Childrens story Image credit - flipkart.com
கோகுலம் / Gokulam

சிறுவர் கதை - அன்பும் அக்கறையும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

குறிஞ்சி காட்டில் சிங்கம் ஒரு போட்டி நடத்தப் போவதாகவும், அதில் வெற்றி பெறுபவருக்கு சிறப்புப்  பரிசு  கொடுக்கப் போவதாகவும் அறிவித்தது. காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் சந்தோஷ மிகுதியில் குதித்து ஆர்பாட்டம் செய்தன.

கரடி, மான், குரங்கு, ஆமை, தவளை, சிறுத்தை, நரி, முயல் என அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகையின் வாசலில் வந்து ஆர்வமுடன் போட்டிக்காக எதிர்பார்த்து காத்திருந்தன. எல்லா விலங்குகளும் கோரஸாக, "அரசே என்ன போட்டி சொல்லுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று ஆர்வத்துடன் கூச்சலிட்டன.

சிங்கராஜா சொல்லத் தொடங்கியது. இங்கிருக்கும் ஆற்றின் கரையில் இருந்து மறுகரைக்கு நீந்திச் சென்று கரையைத் தொட்டு விட்டு, மீண்டும் இந்த கரைக்கு வந்து சேரவேண்டும். இதில் வெற்றி பெறுபவருக்கு பரிசும், ரொக்க பணமும் அளிக்கப்படும் என்றதும் முயலைத் தவிர மற்ற அனைத்து விலங்குகளும் சந்தோஷத்தில் கைத்தட்டின. சிறு விலங்கான முயல் நம்மால் முடியுமா என கவலை கொண்டது. ஆமையும், தவளையும் நாங்கள் ரெடி என்றதும் சிங்கராஜா உங்களுக்கு தண்ணீரில் நன்கு நீந்தத் தெரியும். எனவே நீங்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம். உங்களுக்கு வேறு போட்டி பின்னர் அறிவிக்கிறேன் என்றது.

விசில் அடித்து போட்டி தொடங்கியதும் எல்லா விலங்குகளும் ஆற்றில் குதித்து நீங்தத் தொடங்கியது. வேக வேகமாக சிறுத்தையும், கரடியும் கரையைத் தொட்டு திரும்பி வந்து ஆர்ப்பரித்தது. மறுகரையைத் தொட்ட விலங்குகள் யாவும் திரும்பி வந்தன.

முயலால் மட்டும் அவ்வளவு வேகமாக நீந்த முடியவில்லை. முயல் மீது பாவப்பட்ட குரங்கு முயலை நோக்கிச் சென்று, "என் முதுகில் ஏறிக்கொள். நாம் விரைவாகக் கரையை அடையலாம்" என்றது. சிறிய விலங்கான முயல் மிகவும் களைத்துப் போனதால் ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து அதனால் நீந்த முடியாமல் போனது. குரங்கிற்கு நன்றி கூறி அதன் முதுகில் ஏறிக்கொண்டது. ஒரு வழியாக முயலும் குரங்கின் உதவியுடன் கரை சேர்ந்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த சிங்க ராஜா இப்பொழுது போட்டியில் வெற்றி பெற்றது யார் என அறிவிக்கப் போகிறேன் என்று கூறியதும் சிறுத்தையும் கரடியும் துள்ளி குதித்தன.

சிங்கம் பேசத்தொடங்கியது, "சிறுத்தையே நீ நீந்தி வந்து முதலில் இக்கரையை தொட்டது உண்மைதான். ஆனால் நான் முதலில் வந்து சேர்ப்பவர்தான் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கவில்லையே! அத்துடன் யார் முதலில் வந்து சேர்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த போட்டியை வைக்கவில்லை. ஆபத்து காலத்தில் யார் மற்றவர் மீது அன்பும் அக்கறையும் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளத்தான் போட்டி வைத்தேன்!

இந்தப் போட்டியில் குரங்குதான் வென்றது! களைத்திருந்த முயலுக்கு உதவி செய்து இக்கரைக்கு அழைத்து வந்தது. அன்பையும், பரிவையும், ஒற்றுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போட்டியை நடத்தினேன். அக்கறையுடன் நடந்து கொண்ட குரங்குக்குத்தான் இப்பரிசு" என்று அறிவித்ததும் மற்ற விலங்குகள் அனைத்தும் இதை ஆமோதித்தன. சிறுத்தையும், கரடியும் சிறிது மனவருத்தம் அடைந்தாலும் குரங்கின் வெற்றியை ஆமோதித்தது. இனி நாங்கள் ஒற்றுமையுடனும், அன்புடனும், ஒருவருக்கொருவர் உதவி செய்தும் வாழ்வோம் என்று கூறின.

நீதி: குட்டீஸ் இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையும் கொண்டு ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதை தெரிந்து கொண்டீர்கள்தானே!

மனித மனதின் மகத்தான சக்தி!

அன்பும் பாசமும் ஆனந்தமே!

என்று தணியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்?

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

SCROLL FOR NEXT