Chinese King 
கோகுலம் / Gokulam

உலக சிறுவர் கதைகள்: 4 - நிழல் பாவைக் கூத்து உருவான கதை! (சீனச் சிறுவர் கதை)

ஷாராஜ்

பழங்காலச் சீனாவில் சிறப்பாகக் கதை சொல்லும் ஓர் இளம் பெண் இருந்தாள். அவளது கதை சொல்லும் திறமையைக் கேள்விப்பட்டு பேரரசர் அவளைத் திருமணம் செய்துகொண்டார்.

அவர் அவளிடம் மிகுந்த பாசத்துடன் இருந்தார். அவளது கதைகளை மிகவும் நேசித்தார். அவளும் அவருக்கு விருப்பமான கதைகளைக் கூறி மகிழ்வித்து வந்தாள். அவர்களது வாழ்க்கை இனிமையாகக் கழிந்துகொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, கதை சொல்லும் பேரரசி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள்.

மனைவி இறந்த துக்கத்திலிருந்து பேரரசர் மெதுவாக மீள்வார், வேறொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள்வார் என்று அவரது உறவினர்களும் நாட்டு மக்களும் நினைத்திருந்தனர். ஆனால், கதைகளின் பேரரசியான தனது மனைவியின் இழப்பைப் பேரசரால் தாங்க இயலவில்லை. அவர் எப்போதும் அவள் நினைவாகவே இருந்தார். அரசவைக்குச் செல்லாமலும், நாட்டு நடப்பு பற்றி அக்கறையின்றியும், தனது மனைவியின் சமாதி இடம் பெற்றிருந்த தோட்டத்திலேயே எப்போதும் அமர்ந்து சோகத்தோடு பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்.

மந்திரி, அரச குடும்பத்தார், சேனாதிபதி, படை வீரர்கள் மற்றும் மக்கள் அனைவருக்குமே இது மிகுந்த கவலையை அளித்தது. மன்னர் இப்படி பலவீனமாக இருப்பது எதிரிகளுக்குத் தெரிந்தால் அவர்கள் தமது நாட்டின் மீது படை எடுத்து வரவும், எளிதாக வென்றுவிடவும் செய்வர் என அஞ்சினர். பேரரசருக்கு நெருக்கமானவர்கள் இது பற்றி எவ்வளவு எடுத்துக் கூறியும், ஆறுதல் சொல்லியும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. தனது மனைவியின் நினைவுகளிலிருந்து அவரால் மீள முடியவில்லை.

அரண்மனைப் பூசாரி ஒரு நாள் இரவு நகரத்திற்குள் நடந்துகொண்டிருந்தபோது சில சிறுவர்கள் பொம்மைகளை வைத்தபடி விளையாடிக்கொண்டிருந்தனர். விளக்கொளி பட்டு அந்த பொம்மைகளின் நிழல் தெருவோரம் இருந்த சுவரில் நிழல் உருக்களாக அசைந்துகொண்டிருப்பது அவரது பார்வையில் பட்டது. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இறந்துபோன பேரரசி சொல்லும் கதைகள் அவருக்கு நன்கு தெரியும். எனவே, அவர் பேரரசியின் உருவம் போன்ற ஒரு பொம்மையைச் செய்து, திரைச் சீலை, மெழுகுவர்த்தி ஆகியவற்றைத் தயார் செய்துகொண்டார். பேரரசர் பொழுதைக் கழிக்கிற, பேரரசியின் கல்லறை இருக்கும் தோட்டத்திற்கு வந்து, திரைச்சீலையைக் கட்டி, மன்னர் வருவதற்காகக் காத்திருந்தார்.

இரவில் மன்னர் அதே போல வந்ததும் அந்தப் பதுமையை அசைத்து அதன் நிழல் திரைச்சீலையில் விழும்படி செய்து, பேரரசி சொல்லும் கதைகளை சொல்லத் தொடங்கினார். அந்தக் கதைகள் பேரரசருக்கு விருப்பமான கதைகள். அந்தக் கதைகளைக் கேட்டும், பேரரசியின் உருவம் போன்ற நிழல் அசைவை திரைச்சீலையில் பார்த்தும் மன்னர் மிகுந்த நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

திரைச்சீலையில் காண்பது பேரரசியின் உருவம் போன்ற ஒரு பொம்மை என்பதும், கதை சொல்லிக்கொண்டிருப்பது பூசாரியின் குரல் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனினும், இறந்துபோன தனது மனைவியே உயிருடன் மீண்டு தனக்குக் கதை சொல்வது போன்ற உணர்வை அவர் பெற்றார். அதன் மூலம் அவரது துயரத்திலிருந்து மீண்டு வந்து அரசவைக் காரியங்களைப் பார்க்கவும் தொடங்கினார்.

நிழல் பாவைக் கூத்து உருவான கதை இதுதான்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT