Angkor Wat Temple 
கோகுலம் / Gokulam

உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் எங்குள்ளது தெரியுமா?

மணிமேகலை பெரியசாமி

இந்துமதம் உலகின் மிகப் பழமையான மதமாகக் கருதப்படுகிறது. இந்தியா மட்டுமில்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் இந்து மதமும் இந்துக் கோவில்களும் பரவிக் காணப்படுகின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இந்துக் கோவில்கள் உள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால், உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவில் எங்குள்ளது எனத் தெரியுமா? அது தமிழ்நாட்டிலும் இல்லை. இந்தியாவிலும் இல்லை.

கம்போடியாவின் 'சீம் ரீப்பின்' நகரத்தின் வடக்கே சுமார் ஐந்து மைல் தொலைவில் உலகின்  மிகப்பெரிய இந்துக் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 'அங்கோர் வாட்'  (Angkor Wat) கோவில் என்று அழைக்கப்படுகிறது.  கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் அங்கோர் வாட் கோவில் இடம்பெற்றுள்ளது. கெமீர் மொழியில் 'அங்கோர்' என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும்.

அங்கோர் வாட் கோவில் வளாகத்தினுள் 72 நினைவு சின்னங்கள் இருக்கிறதாம். இது 400 ஏக்கருக்கு மேல் பரப்பளவைக் கொண்டது. கோவிலின் மொத்த வளாகத்தைச் சுற்றி 4200 அடி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத கட்டிட வளாகம் என்று கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. 1992 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக இக்கோவில் அங்கீகரிக்கப்பட்டது.

கிபி 1113 முதல் கி.பி 1150 வரை இப்பகுதியை ஆண்ட இரண்டாம் சூர்யவர்மன் பேரரசரால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலானது, 30 ஆண்டுகள், 300,000 தொழிலாளர்கள் மற்றும் 6,000 யானைகள் பணியாற்றி கட்டியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

அங்கோர் வாட் கோவில் முதலில் பகவான் விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆனால், கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இது புத்த கோவிலாக மாறியது. இந்து மற்றும் பௌத்த மதங்களின் நம்பிக்கைகளின்படி, கடவுள்களின் இல்லமான மேரு மலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 'அங்கோர் வாட்' கோவில் நம்பப்படுகிறது. இங்குள்ள  ஐந்து கோபுரங்களும் மேரு மலையின் ஐந்து சிகரங்களாக கருதப்படுகின்றன. 

எகிப்திய பிரமிடுகளை விட அங்கோர் வாட் கோவில் கட்டங்களில் அதிக கற்கள் பயன்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். சுமார் 5 மில்லியன் முதல் 10 மில்லியன் மணற்கல் தொகுதிகள் கொண்டு கட்டப்பட்டுள்ளதாகவும், ஒரு மணல்கல்லின் அதிகபட்ச எடை 1.5 டன் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள முக்கிய தெய்வங்கள் மற்றும் உருவங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகள் கோவில் சுவர்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், பேரரசர் இரண்டாம் சூர்யவர்மன் நகரத்திற்குள் நுழைவதை சித்தரிக்கும் ஒரு சிற்பம் கூட இங்குள்ளது.

Jawaharlal Nehru Quotes: குழந்தைகள் பற்றி ஜவஹர்லால் நேரு கூறிய 15 பொன்மொழிகள்!

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT