ஓவியம்: பிரபுராம் 
கோகுலம் / Gokulam

சிறுகதை - சமூக அக்கறையுடன் சிந்து கொண்டாடிய தீபாவளி!

மஞ்சுளா சுவாமிநாதன்

சிந்து வீட்டில் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்துக் கொண்டிருந்தாள். தீபாவளிக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் அவர்களை ஒரு இடத்தில் உட்காரவைத்து வகுப்பு எடுப்பதே சிரமமாக இருந்தது சிந்துவுக்கு. அன்று மாலை வகுப்பில் வழக்கத்தைவிட சலசலப்பு அதிகமாக இருந்தது. அதை கண்டும் காணாமலும் வகுப்பு எடுக்க முயன்றவளை 'டமார்' என்ற கேப் துப்பாக்கி சத்தம் பதறவைத்தது. அந்த சத்தத்தை தொடர்ந்து நான்கு குட்டீஸ் தத்தம் துப்பாக்கிகளை எடுத்து சுடத்தொடங்கினர். இதில் அவள் அண்ணன் குழந்தைகள் வேறு இருக்க, தலையில் கையை வைத்தபடி அந்த மழலைகளின் திருடன் போலீஸ் விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தாள் சிந்து.

 “என்னடா கேப் ரெட் கலர்ல ரவுண்டா இருக்குமே அது இல்ல?”

 “அய்யோ மிஸ், அது ஓல்ட் கேப், இப்போ கன்ல சிக்ஸ் புல்லட்ஸ் இருக்குமே. அந்த மாதிரி ரவுண்டா சிக்ஸ் கேப் பெல்லெட்ஸ் கிடைக்குது. நீங்க சுட்டுப் பாருங்களேன்,” என்று அந்த கூட்டத்திலேயே அதிகம் விஷயம் தெரிந்த குட்டி பையன் அணில் சொன்னான். பாடத்திற்கு இடைவேளை விட்டு சிந்துவும் சுட்டுப் பார்த்தாள்.

 வெளியில் அவள் அண்ணன் ராஜேஷின் குரல் சண்டை போடும் தொனியில் உரக்கக் கேட்டது. ராஜேஷ் சமீப காலமாக அவர்கள் குடியிருப்பின் செயலாளராக இருப்பதால் இது போன்ற சண்டைகள் இப்போது. அவளுக்கு பழக்கமாகி இருந்தது. இருந்தும் அன்று சத்தம் சற்று அதிகமாக இருந்ததால் அவள் பதட்டம் அடைந்தாள். சரி, தீபாவளி பத்தி எல்லாரும் அஞ்சு லைன் எழுதுங்க, நான் வந்து படிக்கறேன் என்று கூறிவிட்டு கூடத்திற்கு விரைந்தாள்.

எதிர் வீட்டு ப்ரித்வியும் அண்ணனும் வாக்குவாதத்தில்

ஈடுபட்டிருந்தனர். “என்னடா ஆச்சு? என்ன சண்டை… உள்ள பசங்க இருக்காங்க…” என்றபடி அங்கு விரைந்தாள் சிந்து.

“சிந்து, சார் சொல்றத கேளு… தீபாவளி அன்னிக்கு நம்ம பாட்டாசு வெடிக்கக் கூடாதாம். தெரு நாய் பூனையெல்லாம் பயப்படுமாம்… அனிமல் ஆக்டிவிஸ்டு சொல்றாரு. ஏற்கனவே பாட்டாசு வெடிக்க டைம் லிமிட் வெச்சு கவர்ன்மென்ட் ரூல் போட்டிருக்கு… இதுல இந்த ஆக்டிவிஸ்டு கும்பல் வேற போராட்டம் பண்ண போறாங்களாம்….”

“இன்னும் போராட்டம் பண்ணல, அமைதியா ஒவ்வொரு அசோசியேஷனா போய் கோரிக்கை விடறோம். நீங்க கேக்கலன்னா போராட்டம் பண்ணுவோம். பக்கத்துல இருக்குற கார்பரேஷன் கிரவுண்டுல வெடிங்க, ரோடுல வேண்டாமுன்னுதான் சொல்றோம்…”

“எங்க குழந்தைங்க பட்டாசு வெடிக்கிறத தடுக்க நீங்க யாரு? இஸ்ரேல் ஹமாஸ் சண்டைய நிறுத்து, ரஷ்யா உக்ரைன் சண்டைய நிறுத்து, ஆபீஸுக்கு டெய்லி நடந்து போய் பொல்யூஷன கண்ட்ரோல் பண்ணுன்னு வந்துட்டானுங்க.  சோஷியல் மீடியாவுல கண்டத பார்துட்டு, சுற்றுச்சூழல பாதுகாக்கறேன், அனிமல்ஸ காப்பாத்தறேன்னு கொடி பிடிச்சுகிட்டு … செக்யூலரிஸம் பத்தி என்கிட்ட பேசற?” என்று ஆவேசமாக சீறினான் ராஜேஷ்.

“ஓ… நீ எப்போ இவ்வளவு பேசறியோ, நானும் வேற லெவலுக்கு போவேன்.
6 - 7 மணிக்கு மேல நம்ம குடியிருப்புல பட்டாசு வெடிக்கறத பார்த்தேன், போலீஸ்கிட்ட கம்பிளைன் பண்ணி உன்ன உள்ளத் தள்ளிடுவேன்,” என்று பதிலுக்கு மிரட்டிவிட்டு சென்றான் ப்ரித்வி.

“ராஜேஷ், டேக் இட் ஈஸி… எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆற?”

“இல்லடி, இவன் பிரச்னை இல்லை. இங்க நடக்குற ஒவ்வொரு விஷயமும் பார்க்கும்போது பயமா இருக்கு… நம்ம பண்டிகைகளை கொண்டாடகூட கோர்ட் சொல்றத கேக்கணுமா?”

“இத மேலோட்டமா பார்க்காத ராஜேஷ். சுப்ரீம் கோர்ட்ல ஏன் இப்படி சொல்றாங்கன்னு நிதானமா யோசிச்சு பாரு… பசங்க உள்ள வெயிட் பண்றாங்க,” என்று அவனை சமாதானப்படுத்திவிட்டு குழந்தைகளை காணச் சென்றாள் சிந்து.

“ஐ லவ் தீபாவளி, இட் இஸ் தி பெஸ்ட் பெஸ்டிவல்!”

“புது ட்ரெஸ் போட்டு, பட்டாசு வெடிச்சு என் குடும்பத்தோட தீபாவளி கொண்டாட பிடிக்கும். “

“நிறையா ஸ்வீட் சாப்பிடலாம்” என்று தீபாவளி பற்றி ஒவ்வொரு குழந்தையும் அழகாக, ஆசையாக, எழுதி இருந்ததைப் பார்த்து சந்தோஷம் அடைந்தாள் சிந்து. அன்று வகுப்பை சீக்கிரம் முடித்து விட்டு பட்டாசு குறித்த செய்திகளை படிக்க ஆரம்பித்தாள்.

உச்சநீதி மன்றம் சுற்றுச்சூழலை மற்றும் விலங்கினங்களை  மனதில் வைத்துக்கொண்டு பசுமைப் பட்டாசுகளை வாங்கி குறிப்பிட்ட நேரங்களில் வெடிக்க உத்தரவு போட்டுள்ளது. பசுமை பட்டாசு என்பது சுவாசக் கோளாறுகள் விளைவிக்கக் கூடிய அமிலங்களைத் தவிர்த்து செய்யப்படுகிற பட்டாசுகள். பட்டாசு வாங்கும்பொழுது, அரசால் அங்கீரிக்கப்பட்ட தரமான பட்டாசு தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்க வேண்டும், அதே போல பட்டாசு டப்பாவில் பசுமைப் பட்டாசு என்ற முத்திரை அல்லது  க்யூ ஆர் கோட் போட்டு இருப்பதை பார்த்து உறுதி செய்துவிட்டு வாங்க வேண்டும். அதே சமயம், பட்டாசு விற்பனையாளர்கள் பசுமை பட்டாசுகள் அல்லாத பட்டாசுகளை விற்காமல் இருப்பதை அந்த பகுதி காவலர்கள்தான் கண்காணிக்க வேண்டும் என்று அறிந்துகொண்டாள்.

உடனே  சென்று வீட்டில் அண்ணன் வாங்கியிருந்த பட்டாசுகளை எடுத்துப் பார்த்தாள். ஒரு சில வெடிகளைத் தவிர மற்ற எல்லாவற்றின் மீதும் பசுமைப் பட்டாசு முத்திரை இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தாள். இந்தியா போன்ற ஜனத் தொகை அதிகம் உள்ள நாட்டில் இந்த அளவிற்கு அரசால் பசுமைப் பட்டாசுகள் விற்பனையை உறுதி செய்ய முடிந்திருந்ததை எண்ணி பெருமைக்கொண்டாள். அந்த பையில் இருந்த பசுமை முத்திரை அல்லாத பாட்டாசுகளை உடனே அப்புறப்படுத்தினாள்.

தீபாவளி பட்டாசுகள் குறித்து அவள் படித்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவளுக்கு தெளிவை கொடுத்திருந்தன. தன்னால் இயன்ற உதவிகளை  சுற்றுச்சூழலை பாதுகாக்க செய்ய வேண்டும் என்று கருதி தீபாவளி அன்று இரண்டு வாளி தண்ணீர் மற்றும் தென்னந்தொடப்பத்தொடு தெருவில் காத்திருந்தாள் சிந்து. வாளியில் கம்பி மத்தாப்பை போட குழந்தைகளை அறிவுறுத்தினாள். பட்டாசு குப்பைகளை உடனுக்குடன் பெருக்கி அப்புறப் படுத்தினாள். இதனால் அந்த வெடி மருந்துகளை நக்கி அல்லது முகர்ந்து நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்க முற்பட்டாள்.  அவளது செயல்களை கவனித்த ராஜேஷ், ப்ரித்வி மற்றும் பலரும் அவளோடு சேர்ந்து அந்த பணியை செய்யத் தொடங்கினர்.

தீபாவளி பண்டிகை, பட்டாசைத் தாண்டி, இனிப்புகளைத் தாண்டி சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் பண்டிகை என்று அந்த தெருவில் வாழ்ந்த மக்கள் உணர்ந்தனர்.

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT