கடப்பா மாவட்டத்திலுள்ள தாள்ளப்பாக்கம் கிராமத்தில் நாராயண சூரி-லக்கமாம்பா தம்பதிகளுக்கு வைகாசி விசாகத்தன்று பிறந்தவர் அன்னமய்யா.
அன்னமய்யாவுக்கு எட்டு வயதிருக்கும். “மாடுகளுக்குப் புல் அளித்துவா” என்றார் அண்ணி. “அரிவாள் கையில் பட்டுவிடாமல் வெட்டு” என எச்சரித்தார் தந்தை. ஆனால் புல்வெட்டுகையில் விரலில் காயம்பட்டு அண்ணியின் மீது எரிச்சலை உண்டாக்கியது.
“இதுக்குக் கூட துப்பில்லை. வயிறு நிறைய கொட்டிக்க மட்டும் தெரிகிறதா?” என்று அண்ணி திட்டுவாரே என்று நினைத்தவர், கால் போன போக்கில் நடந்தார்.
வழியில் ஒரு யாத்ரீகர் குழு பஜனை செய்துகொண்டு செல்வதைக் கண்டார். அன்னமய்யாவுக்கு இனிமையான குரல். அவர்களோடு சேர்ந்து பாடினார்.
திருப்பதிக்கு அந்தக் காலத்தில் நடந்துதான் போகவேண்டும். செருப்புக் காலோடு அன்னமய்யாவும் படியேறினார். பசியும் களைப்பும் மயக்கமாக வந்ததால் பின்தங்கிவிட்டார். அருகிலிருந்த பாறையில் படுத்து உறங்கினார். எவ்வளவு நேரம் தூங்கி னோமென்றே தெரியவில்லை. விழித்து எழுந்தால் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. பிறை நிலாவும் மேகத்துக்குள் ஒளிந்துகொண்டது. அன்னமய்யா அழத்தொடங்கினார்.
பத்மாவதி தாயார் வயது முதிர்ந்த சுமங்கலியாக அன்னமய்யா முன் வந்தார். “குழந்தாய்! இந்த வேங்கடாத்திரி சாளக்கிராமக் கற்களாலானது. இதில் காலணிகளோடு நடப்பது குற்றம்” என்றார்.
உடனே செருப்புகளைக் கழற்றினார் அன்னமய்யா. நிலவொளி பளிச்சென்று தெரிந்தது. பத்மாவதி தாயார் கொண்டு வந்த பிரசாதத்தைச் சிறுவனுக்கு ஊட்டிவிட்டு, திருமலைக்குச் செல்லும் வழியையும் காண்பித்து, வேறொரு யாத்ரீக கோஷ்டியோடு சேர்த்து விட்டு மறைந்தார்.
இந்த அனுபவத்தை ‘ஸ்ரீ வேங்கடேஸ்வர சதகம்’ என்ற நூறு பாடல்களில் கொட்டியிருக்கிறார் அன்னமய்யா.
ஏழு மலைகளைக் கடந்து, ஸ்வாமி புஷ்கரணியில் குளித்து, பெருமாளைத் தரிசித்தார். சைவமாயிருந்த அன்னமய்யா அதுமுதல் வைஷ்ணவராகி அன்ன மாச்சார்யா என்று கொண்டாடப்பட்டார். திருப்பதிக்கு வந்த உறவினர்கள் அன்னமய்யா திருமலையில் இருப்பதைக் கூற, தாயார் திருப்பதி வந்து, “இங்கே பண்ணுகிற பஜனையை வீட்டிலிருந்து நடத்து” என்று கெஞ்சி, கூத்தாடி அழைத்து வந்தார்.
பெற்றோரின் விருப்பப்படி திருமலம்மா, அக்கலம்மா என்ற இருமங்கையருக்கு மாலையிட்டார்.
தாள்ளபாக்கத்துக்கு அருகிலிருந்த ஊர் டங்குடூரு. அதை ஆண்டவர் சாளுவ நரசிம்ஹராயர். அவர் அன்னமய்யாவைப் பணிவுடன் வேண்டி தன் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருந்தார்.
அந்த நேரம் பெனுகொண்டா கோட்டையை ஆட்சி செய்யும் பொறுப்பு நரசிம்ஹராயரைத் தேடி வந்தது. அன்னமாச்சார்யா பாதம் பதித்த யோகம் என எண்ணிய நரசிம்ஹராயர், பெனுகொண்டாவுக்கும் அவரைக் கூட்டிச் சென்றார். அன்னமய்யா எப்போதும் பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்.
ஒருநாள் நரசிம்ஹராயர், “அரசனும் ஆண்டவனும் ஒன்றுதான். என் பெருமையை விளக்கும் விதமாக ஒரு பாடல் புனைந்து பாடுங்கள்” என்று கோரினார்.
“மன்னிக்கவேண்டும். மானிடரைப் பாடுவதில்லை என்ற குறிக்கோளில் செயல்படுகிறேன்” என்றார் அன்னமாச்சார்யா.
ராயர் வெகுண்டு, “சபையில் என் பேச்சை அவமதித்த இவனை இரும்புச் சங்கலியால் பிணைத்து சிறையில் தள்ளுங்கள்” எனக் கட்டளையிட்டார்.
சிறையிலும் ‘எனக்கேன் இந்த நிலை?’ என்று பாடினார் அன்னமய்யா. பாடல் முடிந்ததும் கட்டியிருந்த இரும்புச் சங்கிலிகள் தெறித்து விழுந்தன. காவலர்கள் பதைபதைத்து நரசிம்ஹராயரிடம் விரைந்து சென்று செய்தியைக் கூறினர்.
ராயரால் நம்ப முடியவில்லை. சிறைக்குச் சென்று பார்த்தார். மறுபடி சங்கிலிகளால் பிணைக்க ஆணையிட்டார், “இப்போதாவது என்னைப் பற்றிப் பாடு. விடுதலை கிடைக்கும்” என்றார்.
அன்னமாச்சார்யா, முன்பு பாடிய பாடலையே மீண்டும் பாடினார். சங்கிலிகள் அறுந்து விழவும் ராயர் அவர் காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டினார்.
“எழுந்திருங்கள். எதையும் வற்புறுத்திப் பெற முடியாது என்பதைப் புரிந்துகொண்டால் சரி” என்றவர் மீண்டும் திருப்பதி வந்து விட்டார்.