சாரதா தேவிக்கு 5வது வயதில் ஸ்ரீராமகிருஷ்ணருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் பிரம்மசரிய சபதம் எடுத்ததால் திருமணம் நடக்கவே இல்லை. சாரதா தேவிக்கு 16 வயதாக இருந்தபோது அவர் தனது கணவருடன் வங்காளத்தின் தக்ஷினேஷ்வரில் சேர்ந்தார். அங்கு ஸ்ரீராமகிருஷணர் கோவில் பூசாரியாக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ராமகிருஷ்ணர் தமது இளம் மனைவி சாரதா தேவியை பிரபஞ்சத்தின் தெய்வீக அன்னையின் அவதாரம் என்று அறிவித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் சாதாரணமாகத் திருமணம் செய்து கொண்டிருப்பவர்களைப் போல தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. ஆகவே திருமணமான அவர், மற்றவர்களை போல ஏன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு தமது மனைவியுடன் வாழ வில்லை என்ற கேள்வியை ஓர் அன்பர் ஸ்ரீராம கிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு ஸ்ரீராம கிருஷ்ணர் பின்வருமாறு ஒரு கதையை சொன்னார்.
ஒரு நாள் விநாயகப்பெருமான் ஒரு பூனையோடு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவருடைய கை நகம் பூனையின் முகத்தில் பட்டு ஒரு சிறிய கீறலை உண்டாக்கியது.
சிறிது நேரத்திற்கு பிறகு விநாயகர் வீட்டிற்கு வந்தார் அப்போது தமது தாயாகிய பார்வதி தேவியின் கன்னத்தில் விரலால் கீறிய அடையாளம் ஒன்று இருப்பதைப் பார்த்தார். அதை பார்த்ததும் உலகின் தாயாகிய அம்பிகைக்கு முகத்தில் கீறல் உண்டாக்கி ஊறு விளைவித்தவர் யாராக இருக்கக் கூடும்? என்ற வியப்பு அவருக்கு ஏற்ப்பட்டது. ஆகவே அவர் “தாயே! உன் கன்னத்தில் இந்த வடு எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டார்.
ஜகன்மாதா பதில் சொன்னாள்: “குழந்தாய்! இது நீ செய்த காரியம்தான். உன் கை நகத்தின் கீறலால் ஏற்பட்ட வடுதான் இது. தேவியின் பதிலைக் கேட்ட விநாயகபெருமான் திடுக்கிட்டு போனார். வியப்பு மேலிட அவர் “எப்படியம்மா! உன்னை நான் ஒரு போதும் கீறியதாக எனக்கு நினைவு இல்லையே?” என்று கேட்டார். அதற்கு பார்வதி தேவி.
“குழந்தாய்! இன்று காலையில் நீ ஒரு பூனையை கீறியதை மறந்து விட்டாயா?” என்றார். விநாயகரும் ஆமாம் கீறினேன் ஆனால் உன் கன்னத்தில் வடு எப்படி ஏற்பட்டது?
குழந்தாய்! இந்த உலகில் என்னைத் தவிர ஒன்றுமே கிடையாது. உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன். நானே உலகமாக ஆகியிருக்கிறேன். எல்லா உயிர்களாகவும், பொருள் களாகவும், சகல சிருஷ்டியா கவும், நானே விளங்குகிறேன். ஆகவே நீ யாரை துன்புறுத்தி னாலும் உண்மையில் அது என்னை துன்புறுத்துவதாகவே அமையும்.
பார்வதி தேவியின் பதிலைக் கேட்டதும் விநாயக பெருமானுக்கு சொல்லமுடியாத ஆச்சரியம். ஏற்பட்டது. அதோடு தாம் ஒருவரையும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று உறுதியாக முடிவு செய்தார். ஏனெனில் அவர் யாரை திருமணம் செய்ய முடியும். ஒவ்வொரு பெண்ணும் அவருடைய தாயே அல்லவா? இந்த பெரிய உண்மையை மனதில் கொண்ட விநாயக பெருமான் யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்தக் கதையை சொல்லிவிட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னார்: நானும் விநாயகரை போலவே இருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் சாட்சாத் ஜகன்மாதாவாகிய தேவியாக இருப்பதை நான் பார்க்கிறேன் என்றார்.