Toxic Relationship 
கல்கி

இந்த 8 வகை ‘டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்’பில் நீங்கள் இருக்கிறீர்களா? ஜாக்கிரதை!

வித்யா குருராஜன்

உறவு செய்தல் என்பது ஒரு கலை.

பாதுகாப்பானதாகவும், எந்தப் பயமும் இன்றி நம்மை நாமாக இருக்கவிடுவதும், நிம்மதியாக வைத்திருப்பதும்தான் ஆரோக்கியமான உறவு.

மேற்சொன்னதற்கு மாறானது, எதிர்மறையானது நச்சு உறவு என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது.

ஒரு நச்சு உறவினர், அவருக்கும் உங்களுக்குமான உறவின் முழு கட்டுப்பாடும் தன் கையில்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படிக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நச்சு உறவினரும் கடைபிடிக்கும் வழிமுறைகள் மாறுபடும். சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.

மட்டம் தட்டுதல்:

Toxic Relationship

தொடர்ச்சியாக உங்களை மட்டம் தட்டிப் பேசி, பிறர் முன்னிலையில் கிண்டல் செய்து, நீங்கள் சொல்லும் அனைத்தையும், உங்கள் ஐடியாலஜி, நம்பிக்கைகள் அனைத்தையும், எள்ளி நகையாடி நடந்துகொள்ளுதல்.

இது அனைவரும் செய்வதுதானே என நீங்கள் நினைக்கலாம்!

  • எப்போதாவது நடக்காமல் எப்பவுமே நடந்தால்,

  • இப்படிப் பேசாதீர்கள் என்று எச்சரித்தப் பின்பும் இது நிற்காமல் தொடர்ந்தால்,

  • நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும்போது, நான் விளையாட்டுக்கு சொன்னேன். ‘இதைக்கூட பொறுத்துக்க முடியாதா?’ என்று பதில் வந்தால்,

  • உனக்கு ஒன்னும் தெரியாது, நான் கிடைக்க நீ கொடுத்து வச்சுருக்க! என்று அடிக்கடி சொன்னால் அது நஞ்சேறிய உறவாகும்.

இதைத் தொடர்ந்து பொறுத்துக்கொண்டே போனால், உண்மையிலேயே நமக்கு ஒன்றும் தெரியாது, இவர் இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று நீங்களே நம்பத் தொடங்கிவிடுவீர்கள். இவ்வகையில் இந்த உறவின் முழு கண்ட்ரோலையும் அவர் கைப்பற்றிவிடுகிறார்.

அதீத கோபம்

Toxic Relationship-Anger

எதற்கு கோபப்படுவார், எதைச் செய்தால் பிடிக்காது என்று ஊகிக்க முடியாமல் உங்களை எப்போதும் ஒரு குழப்பத்திலேயே, பயத்திலேயே வைத்திருப்பார்.

கோபப்பட்டு உடல் ரீதியாகத் தாக்குவது மிக மோசமான நச்சு உறவு. இதைச் சிறிதும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. சரி செய்யும் முயற்சிகள் பலனளிக்கவில்லையெனில் பிரிந்துவிடுவது சிறந்தது.

கோபத்தை மன ரீதியில் பாதிக்கும் வகையில் வெளிப்படுத்துவது இன்னொரு வகை. உதாரணத்துக்குத்

  • தன்னை தானே தாக்கிக்கொள்வது,

  • பேசாமல் நாள்கணக்கில் இருப்பது,

  • காணாமல் போவதுபோல் போக்கு காட்டுவது,

  • கோபத்தின் காரணத்தை, கோபத்தின் விளைவை உங்கள் மீதே போடுவது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இந்த நச்சு உறவினர் இப்படிப்பட்டக் கோபக்காரர் என்று வெளி உலகுக்குக் காட்டிக்கொள்ளவே மாட்டார். நீங்கள் இவரின் நடத்தைகளை வெளியில் சொன்னால் ஒருவரும் உங்களை நம்ப மாட்டார்கள் என்ற நிலையில்தான் உங்களை நிறுத்துவார். பயமுறுத்திக் கட்டுப்படுத்துவார்.

அதிக எதிர்வினை / விலகுதல்

Toxic Relationship

நீங்கள் ஒரு எதிர்கருத்து சொன்னாலோ, எதிர்ப்பைக் காட்டினாலோ, உடன்பாடின்மையைத் தெரிவித்தாலோ, ஓவர் ரியாக்‌ஷன் செய்து உங்களைப் பாடாய்ப் படுத்திவிடுவார். அவர் மீதுள்ள தவறை நீங்கள் சொல்லப் போய், முடிவில் சமாதானம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, அதன் காரணமாக, உங்கள் மீதுதான் தவறு என்று நீங்களே சொல்லும் நிலை வந்துவிடும். அல்லது, நீங்கள்தான் தவறாகப் புரிந்துகொண்டு சொல்கிறீர்கள் என்பதுபோல் வந்து நிற்கும்.

இவ்வகை டாக்ஸிக் பார்ட்னர் அடிக்கடி நீங்கள் அவரை நேசிக்கிறீரா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். சந்தேகத்தால் இருக்கலாம். அல்லது உங்களிடமிருந்து அந்த கன்ஃபெஷனைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசையாக இருக்கலாம். அல்லது நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லவைத்து அதை உங்கள் அடிமனதில் பதிய வைப்பதற்காக இருக்கலாம். அல்லது பிரச்னையிலிருந்து திசைதிருப்பி விலகுவதற்காகக்கூட இருக்கலாம்.

இந்த நச்சுத்தன்மை பிரச்னைகளின்போது மட்டும்தான் வெளிப்படும். மற்ற நேரங்களில் மிகவும் அன்பு காட்டி அந்த அன்புக்கு உங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பார். இதிலும் உறவின் கண்ட்ரோல் உங்களிடம் இல்லை.

குற்ற உணர்வைத் தூண்டுதல்/ விலக்குதல்

Toxic Relationship

உங்களுக்குள் குற்ற உணர்வைத் தூண்டி உங்களை அவரின் கட்டுக்குள் வைக்கப் பார்ப்பார். உதாரணமாக, சில டாக்ஸிக் பெற்றோர், வளர்ந்த பிள்ளைகளிடம், “உன்னைப் பெற்றதால் உன்னை வளர்த்ததால்தான் இத்தனை கஷ்டங்கள் பட்டேன்; என் கனவுகளை அடைய முடியாமல் போனது” என்று சொல்லி ஒரு குற்ற உணர்வினை உண்டாக்கித் தன் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிப்பர்.

மறுதலையாக, தவறு செய்யும் அல்லது தவறு செய்த நபராக நீங்கள் இருந்தால், உங்களது குற்ற உணர்வினைத் தற்காலிகமாக விலக்குபவருக்கு உங்களையும் அறியாமல் நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். உங்கள் இருவருக்குள் இருக்கும் உறவுக்கு அவரே எதேச்சாதிகாரி.

சார்பு / சார்பின்மை

Toxic Relationship

எதிலுமே தலையிடாமல் உங்களுக்கு அனைத்திலும் அத்தனை சுதந்திரத்தையும் அளிப்பார். இது நல்ல விஷயம்தானே என்று நினைக்கலாம். ஆனால், சின்னது முதல் பெரிய விஷயங்கள் வரை அனைத்திலும் உங்களையே முடிவெடுக்கவிட்டு, அது தவறாகும் பட்சத்தில் அனைத்தையும் உங்கள் தலையில் போட்டுவிடுவார். ப்ளேம் கேம் ஆடுவார். அதனால் முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தாலும், இந்த முடிவெடுத்தால் அவர் பாதிக்கப்படுவாரா என்று யோசித்து யோசித்து மனச் சோர்வில் மனக் கவலையில் நீங்கள் சிக்குவீர்கள்.

ஆச்சரியப்படும் விதமாக பல விவாகரத்துகளுக்கு இதுவும் ஒரு காரணமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

மாறாக உங்களை எதற்குமே சாராத, இன்டிபென்டென்ட் பார்ட்னர் இன்னும் சிக்கலானவர். எப்போது என்ன செய்வார் என்று தெரியாது உங்களுக்கு. மேஸ் கேம் போலாகும் அவருடனான உங்கள் வாழ்க்கை. இதுவும் உங்களை மனச்சோர்வுக்கு ஆளாக்கும்.

உங்களை அதிகமாகச் சார்ந்திருந்தாலும், சுத்தமாகச் சாராதிருந்தாலும் அது நச்சு உறவே.

பயன்படுத்துவோர்

Toxic Relationship

ஆரம்பத்தில் நன்றாகப் பழகி அன்பு காட்டி, பிறகு உங்களிடமிருந்து சிறு சிறு உதவிகள் கேட்டுப் பெற ஆரம்பிப்பார். அந்த உதவிக்கு அத்தனை இனிமையாக நன்றி சொல்லி அதில் ஒரு போதையே உண்டாகிவிடும் உங்களுக்கு. இடைச்செறுகலாக சொற்ப பரிசுகள் வேறு எப்போதாவது அளிப்பார். காலப்போக்கில் அவருக்கு உதவுவது உங்கள் கடமை போலாகிவிடும். அதே நேரம் நீங்கள் எத்தனை உதவிகள் செய்தாலும் அவரைத் திருப்திப்படுத்தவே முடியாது. அவர் கேட்ட ஏதேனும் ஒரு உதவியை உங்களால் செய்யமுடியாமல் போய்விட்டால் உங்களைப் பாடாய்ப் படுத்தி வைத்துவிடுவார். இது போன்ற ஒரு உறவில் தொடர்வது லட்ச ரூபாய் கொடுத்து சின்ன சாக்லேட் வாங்குவது போன்றது.

தன்னுடைமை

Toxic Relationship

‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படம் இந்த வகை நச்சு உறவினைப் பிட்டு பிட்டு வைக்கும். பொஸஸிவ் பார்ட்னர் வாழ்வையே நரகமாக்கிவிட வல்லவர். சந்தேகப்படுவார். இல்லையென்றும் மறுப்பார். உங்கள் சக்தி அனைத்தையும் இரைத்து வெளியே கொட்டிவிடுவார். இத்தகைய உறவில் நீங்கள் சிறைப் பறவை. நீங்கள் நீங்களாக இருக்கவே இயலாது. அதே நேரம் அவருக்கு உங்கள் மீதிருக்கும் அதீத அன்பினை புரிய வைத்தும் விடுவாராகையால் உங்களால் அவரை விட்டுக்கொடுக்கவும் முடியாது. நஞ்சேறிய உறவுடன் உழன்று கொண்டே இருப்பீர்கள்.

கலவி, மது போன்ற பழக்கம்

Toxic Relationship

அதீத கலவி, இண்டிமசி விரும்பும் பார்ட்னர், உங்களின் உடல்-மன நிலை பற்றி சிந்திக்காமல் ரொமான்ஸை தனது உரிமையாக நினைத்து வாழ்வதும் நச்சு உறவே… இரவுகளின் கண்ட்ரோல் அவர்கள் கையில்தான். இதைப்பற்றி நீங்கள் யாரிடமும் புலம்பக்கூட முடியாது.
சப்ஸ்டென்ஸ் அப்யூஸ் செய்யும் பார்ட்னரால் பல நேரங்களில் உறவு நச்சாகிப் போய்விடும். குடி குடியைக் கெடுக்கத்தான் செய்யும் அல்லவா!

இதில் எவ்வகை நச்சு உறவில் நீங்கள் இருந்தாலும்

  • உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை,

  • நிம்மதி இல்லை,

  • அவரின் நண்பர்களை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கும்,

  • மிக அதிக நேரம் அவருடன் உங்களைச் செலவிட வைப்பார்,

  • நீங்கள் கட்டுப்படுத்தப்படுவதாய் நன்றாக உணருவீர்கள்,

  • நம்பிக்கை குறையும்,

  • ஒருதலை அன்புபோல் தோன்றத் தொடங்கும்,

  • பரஸ்பர பகிர்வு என்ற ஒன்றே இருக்காது,

  • எந்த பயமும் தயக்கமும் இன்றி நீங்கள் நீங்களாய் இருக்க முடியாது.

மேற்கண்ட நச்சு உறவுகளின் தீவிரம் ஒவ்வொருவரிடமும் மாறுபடும். இல்லற வன்முறை, உடலியல் தாக்குதல், திருமணம் தாண்டிய உறவு வைத்திருப்பது, வன்புணர்வு, சைக்கோதனமாக நடந்துகொள்வது இவையெல்லாம் உச்சகட்ட நஞ்சேறிப்போன உறவு. இவை பொறுத்துக்கொள்ளப்பட வேண்டியவை அல்ல. உடனடி நடவடிக்கைகள் தேவை.பிரிந்துவிடுவது சாலச்சிறந்தது.

லேசான, ஓரளவு மற்றும் நடுத்தரமான நச்சுத்தன்மையுடன் கூடிய உறவினை, விலக முடியாத பட்சத்தில், சரி செய்ய முயற்சிகள் செய்யலாம். உளவியல் ஆலோசனைகள் இங்கே பலனளிக்கும். மது போன்ற பழக்கங்களை நிறுத்த மறுவாழ்வு மையங்களை அணுகலாம். ஃபேமிலி தெரபி எடுத்துக்கொள்ளலாம். கவுன்ஸிலிங் நல்ல பலனளிக்கும். நச்சுத்தன்மையோடு உறவு செய்கிறோம் என்று உணர்ந்து திருத்திக்கொள்ள அவர் தாமாக முன்வந்தாலே நிம்மதியான வாழ்வு கேரண்டிதான்.

மொத்தத்தில்,

  • அங்கீகரித்து,

  • பகிர்ந்து,

  • மதித்து,

  • மகிழ்வித்து,

  • நேசித்து,

  • நம்பி,

  • புரிந்து,

  • பாதுகாத்து,

  • ரசித்து வாழ்வதே நச்சு அற்ற ஆரோக்கியமான உறவு.

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT