கல்கி

அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள் ...

சுப்பா ராவ்

சாகித்ய அகாடமி  விருது அறிவிக்கப்பட்டிருக்கும்  நூல்

 சுப்பா ராவ் (வாசிப்பை நேசிப்போம் குழு)

ந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான். ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடன் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் உடையணத் தேவன்தான். இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி “காலா பாணி“ என்று குறிப்பிட்டது. காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரிக்கப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார். 19.09.1802 தனது 34வது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு. படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல. உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார். கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.

காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல, அன்றைய உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும்போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள். துலுக்கப் பெண்ணை ‘சாகிபா‘ என்றும், மலாயா பெண்ணை ‘நயோன்யா‘ என்றும், மராட்டிய பெண்ணை ‘மாதுஸ்ரீ‘ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும், கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும், கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்....

அன்றாடம் நான் பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்தபோது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும்தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.

பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே, இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.

‘காலா பாணி‘

டாக்டர். மு. ராஜேந்திரன், இ.ஆ.ப

அகநி வெளியீடு

விலை: ரூ.650.00

பக்கம் : 536

சமைக்க வேண்டாம் மென்று தின்றாலே பலன் தரும் மூன்று இலைகள்...!

Biggboss 8: யார் கெத்து டாஸ்கில் கோட்டைவிட்ட ஆண்கள் அணி!

வைணவத்தைக் காக்க கண்களை இழந்த கூரத்தாழ்வான்!

உக்ரைனில் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

திருநெல்வேலி ஸ்பெஷல் மனோகரம், தேங்காய்ப் பால் முறுக்கு!

SCROLL FOR NEXT