“நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று”
என்ற திருக்குறளுக்கு இணங்க வாழ்க்கையில் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
போட்டிக்கு முன் செய்ய வேண்டியவை:
1. போட்டி நடத்துபவர் யார், எதற்காக நடத்துகிறார் என்றும், என்ன தலைப்பு என்றும் தெரிந்து கொள்ளவேண்டும்.
2. தலைப்பை தெரிந்த உடன் பதட்டப்படாமல் பத்து நிமிடங்கள் கண்களை மூடி யோசிக்க வேண்டும்.
3. வாரத்தில் ஒரு முறை கண்டிப்பாக நூலகத்துக்கு செல்ல வேண்டும். ஒரு சிறு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டு மென்றாலும், நூலகத்துக்கு சென்றால்தான் சரியாக அறிந்து கொள்ளமுடியும். நம்முடைய தனித்தன்மையை தெரிந்து கொள்ளவும், அதை வெளிப்படுத்தும் தகுதியை வளர்த்து கொள்ளவும் முக்கியமானது நூலகம்.
4. தலைப்பு சம்பந்தமான 5 மேற்கோள்களையாவது தெரிந்து கொள்ளவும். (உ.ம்) கலப்படத்தை உணவில் சேர்க்காதீர்கள் திருமணத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என்று பேசுவது
5. பிற மேடைகளிலும், பிற பேச்சு போட்டிகளிலும் மற்றவர்கள் பேசுவதை நன்கு கவனிக்க வேண்டும்.
6. பேச்சு போட்டிக்கு செல்வதற்கு முன் திரும்ப திரும்ப பேசி பார்த்து நல்ல பயிற்சியுடன் சென்றால் நிச்சயமாக வெற்றி அடைய முடியும்.
கவனிக்க வேண்டியவை:
பேசும்மொழி நடை
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழிக்கு ஏற்ப அனைவரையும் கவரும் வகையிலான மொழி நடையில் பேச, மற்ற பேச்சாளர்கள் பேசும் பொழுது அவர்களை உற்று கவனித்து அதேபோல் வீட்டிலும், நண்பர்களிடமும், நிறைய பேசி பழகினால் நம் பேச்சின் மொழிநடை பலரையும் கவரும் வகையில் மெருகேறும்.
பேச்சில் உயிர் இருக்க வேண்டும்
அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி பேச்சை ஆரம்பிக்க வேண்டும். உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தி ஒவ்வொரு சொல்லிற்கும் உரிய ஏற்ற இறக்கத்தை கொடுத்து பார்வையாளர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் பேச்சு இருக்க வேண்டும். உணர்வுடன் பேசுவது தான் நம் பேச்சிற்கு உயிரை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. பேச்சை தொடங்கும் போது கவித்துவமான முன்னுரையுடன் வணக்கத்தை சொல்லி தொடங்குவது அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும்.
கருத்து நிறைந்த பேச்சு
நம் கருத்தினை வெல்லக் கூடிய மற்றொரு கருத்து இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே அதை பேச வேண்டும். நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் கேட்பவருக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிப்பதாக இருக்க வேண்டும்.சொன்னதை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. பேசுவது நம் கருத்தாகவே இருக்க வேண்டும். பிறர் ஏற்கனவே பேசிய அல்லது எழுதிய வற்றை எழுதி சென்று அப்படியே ஒப்புவிக்க கூடாது. பிறர் சொல்லும் கருத்தை பேசுவோம் என்றால் அதற்கு உரிமை உள்ளவர்களின் பெயரை குறிப்பிட வேண்டும். இது நம்மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்யும்.
ஆள்பாதி, ஆடைபாதி என்ற பழமொழியைப் போல நம்முடைய பேச்சில் மொழி நடையும், மூலக் கருத்தும் சரிக்கு சரி கலந்து இருக்க வேண்டும்.
கடைசியாக நம் பேச்சை கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றி சொல்லி விடை பெற வேண்டும்.