குதிரைகள்... 
கோகுலம் / Gokulam

குதிரைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

குதிரை சவாரி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஒன்றாகும். குதிரைகள் மனிதர்களுடன் நட்புடன் பழக கூடியவை.

குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும். வட அமெரிக்கா குதிரையின் பிறப்பிடமாகும். குதிரையில் சுமார் 400 இனங்கள் உள்ளன.

குதிரை குட்டிகள் பிறந்தவுடன் எழுந்து ஓடும் அளவிற்கு சக்திகளை கொண்டுள்ளன. மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் குதிரை வளர்ப்பில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

அரசர்கள் காலத்தில் குதிரைப்படை என்பது இன்றிமையாத ஒன்றாக இருந்து வந்தது. குதிரைகளைக் கொண்டு பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

குதிரைகள் தலையை திருப்பாமலே எந்த பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் அவற்றால் உணர முடியும்.

குதிரைகளால் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க முடியும். குதிரைகளின் கால்களில் உள்ள சிறப்பான அமைப்பின் காரணமாக அவற்றால் விழாமல் நின்று கொண்டே தூங்க முடியும்.

குதிரைகள் கி.மு.4000 ‌ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. குதிரைகள் வண்டி இழுக்கவும், குதிரைப் பந்தயங்கள், குதிரையேற்றம், போலோ போன்ற விளையாட்டுகளிலும், காவல் படையிலும், போர்க்காலங்களில் அலங்கார அணிவகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றின் சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பல் போன்றவை பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன. ஒரு வயதிற்கும் குறைவான குதிரைகள் ஃபோல் என்று அழைக்கப்படுகின்றன.

நவீன ரக குதிரைகள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு 56 வது வயதில் உயிரிழந்த சுகர் பஃப் எனும் குதிரை உலகில் வயதான குதிரையாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. வளர்க்கப்படும் குதிரைகளின் குளம்புகள் தேய்ந்து விடாமல் இருக்க இரும்பாலான லாடங்களை பொருத்துவார்கள். குதிரைகள் வளரும்போது குளம்புகளும் வளர்வதால் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை லாடங்களையும் மாற்றும் பழக்கம் உள்ளது.

குதிரைகளின் வயது அதன் பற்கள் மூலம் கணக்கிடப் படுகிறது.

நன்கு வளர்ந்த ஒரு 450 கிலோ எடையுள்ள குதிரை ஒரு நாளில் 7 முதல் 11 கிலோ வரை உணவை உட்கொள்ளும். 45 லிட்டர் வரை நீர் அருந்தும். குதிரைகளால் வாய் வழியாக சுவாசிக்கவோ, வாந்தி எடுக்கவோ இயலாது. குதிரைகளின் இதயம் நிமிடத்திற்கு 32 முதல் 36 முறை துடிக்கிறது. 

குதிரைகளின் கண்கள் எளிதில் பாக்டீரியாக்களால் பாதிப்புக்கு உண்டாகின்றன. அவற்றை முறையாக பராமரிக்கவில்லை என்றால் குருட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. குதிரைகளை கட்டி வைக்கும் இடத்திற்கு குதிரை கொட்டில் அல்லது குதிரைக் கொட்டடி எனப் பெயர். அயம்,உண்ணி, கலிமா, கிள்ளை, கோடகம், பரி, புரவி, பாடலம்‌ என குதிரைக்கு பல பெயர்கள் உண்டு.

குதிரையின் கண்ணுக்கு போடும் மறைப்பு பட்டையானது தோலால் ஆனது. கடிவாளம், லகான் என்பவை வாய்ப்பகுதியில் போடப்படும் கயிறாகும்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT