2023 உலகக் கோப்பையின் லீக் நிலை நவம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான போட்டியுடன் முடிவடைந்தது.
ஒருதலைப்பட்சமான இந்த போட்டியில் மென் இன் ப்ளூ அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் சதம் விளாச, 410-4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நெதர்லாந்தை 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்றது.
45 ஆட்டங்களுக்குப் பிறகு, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2023 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஒன்பது லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் இதுவரையிலும் ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத ஒரே அணி என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணி ஒன்பது ஆட்டங்களில் ஏழு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஆஸ்திரேலிய அணியும் ஏழு ஆட்டங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் தோல்வி அடைந்திருந்தாலும், மற்ற ஏழு ஆட்டங்களில் அதிரடியாக வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானுடன் ஆஸ்திரேலிய அணி பெற்ற பிரமிப்பூட்டும் வெற்றியானது, அவர்களது உலகக் கோப்பை கனவை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
நியூசிலாந்து அணி 2023 உலகக் கோப்பையை நான்கு வெற்றிகளுடன் தொடங்கியது, ஆனால் இலங்கையை வீழ்த்துவதற்கு முன்பு தொடர்ச்சியாக நான்கில் தோல்வியடைந்தது. அவர்கள் ஒன்பது ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தனர். சென்ற முறை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் கடும் போட்டியிட்டு, கடைசியில் அதிக அளவு பவுண்டரிகள் அடிக்காததால் உலகக் கோப்பையை நழுவ விட்ட நியூசிலாந்து அணி, இம்முறை உலகக் கோப்பையை பெற்றே தீரவேண்டும் என்கிற மனஉறுதியோடு களமிறங்கி உள்ளது.
2023 உலகக் கோப்பை அரையிறுதியில் யார் யாரை சந்திப்பார்கள்?
ஐசிசி நிகழ்வின் அட்டவணையின்படி, லீக் கட்டத்திற்குப் பிறகு முதல் இடத்தைப் பிடிக்கும் அணி முதல் அரையிறுதியில் நான்காவது அணியுடன் மோதும். எனவே, முதல் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை புதன் கிழமை, நவம்பர் 15 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்க உள்ளது.
தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, நவம்பர் 16-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கான மோதல் என்றால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத போட்டி 1999 ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் நடந்த ODI உலகக் கோப்பை அரையிறுதி போட்டி. அந்த போட்டியானது பெரும் பரபரப்பிற்கு பிறகு டிராவில் முடிந்து, ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதற்கு பிறகு இரண்டாம் முறையாக ஆஸ்திரேலிய அணி 2007 ஆம் ஆண்டு செயின்ட் லூசியாவில் நடந்த அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது அரை இறுதி போட்டி அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
2023 உலகக் கோப்பை அரையிறுதி வரிசை:
நவம்பர் 15: முதல் அரையிறுதி, இந்தியா vs நியூசிலாந்து, வான்கடே மைதானம், மும்பை (பிற்பகல் 2:00 IST)
நவம்பர் 16: இரண்டாவது அரையிறுதி, தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கத்தா (பிற்பகல் 2:00 IST)
நவம்பர் 19: இறுதிப் போட்டி, நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத் (பிற்பகல் 2:00 IST).