"தமிழனுக்கு உழவுடன் கூடிய உறவு தொடர்ந்து வரும் ஒன்று. வேளாண்மையின் அடிப்படை தத்துவம் உழவு. இயற்கை உரம் கொண்டு பயிரிடப்படும் பயிர்கள் அனைத்தும் உடல்நலனுக்கு நல்லது. கழிவுகளை மக்கவைத்து மாற்றிய உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம்... இப்படி பல இயற்கை உரங்கள் உபயோகித்தப் பயிர்கள் அனைத்தும் உடல்நலனுக்கு நல்லது."
மாலதி தன் பெண்ணின் பள்ளியில் தமிழ் புதுவருடப் பிறப்பினை ஒட்டி நடக்கவிருக்கும் பேச்சுப் போட்டிக்கு அவள் பங்கேற்க, குறிப்புகள் எடுத்து கொடுத்து உதவி செய்துகொண்டு இருந்தாள்.
"மாலதி… இந்த சம்மர் லீவுக்கு நம்ப கிராமத்துக்குப் போலாமா? அம்மாவும் அப்பாவும் கண்டிப்பாக உன்னையும் மாலினியையும் அழைச்சிட்டு வரச் சொன்னாங்க."
கேட்ட கணவனிடம் , "என்னது? உங்க கிராமத்துக்கா? முடியாது..சேறு
சகதின்னு எப்போதும் தோட்டத்தில் வேலை பார்த்துட்டு இருப்பாங்க உங்க அம்மாவும் அப்பாவும். நாங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ரிசார்ட்க்குப் போலாம்னு இருக்கோம். நீங்களும் மாலினியும் வரணும். அங்கே புத்தாண்டு பிரமாதமா கொண்டாடுவாங்க. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு சின்ன பிள்ளைகளுக்குப் போட்டி எல்லாம் இருக்கு. நாம அங்கதான் போறோம். நீங்களும் வரேன்னுதானே சொன்னீங்க. இப்ப ஏன் வர மாட்டேன்னு அடம் பிடிக்கறீங்க?" என்று முடிவாக சொன்ன மாலதியிடம்,
"இப்பதான் கிராமம்தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயம்தான் நம் நாட்டின் சொத்து. அப்படி இப்படின்னு மாலினிக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தே?"
"அது பேச்சுப் போட்டிக்காக..." என்று இழுத்த மைதிலியின் கையைப் பிடித்த மாலினி "அம்மா, அப்பா சொல்றது சரிதான். நானும் கிராமத்துக்குப் போனதே இல்லை.. விவசாயம்னா என்னன்னு படிச்சிருக்கேனே தவிர நேரே பார்த்தது இல்லை. தாத்தா பாட்டியும் பார்த்த மாதிரி இருக்கும். ப்ளீஸ் போலாம்மா" என்று செல்லப் பெண் கெஞ்ச, வேறு வழியில்லாமல் மைதிலி சரி சொல்ல, கணவன் வெங்கட்டுக்கு ஒரே சந்தோஷம்..
"சரி நாளைக்கு நம்ப எல்லோரும் கிராமத்துக்குக் கிளம்பறோம்...புத்தாண்டை வரவேற்று சுற்றுச்சூழல் பசுமையா இருக்கற நம்ப கிராமத்து மக்களோட ஜாம் ஜாம்னு கொண்டாடறோம்."
குட்டி மாலினியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது குறித்து அவளது அப்பாவும் அம்மாவும் மகிழ்ந்தனர்.