இப்படி கொசுக்கடிக்குள்ள அதுவும் படியில உட்கார்ந்து, தூங்கிட்டு இருக்க, சாப்டியா இல்லையா என்னாச்சுடா?”
அரை தூக்கத்தில் கண் விழித்த கணேஷ் கொஞ்ச நேரம் திருத்திருவென விழித்தான். “இல்லப்பா படிச்சிட்டு இருந்தேன். ரொம்ப தலை வலிச்சது. அதான் தூங்கிட்டேன்பா!”
“என்னாச்சுடா ஏன் இப்பவெல்லாம் அடிக்கடி தலைவலின்னு சொல்ற, ஏதாவது பிரச்னையா இருக்கப்போகுதுடா. நாளைக்கு போய் டாக்டரை பார்க்கலாமா?”
“இல்லப்பா... வேணாம், டாக்டர்கிட்ட போற அளவுக்கு எல்லாம் எதுவும் பிரச்னை இல்லப்பா.”
“அது எப்படிடா உனக்குத் தெரியும்?”
“இல்லப்பா… நான் டென்ஷன் ஆகிறதுனாலதான் தலை வலிக்குதுன்னு எனக்கே தெரியும். ஆனா, அதுக்கான தீர்வுதான் என்னன்னு எனக்கு தெரியல.”
“என்கிட்ட சொல்லுடா. என்னால முடிஞ்ச யோசனை நான் உனக்கு சொல்வேன்ல!”
“இல்லப்பா எத்தனையோ தடவ உங்ககிட்ட சொல்லலாம் என்றுதான் நினைச்சு இருக்கேன். ஆனா, அத சொல்லி உங்கள கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அமைதியா இருந்துட்டேன். படிக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. கண்டிப்பா படிச்சுதான் ஆகணுமா? இந்தப் படிப்பு இல்லனா வாழவே முடியாதப்பா?” கேள்வியோடு தன் அப்பாவைப் பார்த்தான் கணேஷ்.
“கணேஷ் நான் படிச்சது வெறும் பத்தாவது. எனக்கு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாவது படிச்சவங்களுக் கெல்லாம் வாத்தியார் வேலை போட்டுக் கொடுத்தது இந்த அரசாங்கம்.
ஆனா, நான் படிச்சு வெளிய வரும்போது நிலைமை மாறிடுச்சு. இப்ப பாரு நான் டிரைவராகி ராப்பகலா உழைக்கிறேன். நான்கூட அடிக்கடி நினைச்சு இருக்கேன்டா… எனக்குத்தான் அவங்களை மாதிரி வேலை கிடைக்கலையே. அப்புறம் ஏன் இந்தப் படிப்புனு. ஆனா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரு, டிரைவிங் லைசென்ஸ் வாங்குறதுக்கே பத்தாவது முடிச்சு இருக்கணும்னு சட்டம் கொண்டு வந்துட்டாங்க. எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவாத படிப்பு, என்னோட லைசென்சை தக்க வச்சுக்க உதவிச்சு.
ஆனா, இப்போ உங்க காலத்துல அந்த பத்தாம் வகுப்புங்குற இடத்துல டிகிரி வந்துருச்சு. இன்னைக்கு பத்தாவது 12வது படிச்சிருக்கேன்னு சொல்றவங்களை எல்லாம் புதுசா ஊருக்குள்ள நுழைஞ்ச ஆதிவாசிகளை பாக்குறது மாதிரி பாக்குறாங்க நம்ம ஜனங்க.
ஊருடன் கூடி வாழ்ந்து சொல்ற மாதிரி இந்த காலத்துல நீ ஒரு டிகிரியாவது படிக்கணும்டா, நீ வாங்குற டிகிரி உனக்கு ஒரு வேலையோ வருமானத்தையோ கொடுக்காமல் இருக்கலாம். ஆனா, இந்த வாழ்க்கையை நீ சரியா புரிஞ்சுக்கறதுக்கு உனக்கு உபயோகமா இருக்கும். நமக்கு முன்னாடி இருக்கிற ஒருத்தர் பேசுவதை புரிஞ்சுக்கறதுக்கே நமக்கு ஒரு அறிவு தேவைப்படுதுடா. அதுக்காகவாவது படிக்கணும்டா.”
படிப்பு எவ்வளவு முக்கியம்னு அப்பா பேசியதைக் கேட்ட கணேஷ் என்ன சொல்வது எனத் தெரியாமல் அவர் முகத்தையே பார்த்தான்.
“அதுமட்டுமில்லடா, நாம் அனுபவிக்கிற கஷ்டங்கறது உடனே மாறப்போறது கிடையாது. ஊருக்கே பெய்கிற மழையை ஒரே அண்டாவுக்குள்ள அடக்கி ஒரு குடம் தண்ணிய மட்டும் பொதுவுல கொடுத்துட்டு மொத்தமா கடத்திட்டு போறது மாதிரி இன்னைக்கு உலகம் மாறிக்கிட்டு இருக்கு. அந்த ஒரு குடம் தண்ணியதான் இன்னைக்கு ஊருசனமே பங்கு போடத் துடிச்சிட்டு இருக்கு.
நம்ம தாகம் தீரணும்னா ஒண்ணு அண்டாவ தூக்கி எறியணும். இல்ல ஒரு குடம் தண்ணியில நமக்கான தண்ணீரைப் பிடிச்சுக்கிறத் திறமையை வளர்க்கணும். இதுல நீ எதை பண்ணப் போறாங்கற முடிவை நீதான் எடுக்கணும்,” என்று தன் பேச்சை முடிச்சுட்டு உள்ளே போனார் பழனிராஜன்.
எனக்கான தன்ணியை நான் பிடிச்சுக்கலாம். ஆனா, மழை வர்ற ஒவ்வொரு வேளையும் நான் தண்ணீர் பிடிக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமல்ல எல்லோருமே தனக்கான தண்ணியை தேடி அலைஞ்சா, அண்டாவை தூக்கி எறியுற வேலையை யார் செய்யுறது?
அதனால நான் அண்டாவைத் தூக்கி எறிய முயற்சி செய்யுறேன். மனதில் தீர்க்கமாக முடிவெடுத்த கணேசின் கண்கள் புத்தகத்தைப் பார்க்க... தொலைதூர வெளிச்சம் முகத்திற்கு அருகில் பட்டு ஒளிர ஆரம்பித்தது!