கல்கி

பலே! பலே! பாலையா!

சேலம் சுபா

த்தனை காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் எவ்வளவு மாறினாலும் மனதில் பசை போட்டது போல் என்றும் நிலைக்கும் விஷயங்களை எவர்க்ரீன் என்று சொல்வோம். அதில் மற்றவர்களில் இருந்து தனித்தன்மை கொண்ட மனிதர்களும் அடங்குவர். சுதந்திரத்தில் காந்தி அரசியலில் எம் ஜி ஆர்,  நடிப்பில் சிவாஜி, கிரிக்கெட்டில் தோனி இப்படி அவரவர் ரசனைக்கேற்ப எல்லாத் துறைகளிலும் சிறப்பானவர்கள் உண்டு. இவர்களின் புகழ் காலம் உள்ளவரை இருக்கும்.

நடிப்பு என்று வரும்போது அநேக திறமைசாலிகள் போட்டி போடும் துறையாகிறது. அதில் எவர்க்ரீன் மனிதராக தனது அட்டகாசமான முகபாவங்களாலும் உடல் மொழியாலும் குரலாலும் கண்களாலும் இன்றும் நம்மை மகிழ்விப்பவர் டி எஸ் பாலையா என்றால் மிகையல்ல.

வில்லனாக நடிப்பவர்களுக்கு நகைச்சுவை என்பது எட்டாக்கனியாக இருக்கும். ஹீரோக்களுக்கு வில்லத்தனம் பொருந்தாது. ஆனால் வில்லன் நகைச்சுவை குணசித்திரம் என அத்தனையிலும் ஆல்ரவுண்டராக தன் மாறுபட்ட நடிப்பைக் காட்டி ஹீரோக்களையே புறம் தள்ளியவர் என்றால் அது இவராகத்தான் இருக்கும்.

ஆம். கதாநாயகர்களுக்கு மட்டுமே பாடல்கள் தந்து முக்கியத்துவம் தந்த அந்தக் காலத்தில் (வயதானாலும்) இவருக்கு தனிப் பாடல்கள் தந்து அவை  இன்றுவரை வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருப்பதை  குறிப்பிட வேண்டும். உதாரணத்திற்கு திருவிளையாடல் படத்தில் “ஒரு நாள் போதுமா” என்ற பாடலை சொல்லலாம். அந்தப் பாடலில்தான் மனிதரின் முகத்தில் என்ன ஒரு நவரசங்கள்?

இப்போது படங்களில் வரும் காமெடி வசனங்களுக்கு அடித்தளம் இட்டதும் இவரே! வடநாட்டின் மொழியை புதிய வழக்கில் நம்பள், நிம்பள் எனப் பேசி அந்த வார்த்தைகளை நம் மூளையில் செட் செய்தவர்.

பாலையா திருநெல்வேலியைச் சேர்ந்தவர். நேற்று (ஆகஸ்ட் 23) அவர் பிறந்த தினம். சிறுவயதில் இருந்தே கலைகள் மீது ஆர்வம் கொண்டவர். சர்க்கஸ் கம்பெனி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி பின் உணர்ந்து திரும்பி வந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தவர்.

இவரின் அறிமுகப்படம் வில்லனாக நடித்த சதிலீலாவதி. அதை இயக்கிய எல்லீஸ் ஆர் டங்கன் எனும் மாபெரும் ஹாலிவுட்  இயக்குனரால் புகழப்பட்டு ஹாலிவுட்டுக்கும் அழைக்கப்பட்டவர். அதில் நடித்த எம் ஜி ஆரின் நட்பு இவருக்கு பலவிதங்களில் உதவி வாய்ப்புகளையும் பெற்றுத்தந்தது. எம் ஜி ஆர் நடித்த மதுரை வீரனில் வில்லனாக தனது உடல் மொழியால் புதுமைப் புகுத்தியவர். வாய்ப்புகள் கிடைத்தாலும் தனது அயராத உழைப்பாலும், முயற்சியாலும், தனித்தன்மையாலும் அவற்றை தன் காலம்வரை தக்க வைத்து வயதுக்கேற்ற நடிப்பை வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

கதாநாயகனாக இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அதை விரும்பாமல் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன், குடும்பஸ்தர் போன்ற கதாபாத்திரங்கள் ஏஏறு கலக்கியவர். ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்காமல்தான் ஏற்கும் எந்த வித பாத்திரம் ஆனாலும் அதை சிறப்பாக செய்து அந்தப் படத்தில் இருக்கும் மற்றவர்களை மறக்கடிக்க செய்து விடுவதில் கெட்டிக்காரர். உதாரணம் தில்லானா மோகனாம்பாளின் தவில் வித்வான் காதலிக்க நேரமில்லையின் மாமனார் பாமா விஜயத்தின் குடும்பத்தலைவர், இப்படி நிறைய சொல்லலாம்.

வந்த வாய்ப்புகளையும் ஏற்று நடித்ததில் அண்ணா அவர்களின் வேலைக்காரி படம் பாலையாவின் நடிப்புப் பயணத்தில் பெரும் மாற்றம் தந்து கவனிக்க வைத்தது. காரணம் பகுத்தறிவு வசனங்கள். பகுத்தறிவை மக்கள் ஏற்காத அந்தக் காலத்தில் காங்கிரஸ்காரராக அறியப்பட்டாலும் ஏற்ற பாத்திரத்திற்காக துணிச்சலுடன் அண்ணாவின் வசனங்களைப் பேசியவர். இவரின் இடத்தில இனி ஒருவர் இத்தனை திறமைகளுடன் வருவாரா என்பது சந்தேகமே.

1914ல் பிறந்த இவர் 1972ல் ஜூலை 23 ல் மறைந்தார். எந்த இடைவெளியும் இன்றி வயதுகள் ஆனாலும் திரையில் தொடர்ந்து பங்களிப்பைத் தந்த நடிகராக இருந்தார் பாலையா.

டைட்டில் கார்டில் முதல் பெயராக இடம் பெற்ற பெருமையைப் பெற்றவராக இருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கென மிகப்பெரிய அந்தஸ்தை திரையுலகு வழங்கியதா எனும் கேள்வி எழுகிறது. அவரின் வாரிசுகளான ஜூனியர் பாலையாவும், மனோசித்ராவும் வெள்ளித்திரையில்  ஜொலிக்க முடியவில்லை என்பதும் வருத்தமே. இருப்பினும் மறைந்த பின் என்றும் நிலைத்து நிற்கும் மனிதர்களின் வரிசையில் பாலையாவும் ஒருவராக விளங்குகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறது நம் மனம்.

ஈசன் எழில்

சேலத்தில் உள்ள சினிமா ரசிகரான திரு. ஈசன் எழில் இவரைப்பற்றி சொன்னது “இன்று இருக்கும் நகைச்சுவை நடிகர்களின் அரிச்சுவடி பாலையாதான். நான் ரஜினி ரசிகன் என்றாலும் பாலையாவின் நகைச்சுவை நடிப்புக்கும் தலைவணங்குகிறேன். தில்லானாவில் இவர் வாசித்ததால்தான் தவில் என்கிற இசைக்கருவிப்பற்றி என் போன்ற பலருக்கும் தெரிந்தது, எங்கள் தந்தை காலத்தவர் என்றாலும் எங்கள் காலத்திலும் ஏன் இனி வரும் காலத்திலும் பாலையாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதுதான் உண்மை. அவரோட மிக இயல்பான, எளிமையான, சர்வ சாதாரணமான வசங்கள் கூடிய நடிப்பு என்றைக்கும் நம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும். அதுதானே இருந்தாலும் மறைந்தாலும் ஒரு கலைஞனின் வெற்றி! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT