கல்கி

கண்களுக்கான யோகா பயிற்சிகள் முக்கியமானதா? ஏன்?!

கார்த்திகா வாசுதேவன்

ல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பிரத்யேகமானதொரு நேர்காணலில் எளிய முறையில் விளக்கம் தருகிறார் சென்னையின் கிருஷ்ணமாச்சார்யா யோகா மந்திரின் மூத்த யோகா பயிற்சியாளரான திரு. அருள் அவர்கள்….

கட்டுரைக்குள் நுழையும் முன் ஒரு சிறு விண்ணப்பம்.

தயவுசெய்து உங்களது அலைபேசியை குறைந்தபட்சம் 30 நிமிடங்களேனும் அணைத்து வைத்து விட்டு அதன் பிறகே இதற்குள் நுழையுங்கள். ஏனெனில் இப்போது நாம் அறிந்து கொள்ள விரும்புவது நமது கண்களின் நலனைப் பற்றி!

நமது கண்களின் ஆரோக்யத்தைப் பொருத்துவரை நமக்குப் பலவிதமான கேள்விகள் இருக்கலாம். உதாரணத்திற்கு சிலர் இயற்கையாகவே கண்பார்வையை மேம்படுத்துவது எப்படி என்ற தேடலில் இருக்கலாம். இன்னும் சிலர் உடற்பயிற்சிகள் மூலம் கண்பார்வையை மேம்படுத்த முடியுமா என்பதை அறிய விரும்பலாம். அல்லது தொடர்ந்து பல ஆண்டுகளாக கண்ணாடியை அணிந்து கொண்டே இருந்தாக வேண்டிய நிலையை மாற்ற வேறு ஏதேனும் கண் பயிற்சிகள் உள்ளதா? என்று அறிந்து கொள்ளவும் கூட பலர் விரும்பலாம்.

மேற்கண்ட அத்தனை தேடல்ககளுக்குமே யோகாவில் பதில் இருக்கிறது. அதைப் பற்றி மிகத் தெளிவாக நமக்கு விளக்கி இருக்கிறார் கிருஷ்ணமாச்சார்யா யோகா மந்திரின் மூத்த யோகா ஆசிரியர்களுள் ஒருவரான "அருள்".                                                                                                                                                                                                                                                          அவருடனான உரையாடலில்  கண்களுக்கான யோகப்பயிற்சிகள்  குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடிந்தது. கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக இங்கு அதை அறியத் தருகிறோம். வாசித்து விட்டு உங்களது கேள்விகளையும், கண்களுக்கான யோகா பயிற்சிகள் தொடர்பான உங்களது அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேள்வி: யோகா என்றாலே அதை உடலின் பிற அத்தனை உறுப்புகளுடனும் தொடர்பு படுத்தி பார்க்கிறோமே தவிர கண்களுக்கென்று யோகாவில் பயிற்சிகள் இருப்பது குறித்து எத்தனை பேருக்கு தெரிந்திருக்கக் கூடும், கண்களுக்கான யோகப் பயிற்சிகளின் அடிப்படை என்ன?

யோகா குரு அருள் அவர்களின் பதில்:

ம்முடைய பாரம்பரிய யோகா முறைகளில் திராதகம் (Trataka) என்பது ஒன்று. இந்த முறையில்தான் கண்களுக்கான யோகா பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இப்போது யோகா ஆசிரியர்கள் பழைய முறைகளில் சில மாற்றங்களைப் புகுத்தி இன்றைய காலத்துக்கு ஏற்றவகையில் உடலின் மற்ற உறுப்புகளுக்கான யோகாபயிற்சிகளை மேற்கொள்ளும் போதே இந்த திராதக முறையின் அடிப்படையில் கண்களுக்கான யோகப் பயிற்சிகளையும் இணைத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். இந்தப் பயிறிகளை தொடர்ந்து  செய்யச் செய்ய நமது மனம் மிகவும் வலுவாகும், அத்துடன் கண்களின் செயல் திறன் அதிகரிக்கும். இதை உட்கார்ந்து கொண்டு செய்வார்கள். அது சிலருக்கு போர் அடிக்கும் என்பதால் இப்போது நடை போன்ற இதர மூவ்மெண்ட்டுடன் பயிற்சி செய்யுமாறு மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

சாஸ்திரப்படி திராதகம் என்பது கடவுள் படத்தின் முன்பு அமைதியாக அமர்ந்து கொண்டு குறிப்பிட்ட கால அளவுக்கு இறைவனின் கண்களை மட்டுமே உற்றுப் பார்த்துப் பயிற்சி செய்வது… அல்லது விளக்கின் முன் அமர்ந்து கொண்டு அதன் சுடரையே உற்றுப் பார்த்து பயிற்சி செய்வது. இப்போது நாம் அதை அசைவுகளுடன் கற்றுக் கொடுக்கிறோம். இதன் மூலமாக கண்களுடன் இணைந்து உடலின் பிற உறுப்புகளும் பலம் பெறுகின்றன. பயிற்சி செய்பவர்களுக்கும் போர் அடிக்காது என்பது தான் இதன் முக்கியமான அம்சம்.

கேள்வி: குழந்தைகளை யோகா பயிற்சிகளில் ஈடுபடுத்தும் ஆரம்ப கட்டங்களில் அவர்கள் உடற்பயிற்சி போன்று அசைவுகளுடன் கூடிய பயிற்சிகளில் ஆர்வமாக இருக்கக் கூடும், கண்களுக்கான யோகா பயிற்சிகளை அவர்களுக்குப் புரிய வைத்து, அதன் பழக்கத்துக்கு அவர்களைக் கொண்டு வருவது எப்படி? அதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்வார்களா?

பதில்: அதற்காகத்தான் குழந்தைகளுக்கு மட்டுமில்லை இப்போது பெரியவர்களுக்கும் கூட நாங்கள் உடலசைவுகளுடன் கூடிய கண்களுக்கான யோகா பயிற்சிகளையே தேர்ந்தெடுத்து செய்ய வைக்கிறோம். உதாரணத்திற்கு கைகளைக் கண்களால் ஃபோகஸ் செய்யக்கூடிய பயிற்சியானது மூவ்மெண்ட்டுடன் கூடியது. கைகளை உயர்த்த உயர்த்த கண்கள் அதை ஃபோகஸ் செய்து கொண்டே செல்லும் போது அது உடற்பயிற்சியுடன் கூடிய யோகாவாகி விடும். அப்படிச் செய்யும் போது குழந்தைகளுக்கு அது எளிதாக இருக்கும். உற்சாகமாகவும் இருக்கும்.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களே கூட இப்போது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு யோகா செய்யத் திணறுகிறார்கள். காரணம் மன அமைதியின்மை தான் காரணம். அப்படியான சமயங்களில் குழந்தைகளுக்கு நிற்க வைத்து அளிக்கக் கூடிய யோகா பயிற்சிகளை பெரியவர்களுக்கு அமர்ந்து கொண்டு செய்யும் வகையில் தர வேண்டியது தான். இரண்டுமே ஒன்று தான். பயிற்சி பெறக்கூடிய நபர்களின் வயதைப் பொறுத்து பயிற்சியில் சில மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். குழந்தைகளுக்குப் பெரிதாக பக்தியில் நாட்டமில்லை என்றால் அவர்களுக்குப் பிடித்த  விலங்குகளின் படங்களை முன்னால் வைத்து கண்களால் ஃபோகஸ் செய்யச் சொல்லி பழக்கலாம். திராதகத்தின் அடிப்படையிலான இந்தப் பயிற்சியைத்  தொடர்ந்து செய்யச் செய்ய கண் நரம்புகள் வலுப்பெற்று கண்களின் திறன் அதிகரிக்கும்.

கேள்வி: கண்களுக்கான யோகா எல்லோருக்கும் முக்கியம் தான் என்றாலும் குறிப்பிட்ட சில வகைத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் இது மிக மிக முக்கியமான பயிற்சி, தவறாமல் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறைகள் ஏதும் உண்டா?

பதில்: இன்றைய காலகட்டத்தில் செல்ஃபோன்  பயன்படுத்தாத மனிதர்களே இல்லை. அதிலும் குழந்தைகள் தான் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் ஆண்ட்ராய்டு ஃபோன்களைப் பயன்படுத்துவர்களின் கண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே கட்டாயமாக கண்களுக்கான யோகா பயிற்சிகளை செய்தே ஆக வேண்டும். நம்மால் செல்ஃபோன் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது, கண்களையும் பாதுகாத்தே ஆக வேண்டும் என்றால் இப்போதே கண்களுக்கான யோகா பயிற்சிகளைத் தொடங்கி விடுவது நல்லது. பிறகு முழுவதும் கெட்ட பிறகு மருத்துவரிடம் செல்லும் நிலை வந்து விடும். தவிர, கணினி அதிகம் உபயோகித்து வேலை பார்ப்பவர்களுக்கும் கூட இது மிகவும் முக்கியமானதே! அவர்களுக்கு காட்டன் துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து கண்களின் மேல் வைத்துச் சில நிமிடங்கள் கழித்து எடுக்கச் சொல்லி கண்களுக்கான யோகா பயிற்சிகளில் சிற்சில மாற்றங்களுடன் நாங்கள் பயிற்சி தருகிறோம்.

கேள்வி: கண்களுக்கான யோகா பயிற்சிகள் நமது பழைய வரலாற்றுக் காலங்களில் அல்லது இதிகாச காலங்களில் புழக்கத்தில் இருந்ததுண்டா? உதாரணங்கள் ஏதேனும் சொல்ல முடியுமா?

பதில்: அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள். சூரியனின் நகர்வுக்கு ஏற்ப கண்களை ஃபோகஸ் செய்யும் வகையில் அந்தப் பயிற்சிகள் முழுவதும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அத்துடன் முன்பே கூறியபடி திராதகம் அடிப்படையிலான பயிற்சிகளையும் அவர்கள் செய்வதுண்டு. கடவுள் படத்தின் முன்பு அமர்ந்து கொண்டு கண்களைத் தொடர்ந்து பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் நிலைக்கச் செய்து கண்களின் நீர் சொட்டச் சொட்ட ஃபோகஸ் செய்வார்கள். இல்லாவிட்டால் ஒற்றைக் காலை மடித்து தவ நிலையில் நின்று கொண்டு வேத மந்திரங்களை உச்சரித்தும் மனதை ஓரிடத்தில் நிலையாக ஃபோகஸ் செய்வார்கள். இவை அனைத்துமே கண்களை வலுப்படுத்த அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளே!

அப்போது அவர்கள் முழுக்க முழுக்க இயற்கை உணவுகளையே சார்ந்து  இருந்தார்கள். அது திராதக முறையிலான பயிற்சிகளை மேம்படுத்த பெரிதும் உதவியது. ஆனால், இப்போது உணவும் சரியில்லை, செல்ஃபோன்களும் நமது கண்களுக்கு மிகுந்த அபாயத்தை உண்டாக்குகின்றன. காலத்திற்கு ஏற்றவாறு சிற்சில மாற்றங்களைப் புகுத்தி நாம் கண்களுக்கான யோகா பயிற்சிகளை செய்யப் பழக்குவது அவசியமாகிறது.

கேள்வி: உடற்பயிற்சிகள் செய்யும் போது உடலின் வெளிப்பகுதியில் மட்டுமல்லாமல் உடல் உள்ளுறுப்புகளிலும் கூட ஒவ்வொன்றும் எவ்விதமாக பலமடைகின்றன என்பது குறித்து நமக்கு ஓரளவுக்குத் தெரிந்திருக்கிறது. அதே போல கண்களுக்கான யோகா செய்வதால் நமது உடல் உள்ளுறுப்புகளில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று சொல்ல முடியுமா?

பதில்:  பிரதானமான மாற்றம் மன அமைதி தான். மன அமைதி கிடைத்து உடல் சமநிலைப்பட்டால் உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் அதனதன் வேலையைச் செவ்வனே செய்யமுடியும். உடலின் சமநிலை குலையும் போது தானே அது நோயாக வெளிப்படுகிறது. இப்போது கண்களுக்கான யோகப் பயிற்சியில் ஈடுபடும் போது நமது கவனம் முழுமையும் கண்களில் குவிவதில் அதில் பிராணன்(உயிர்சக்தி) மிகுதியாகி கண்கள் ஆற்றல் பெறுகின்றன.

உடலில் எங்கெல்லாம் நாம் அசெளகரியமாக உணர்கிறோமோ அங்கெல்லாம் பிராணன் குறைவாக இருக்கிறது அங்கு உடல் சமநிலையில் இல்லை என்று பொருள். இது கண்களுக்கு மட்டுமல்ல நமது உடல் உறுப்புகள் அனைத்துக்குமே கூடப் பொருந்தும். நாம் யோகாவில் ஈடுபடும் போது எந்த உறுப்பின் மீது அதிக கவனம் செலுத்துகிறோமோ அதில் பிராணன் என்று சொல்லப்படக்கூடிய உயிர்சக்தி மிகுந்து ஆற்றல் கூடுகிறது என்பார் மகாப்பெரியவர். அந்தப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடும் போது நீங்கள் அதை உணரலாம்.

கேள்வி: கண்களுக்கான யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் போது நமது உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடுகள் ஏதாவது  உண்டா?

பதில்: பொதுவாக ஆரோக்யமான உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை உள்ளிட்ட அனைத்து வகையான கீரைகளையும் நமது உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் நிறைய பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அது தவிர தினமும் குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம். இந்த உலகுக்கு சூரியன் எப்படியோ அப்படி நமது உடலுக்கு கண்கள் தான் சூரியன். எனவே கண்களின் ஆரோக்யத்தில் நாம் கவனம் செலுத்தினால் நமது உடலில் பல விஷயங்களை நாம் ஆரோக்யமான வகையில் கட்டுப்படுத்த முடியும்.

கேள்வி: கண்களுக்கான யோகா செய்யும் போது தூக்கம் வருவது இயல்பானது என்று சொன்னீர்கள், அதைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா?

பதில்: ஆமாம், எளிமையான உடல் அசைவுகளுடன் கூடிய வகையில் கண்களுக்கான யோகப்பயிற்சியை இணைந்து  செய்யப் பழகினோமென்றால் நிச்சயமாக தூக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். கண்களுக்கான யோகா மெடிட்டேஷன் போன்றது என்பதால் தூக்கம் வருவது இயல்பு தான். ஆனால், பழகப் பழக நம்மால் தூக்கத்தை தவிர்த்து விட முடியும்.

கேள்வி: இப்போதெல்லாம் யூ டியூப் பார்த்து எதையும் கற்றுக் கொள்ளும் வழக்கம் மிகுந்து விட்டது. யோகாவை அப்படிக் கற்றுக் கொண்டு செய்தால் பயன் தருமா?

பதில்: என்னைக் கேட்டால் அதில் பலன் குறைவு என்று தான் சொல்வேன். எதையும் நேரில் ஒரு குரு மூலமாகவோ அல்லது பயிற்சியாளர் மூலமாகவோ கற்றுக் கொள்ளும் போது அதன் பலன் அலாதியானது . அதில், நம்முடைய பலம், பலகீனங்களை பயிற்சியாளர் நேரடியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நமது செய்முறைப் பயிற்சிகளை மாற்றி  அமைப்பார்கள். ஆகவே நேரடிப்பயிற்சி தான் சிறந்தது. கொரோனா காலத்தில் நேரில் சென்று கற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொடுக்கவோ முடியாத காரணத்தால் யூ டியூப், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சகஜமாகத் தொடங்கின. ஆனால், ஏதோ ஒரு யூ டியூப் சேனல் மூலமாக கற்பதைக் காட்டிலும் ஒரு தனிப் பயிற்சியாளர் வைத்துக் கற்றுக் கொள்வதே நல்லது. அப்போது தான் அவரவர் உடலின் இயல்புக்கு ஏற்ப பயிற்சிமுறைகளைத் தேர்வு செய்து பலன் பெற முடியும். யூ டியூபை தகவலுக்காக வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT