இரவில் மின்மினி பூச்சிகள் மின்னுவது எதனால் தெரியுமா?
வானில் நட்சத்திரங்கள் மின்னுவது போல பூமியில் நட்சத்திரங்கள் காட்சியளிப்பது போல் அழகாய் மின்னும் பூச்சி தான் மின்மினி பூச்சி. இரவு நேரத்தில் இந்த பூச்சிகள் ஒளி வீசியவாறு பறந்து செல்வதை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நம்மில் பலரும் இந்த பூச்சியை பிடித்து எப்படி ஒளி வருகிறது என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்திருப்போம். பார்பதற்கு அழகாகவும், பிரமிப்பாகவும் இருக்கும் மின்மினி பூச்சி எவ்வாறு ஒளிர்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்மினி பூச்சி:
ஆங்கிலத்தில் Firefly என்றழைக்கப்படும் இந்த பூச்சிக்கு மற்றொரு பெயர் கண்ணாம் பூச்சி. இது வண்டு வகையை சேர்ந்த பூச்சியாகும். இந்த பூச்சியில் கிட்டத்தட்ட 2000 இனங்கள் உள்ளன. பெண் பூச்சிகள் மண்ணுக்கடியில் முட்டையிட்டு சில வாரங்களில் லார்வாக்கள் வெளிவருகின்றன. புழுவாக இருக்கும் போதே இது ஒளிரும் தன்மையில் தான் இருக்கும்.
கோடை காலங்களில் அதிகமாக தென்படும் இந்த மின்மினி பூச்சி குளிர்காலத்தில் மண்ணுக்கடியில் மறைந்துவிடும். இந்த பூச்சி மண்ணிலுள்ள பிற பூச்சிகள், நத்தை, மண்புழு ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும்.
ஒளிர்வதற்கான காரணம்:
மின்மினி பூச்சி ஒளிர்வதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் அதன் உடலில் ஒரு வேதியல் மாற்றம் நிகழ்கிறது. இதற்கு பயோலுமினெசென்ஸ் bioluminescence என்று பெயர். மின்மினி பூச்சியின் உடலில் லூசிஃபெரின் என்ற பொருள் லூசிஃபெரேஸ் என்ற வேதிப்பொருளாக மாறும்போது பயோலுமினசென்ட் என்சைம் உடன் இணைவதால் மின்மினி பூச்சி உடம்பில் இருந்து வெளிச்சம் ஏற்படுகிறது. இவ்வாறு மின்மினி பூச்சிகள் ஒளிரும் போது பச்சை மற்றும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் .
நம் வீட்டில் மின்சார பல்பு எறியும்போது எவ்வாறு வெப்பம் வெளிப்படுமோ அதுபோல மின்மினி பூச்சி உடம்பில் இருந்தும் வெப்பம் உருவாகிறது. ஆனால் மின்மினி பூச்சியின் உடம்பில் ஏற்படும் ஒளியானது குளிர் ஒளியாகும். இதனால் வெப்ப வடிவில் ஆற்றல் வீணாவதில்லை.
மின்மினி பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அதற்கு பதிலாக டிரக்கியோல்ஸ் எனப்படும் ஒரு சிறிய குழாயின் வழியாக வெளியில் இருந்து உட்புற செல்லுக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. ஆக்சிஜன் கிடைக்கும்போது பூச்சி ஒளிரும். ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் ஒளி அணைந்து விடும். சில வயது முதிர்ந்த மின்மினி பூச்சிகள் காலப்போக்கில் அதன் ஒளிரும் தன்மையை இழந்து விடுகின்றன.
மேலும் மின்மினி பூச்சிகள் ஒளிர பல காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய காரணமாக தங்களின் துணையை ஈர்ப்பதற்கு ஒளிர்கிறது. மின்மினிப்பூச்சி இனத்தில் ஒவ்வொன்றும் தனித்துவமான ஒளிரும் பண்புகளைக் கொண்டது. இதனால் தங்கள் இனங்களை அடையாளம் காணுவதற்கு அவை தனித்துவமான ஒளிரும் தன்மைகளை வைத்திருக்கின்றன.
மின்மினிப் பூச்சி எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஒளிர்கிறது. மற்ற உயிரினங்கள் மின்மினி பூச்சியை வேட்டையாடும் போது மின்மினிப்பூச்சியில் இருந்து 'Reflex bleeding' எனப்படும் ஒரு தற்காப்பு நிகழ்வில் இரத்த துளிகள் வெளிப்படுகிறது. இதனால் மின்மினி பூச்சியின் சுவை கசப்பாகவும், நச்சுத்தன்மை கொண்டதாகவும் இருப்பதால் மற்ற உயிரினங்கள் இதை சாப்பிடுவதற்கு தயக்கம் காட்டுகின்றன.