ஒரு ஊரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய குதிரைப் பண்ணை வைத்திருந்தார். அங்குள்ள குதிரைகளுக்கு தினமும் பயிற்சி கொடுத்து பல்வேறு ஊர்களில் நடக்கும்.
போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். தினமும் சத்தான உணவும், பயிற்சியும் கொடுத்து காலை, மாலை ஓட விடுவார்கள்.
அதில் ஒரு குதிரை மிகவும் கம்பீரமாகவும், நல்ல பயிற்சியும் பெற்று போட்டிகளில் முதல் பரிசைப் பெறும். அதனால் அக்குதிரைக்கு நல்ல பெயரும், மதிப்பும் பெற்றது.
ஒருநாள் காலை பயிற்சியாளர்கள் அக்குதிரையை பயிற்சிக்கு அழைத்து செல்ல வந்தபோது, அக்குதிரை வராமல் படுத்துக் கொண்டே அடம் பிடித்தது.
சரி. என அதனை விட்டு விட்டு மற்ற குதிரைகளுடன் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்கள். மறுநாளும், அக்குதிரை முரண்டு பிடித்தது. தான் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெறுகிறோம் என்ற தலைக்கனம் வந்துவிட்டது. பயிற்சியாளர்களும், இக்குதிரை போட்டிக்கு சென்றால் ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கையில் விட்டுவிட்டனர்.
மறுநாள், போட்டிக்கு மற்ற குதிரைகளுடன் இதுவும் சென்றது. ஆனால் முன்பு போல வேகமாக ஓட முடியவில்லை. போட்டியில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து வந்த ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியே கிடைத்தது. இதனால் அக்குதிரையின் மதிப்பு குறைந்தது.
இதனால் செல்வந்தர் அக்குதிரையை விற்ற முடிவு செய்தார்.
இதனால் அக்குதிரை வருத்தப்பட்டு, பக்கத்து குதிரையிடம் "நண்பா. உங்களை விட்டு நான் பிரியப் போகிறேன்" என்னால் என்ன செய்ய முடியும் எனக் கூறியது.
உடனே, அடுத்த குதிரை கவலைப்படாதே! நீ தினமும் பயிற்சி செய்ததால் வெற்றி பெற்றாய். திடீரென பயிற்சிக்கு வராமல் முரண்டு பிடித்ததால் பயிற்சி இல்லாமல் தோல்வி கிடைத்தது.
உன் தோல்விக்கு காரணம் பயிற்சியைக் கைவிட்டதுதான்.
இப்போதும் ஒன்றும் பிரச்னை இல்லை. நாளை முதல் நீ பயிற்சி செய்ய ஆரம்பித்தால் உன் திறமையைப் பார்த்து முதலாளி விற்கமாட்டார்.
சரி, என்னுடன் பயிற்சிக்கு வா, என்றது.
"நீ சொல்வது சரிதான் பயிற்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது. முயற்சியும், பயிற்சியும் இல்லாமல் இருந்தது என் தவறுதான் என கூறியது. மறுநாள் முதல் பயிற்சிக்கு சென்று மறுபடியும் முதல் இடத்தைப் பிடித்தது.
குழந்தைகளே படிப்பில், விளையாட்டில் முயற்சியுடன் பயிற்சியும் செய்தால் வெற்றி பெறலாம். சரிதானே!