Türkiye king with old women 
கோகுலம் / Gokulam

உலக சிறுவர் கதைகள்: 1 - அரசரும் ஏழை மூதாட்டியும் (துருக்கி நாட்டுப்புறக் கதை)!

ஷாராஜ்

ஒரு பெர்ஷிய அரசர், தனது பரிவாரங்களோடு வடகிழக்கு பெர்ஷியாவில் இருக்கும் மலைக்கு மான் வேட்டைக்குச் சென்றிருந்தார். ஒரு வார காலமாகத் தேடியும், ஒரு மான் கூட அகப்படவில்லை. அரசரும் பரிவாரமும் அரண்மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

மலைப் பிரதேசத்தை விட்டு வெளியே வந்த அவர்கள், வழி தவறி அண்டை நாட்டு சமவெளிப் பகுதிக்குச் சென்றுவிட்டனர். அந்தச் சமவெளி, தொடுவானம் வரை விரிந்து பரந்ததாகக் காணப்பட்டது. அவர்கள் நடந்தனர், நடந்தனர், நடந்துகொண்டே இருந்தனர். சமவெளி நீண்டுகொண்டே இருந்தது.

ஏதேனும் ஒரு கிராமமோ, மேய்ச்சலுக்கு வந்திருக்கும் இடையர்களோ தட்டுப்பட்டால், தங்கள் அரண்மனைக்குத் திரும்புவதற்கான வழி எது என்பதை அவர்களிடம் அறிந்துகொள்ளலாம் என அவர்கள் எண்ணினர். ஆனால், ஒரு மனிதர் கூட அவர்கள் கண்ணில் தட்டுப்படவே இல்லை. அருகில் எங்கும் கிராமங்களோ, மனித வசிப்பிடங்களோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பகல் பொழுதில் சூரியன் சுட்டெரித்தது. இரவிலோ உறைந்து விடும்படி கடுமையான பனிப்பொழிவு நிலவியது.

பத்தாவது நாள் வரை அவர்களின் பயணம் தொடர்ந்த பிறகு, தொலைவில் நீல மலைகள் தென்பட்டன. ஆனால், அவற்றை நோக்கி செல்லச் செல்ல, அவை எட்டியெட்டிச் செல்வது போல் இருந்தது. மாலை வேளைகளில் அந்த மலைகள் இருப்பது தென்படும். ஆனால், மறுநாள் பொழுது விடிந்து வெயில் ஏறத் தொடங்கியதும், கானல் நீர் அவற்றை மறைத்துவிடும்.

சூரியன் உதிக்கும் திசை நோக்கி அவர்களின் பயணம் தொடர்ந்தது. அவர்களது இருப்பில் இருந்த உணவு, நீர் ஆகியவை தீர்ந்துவிட்டன. அனைவரையும் பசி வாட்டியது. அரச பரிவாரம், பரம தரித்திரர்கள் போல ஆகிவிட்டது. அவர்களது ஆடைகள் அழுக்கடைந்து, வியர்வையால் முடைநாற்றம் அடித்தது. சுட்டெரிக்கும் வெயிலால் அவர்களது உடல் கருத்து, முகம் வாடி வதங்கியது. இரவின் பனிக் குளிரால் தோல் உலர்ந்து, உதடுகள் வெடித்தன. தொடர் பட்டினியால் உடல் சோர்ந்து, பயணம் தொடர இயலாதவர்களாக நிலத்தில் படுத்துக்கொண்டனர்.

அந்த சமவெளிப் பகுதியில் ஒரு மூதாட்டி கூடாரம் அமைத்துத் தங்கி இருந்தாள். அவளிடம் இரு ஆடுகள் இருந்தன. அவற்றை மேய்ப்பதற்காக ஒரு நாள் அவள் வந்தபோது, அரசு பரிவாரத்தைக் கண்டு, நிலவரத்தைக் கேட்டு அறிந்துகொண்டாள். அவர்களைத் தனது கூடாரத்திற்கு அழைத்துச் சென்ற அவள், தனது ஆடுகளில் ஒன்றை வெட்டிச் சமைத்து, அரசருக்கும் பரிவாரங்களுக்கும் உண்பதற்குக் கொடுத்தாள்.

அதனால் அவர்களின் பசி நீங்கி, உடல் தெம்புற்றது. மேலும் ஒரு நாள் அவர்களை அங்கேயே தங்க வைத்து, தன்னிடமிருந்த உணவுப் பொருட்களில் அவர்களுக்கு சமைத்து, அன்போடு பரிமாறினாள்.

அரசரும் படை வீரர்களும் பழைய உடலுறுதியைப் பெற்றுவிட்டனர். அதன் பிறகு அவர்கள் அரண்மனை திரும்புவதற்கு சரியான வழியைக் காட்டி அனுப்பி வைத்தாள். அரசரும் பரிவாரங்களும் பத்திரமாக அரண்மனை திரும்பினர்.

அரசர் தனது அமைச்சரை அழைத்து, அந்த மூதாட்டிக்கு ஆயிரம் ஆடுகளைப் பரிசாக அனுப்பும்படி தெரிவித்தார்.

அதைக் கேட்ட அமைச்சர், "அரசே! அந்த மூதாட்டி தங்களுக்கும் பரிவாரங்களுக்கும் உணவாகக் கொடுத்தது ஒரு ஆட்டைத்தானே! எனவே, அதைத் திருப்பிக் கொடுத்தால் போதுமானது. அல்லது, தங்களது கொடை உள்ளம் விரும்பினால், பத்து ஆடுகளைக் கொடுத்தாலும் போதும். ஆயிரம் ஆடுகளை எதற்காகக் கொடுக்க வேண்டும்?" என்று கேட்டார்.

அரசர் சொன்னார், "அந்த மூதாட்டியின் சொத்து முழுதுமே அந்த இரண்டு ஆடுகள்தான்! தக்க சமயத்தில் அவள், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், தனது சொத்தில் பாதியான ஒரு ஆட்டை எங்களுக்கு உணவாக்கினாள். எனவே, அவள் தனது சொத்தில் பாதியைக் கொடுத்ததாகத்தான் அர்த்தம். அதற்குப் பிரதி உபகாரத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், திருப்பிச் செய்ய வேண்டியது நம்முடைய கடமை. அந்த மூதாட்டிக்கு பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்தாலும் தகும். இந்த ஆயிரம் ஆடுகள் என்பது, அவள் செய்த உதவிக்கு ஒரு போதும் சற்றும் ஈடாகாது!"

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT