Story... 
கோகுலம் / Gokulam

ரஷ்ய நாட்டுக்கதை - இரு கிழவிகள்!

ஆர்.வி.பதி

ஷ்ய நாட்டில் கிராமம் ஒன்றில் இரண்டு கிழவிகள் வாழ்ந்து வந்தார்கள். இரண்டு கிழவிகளுக்கு இருவிதமான குணங்கள் இருந்தன. ஒரு கிழவி மிகவும் புத்திசாலி. ஆனால் கெட்ட எண்ணம் படைத்தவள். மற்றொரு கிழவியோ ஏதும் அறியாத முட்டாள் கிழவி. நல்ல எண்ணம் கொண்டவள்.

இரு கிழவிகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். அந்த வீட்டில் ஒரு கம்பளிப் போர்வை, ஒரு மாடு, சிறிது நிலம் இருந்தன. அவற்றை இருவரும் பயன்படுத்தி வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம் புத்தசாலி கிழவியின் மனதில் கெட்ட எண்ணம் ஒன்று உருவானது. இருப்பவற்றைத் தான் மட்டுமே அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமே அது. அதனால் மனதில் திட்டம் ஒன்றை உருவாக்கி அதை முட்டாள் கிழவியிடம் தெரிவித்தாள்.

“கிழவியே. நம்மிடம் இருக்கும் கம்பளிப் போர்வையை பகல் முழுவதும் நீ உபயோகித்துக் கொள். இரவானதும் அதை நான் உபயோகிக்கிறேன். நம்மிடமுள்ள மாட்டின் முன்பகுதி முழுவதும் உனக்குச் சொந்தம். மாட்டின் பின்பகுதி எனக்குச் சொந்தம்”

நல்ல எண்ணம் கொண்ட முட்டாள் கிழவி இதற்கு சம்மதித்தாள்.

பகலில் கம்பளிப் போர்வைக்கு வேலை இல்லை. இரவானதும் குளிர் எடுக்க ஆரம்பித்தது. ஒப்பந்தப்படி புத்திசாலிக் கிழவி தினமும் இரவில் கம்பளிப் போர்வையை போர்த்திக் கொண்டு சுகமாக தூங்க ஆரம்பித்தாள். முட்டாள் கிழவி குளிரில் நடுங்கியபடியே தூங்க இயலாது தவித்தாள். முட்டாள் கிழவி தினமும் உழைத்து சம்பாதித்து மாட்டிற்கு நல்ல தீவனங்கள் வாங்கித் தந்தாள். மாடும் நிறைய பால் கறக்க ஆரம்பித்தது. சூழ்ச்சியின் விளைவாக புத்திசாலிக் கிழவி தினமும் மாட்டுப்பாலை கறந்து குடித்து வந்தாள்.

சில மாதங்கள் சென்றதும் புத்திசாலிக் கிழவி முட்டாள் கிழவியிடம் சாமர்த்தியமாக பேசினாள்.

“கிழவியே. நம்மிடம் இருக்கும் நிலத்தின் மேற்பகுதி எனக்குச் சொந்தம். நிலத்தின் அடிப்பகுதி உனக்குச் சொந்தம். இதற்கு சம்மதிக்கிறாயா ?”

முட்டாள் கிழவியும் இதற்கு சம்மதித்தாள்.

முட்டாள் கிழவி பாடுபட்டு வயலில் வேலைகளைச் செய்தாள். நிலத்தின் மேற்பகுதியில் விளைந்த சோளத்தையும் நெல்லையும் புத்திசாலிக்கிழவி எந்தவித சிரமமும் இன்றி அனுபவிக்கத் தொடங்கினாள்.

முட்டாள் கிழவி உணவின்றி வருந்தினாள். அவளது உடல் மிகவும் இளைத்துப் போயிற்று. புத்திசாலிக் கிழவியில் பேராசையினாலும் சூழ்ச்சியினாலும் முட்டாள் கிழவிக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது.

ஒருநாள் முட்டாள் கிழவி அந்த ஊரில் இருந்த ஒரு நல்ல பண்பான மனிதரிடம் சென்று சாப்பிட சிறிது உணவை கேட்டாள்.

“கிழவியே. உனக்குத்தான் கொஞ்சம் நிலமும் மாடும் இருக்கிறதே. ஏன் நீ பிச்சை எடுக்கிறாய் ?”

முட்டாள் கிழவி தன்னுடன் வசிக்கும் கிழவியுடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் பற்றி அந்த நல்ல மனிதரிடம் சொன்னள்.

“கிழவியே. உன்னுடன் வசிக்கும் அந்த கிழவி பொல்லாதவள். நான் சொல்கிறபடி செய். அந்த கிழவி உன்னிடம் பயந்து நடப்பாள்”

“சொல்லுங்கள் நல்லவரே. நீங்கள் சொல்வது போல நான் செய்கிறேன்”

“கிழவியே. பகலில் கம்பளி உனக்குச் சொந்தமல்லவா ? அந்த கம்பளியை இரவில் வஞ்சகக் கிழவியிடம் ஒப்படைக்கும் முன்னர் அதை நன்றாக நீரில் நனைத்துவிட்டு பின்னர் கொடு. மாட்டின் முன்பகுதி உனக்குச் சொந்தமல்லவா ? மாட்டிற்கு உணவைத் தராதே. மேலும் அந்த கிழவி பால் கறக்கும் வேளையில் முன்பக்கமாக அந்த மாட்டை சற்று அடி. பயிர் கொஞ்சம் வளர்ந்ததும் அதை பிடுங்கி எறி”

கிழவியும் இவ்வாறே செய்வதாகச் சொல்லிவிட்டு அந்த மனிதர் தந்த உணவை சாப்பிட்டுவிட்டு புறப்பட்டாள்.

ஒருநாள் மாலை அந்த கம்பளியை நன்றாக நீரில் நனைத்து ஊறவைத்து இரவானதும் அதை புத்திசாலிக் கிழவியிடம் ஒப்படைத்தாள். நீரில் நனைக்கப்பட்ட கம்பளியை போர்த்திக்கொள்ள இயலாமல் புத்திசாலிக்கிழவி குளிரில் நடுங்கினாள். அடுத்ததாக அன்றிலிருந்து மாட்டிற்கு உணவு ஏதும் தராமல் விட்டுவிட்டாள். அன்று மாலை பால் கறக்க புத்திசாலிக் கிழவி முற்படும் போது முட்டாள் கிழவி மாட்டின் முன் பக்கம் மெல்ல அடித்தாள். மாடு கோபத்தில் பின்புறம் எட்டி உதைக்க புத்திசாலிக்கிழவி கீழே விழுந்தாள். பயிர்கள் வளர்ந்ததும் அதை முட்டாள் கிழவி பிடுங்கி எறிந்து விட்டாள்.

உணவின்றி புத்திசாலிக் கிழவி பட்டினி கிடக்க நேரிட்டது. தான் செய்த தவறுகள் அவளுக்கு புரிய ஆரம்பித்தன. தனது தவறுகளுக்காக முட்டாள் கிழவியிடம் மன்னிப்பு கேட்டாள் புத்திசாலிக் கிழவி. அன்று முதல் இருவரும் கிடைப்பதை சரிசமமாக பங்கிட்டு சந்தோஷமாக வாழ்ந்து வர ஆரம்பித்தார்கள்.

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

SCROLL FOR NEXT