-கல்கி கி.ராஜேந்திரன்
கல்கி கி.ராஜேந்திரன் எழுதி, கல்கி பத்திரிகையில் தொடர் கட்டுரைகளாகப் பிரசுரமான ‘அது ஒரு பொற்காலம்’ தொகுப்பிலிருந்து சில துளிகள்...
விஜயாவிடம் ஒரு நாள், “அம்மாவுடைய ஒவ்வொரு இசைப் பணியிலும் அப்பாவுடைய முத்திரை பதிந்துதான் இருக்கிறது” என்றேன்.
“சந்தேகமென்ன”, என்றாள் விஜயா. “சுருதியும் லயமும் போலத்தான். அம்மாவுடைய ஒவ்வொரு கச்சேரியையும் அவளுடன் கலந்தாலோசித்து அப்பா திட்டமிடுவார். பல சமயங்களில் நிகழ்ச்சி நிரலை எழுதியே கொடுத்துவிடுவார்.”
“இதில் அபிப்பிராய பேதம் இருந்ததுண்டோ?”
“கலந்தாலோசனை என்றாலே சில கருத்து மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஹரிகாம் போதியை நிகழ்ச்சியில் சேர்த்தால் சங்கராபரணம் கூடாது என்பாள் அம்மா. ‘வராளி எழுதிட்டு, தோடியும் எழுதறேளே’ என்பாள். சில சமயம் அப்பாவும் சில சமயம் அம்மாவும் விட்டுக் கொடுப்பார்கள். அப்பாவுக்கு ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ என்ற பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதை லிஸ்ட்டில் போடுவார்.
அம்மாவோ, ‘போன கச்சேரியில்தானே பாடினேன்...’ என்று தயங்குவாள். ‘அதனால் என்ன? எனக்காக மறுபடியும் பாடேன்’ என்பார் அப்பா. ‘எனக்காகப்பாடு’ என்ற இரண்டு வார்த்தைகள் ஒரு மந்திரசக்தி போல வேலை செய்யும். அன்றைய கச்சேரியில் ஆபோகி ஆலாபனையும் கீர்த்தனையும் ரசிகர்களை எங்கேயோ கொண்டு போய் இசை வெள்ளத்தில் மூழ்கடித்துவிடும்!”
“அந்நியோன்னியம் இருக்கட்டும்; அப்பாவுடைய கோபமும் ஜகத் பிரசித்தியாயிற்றே?” என்று விஜயாவை நான் தூண்ட, “நீங்கதான் தார் மிகக் கோபம்னு அதை வர்ணிச்சிருக்கேளே” என்று அவள் பதிலடி கொடுத்தாள். பிறகு, “ஒரு நாள் கச்சேரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோமா... அப்பாவுடைய கோபம் காரிலேயே ஆரம்பமாகிவிட்டது” என்று பழைய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தாள்.
“அதென்னமா நீ சங்கராபரணத்துல மேல் ஸ்தாயியில் காந்தாரத்துக்குப் போயிட்டு பஞ்சமத்தைப் பிடிக்காம விட்டே’ என்று கண்டனக் குரல் எழுப்பினார். ‘என்னமோ தெரியலை; இன்னிக்கு ரொம்பக் களைப்பா இருந்தது’ என்றாள் அம்மா. அப்பா இந்தச் சமாதானத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ‘எப்படியும் என்றைக்காவது போக வேண்டிய உயிர்தானே; அது மேடையிலேயே போகட்டுமே’ என்றார். எங்களுக்குத் ‘திக்’கென்று இருந்தது. அப்பா தொடர்ந்து, ‘உன்னோ சங்கராபரணம் கேட்கணும்கிறதுக்காகவே எத்தனை பேர், எத்தனை செலவழிச்சுண்டு, எத்தனை ஆவலா வந்திருந்தா? அவாளுக்கு ஏமாற்றம் அளிக் கலாமோ?’ என்றார். ‘அடுத்த தடவை நன்னா பாடிடறேன்’ என்றாள் அம்மா. அந்தக் கணமே அப்பாவின் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. வீட்டுக்கு வந்து சேரும்வரை எல்லோரும் காரில் கலகலப்பாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தோம்.”
கணேச சாஸ்திரிகள், புது வருஷ பஞ்சாங்கத்துடன் என்னையும் விஜயாவையும் காண்பதற்கு வந்தார்... பஞ்சாங்கத்தைக் கையில் வாங் கியதும் பிரித்தேன். பிரித்த பக்கத்தில் எனக்குப் புரியாத லிபியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.
“இது என்ன, கிரந்த எழுத்தா?” என்று கணேச சாஸ்திரிகளைக் கேட்டேன்.
“ஆமாம்” என்றார். “கொஞ்சம் படிங்களேன், கேட்போம்” என்றேன். அவர் சில வரிகள் படித்து நிறுத்தினார்.
“அம்மாவுக்கு கிரந்த எழுத்து நன்றாகப் படிக்கவும் எழுதவும் தெரியும்” என்றாள் விஜயா.
“நிஜமாகவா?” என்று நான் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தேன். எம்.எஸ். அம்மா பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது போலிருக்கே என்று தோன்றியது. “எப்போது கற்றுக் கொண்டாள்?”
“எப்போது யாரிடம் என்பதெல்லாம் தெரியாது, சிறுமியாக மதுரையில் இருந்தபோதே எழுதப்படிக்க பழகி இருக்கிறாள்.“
கணேச சாஸ்திரிகளுக்கு சன்மானம் செய்து அனுப்பிவிட்டு விஜயாவிடம் பேச்சைத் தொடர்ந்தேன். “பள்ளிக்கூடம் போயிருக்காளா, அம்மா? எதுவரை படித்தாள்?”
“ஆறாவது வகுப்பு வரை, அப்போது ஒரு சமயம் வகுப்பாசிரியர் பலமாக அவள் தலையில் குட்டி விட்டார்! வலியை விட அதிகமாக அம்மாவுக்கு பயம் உண்டாகிவிட்டது. அதன் விளைவாகக் கக்குவான் இருமல் (whooping cough) வந்துவிட்டது! குணமாக ரொம்ப நாளாயிற்று. அன்று முதல் பாட்டி (ஷண்முகவடிவு) ‘பள்ளிக்கூடம் போக வேண்டாம்; வீட்டோடு இருந்து பாட்டுக் கற்றுக்கொண்டால் போதும்’ என்று சொல்லி விட்டாள்.”
“பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி தலையில் குட்டிய அந்த வகுப்பாசிரியரைக் கைகூப்பித் தொழ வேண்டும்” என்றேன். “நம் தேசத்துக்கு எவ்வளவு பெரிய தொண்டாற்றியிருக்கிறார்! பள்ளிக்கூடம், கல்லூரி என்று தொடர்ந்திருந்தால் அம்மாவின் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போயிருக்குமோ, யார் கண்டது?”
விஜயா என்னுடன் சேர்ந்து சிரித்தாள். “அபூர்வமாக அம்மா, பழைய நினைவுகளில் ஆழ்ந்து பேசுவாள். மதுரையில் சிறுமி சுப்பு லக்ஷ்மியுடன் விளையாட அடிக்கடி ஒரு சிறுவன் வருவான். யார் தெரியுமா?...”
“ரொம்ப ஆவலைத் தூண்டாதே, சீக்கிரம் சொல்லு!”
“மணி! பின்னாளில் மதுரை மணி அய்யர் என்று பிரசித்தி பெற்றவர்தான்!”
“அட! என்ன விளையாடுவார்கள்?”
“சங்கீதம் தொடர்பான விளையாட்டுகள்தான். யார் அதிக நேரம் கார்வை நிற்க முடியும் என்பதில் ஒரு போட்டி!”
“ஜெயித்தது யார்?”
“அதை அம்மா சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை.”
“அப்புறம்? வேறென்ன விளையாட்டு?”
“போட்டிக்குள் ஒரு போட்டி! தம்புரா மீட்டிய படியே பாடி கார்வையில் நிற்பார்கள்; தம்புரா மீட்டுவதை நிறுத்தி விடுவார்கள்; சற்று நேரம் சென்று மறுபடி தம்புரா மீட்டி சுருதி சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள்!”
“அம்மாவுக்கு படிக்கவில்லையே, பட்டம் பெறவில்லையே என்ற வருத்தம் இருந்ததுண்டா?”
“அப்படி எண்ணிப்பார்த்து வருந்துவதற்குக்கூட அவளுக்கு நேரமிருந்ததில்லை. சங்கீத உலகில் அவள் வளர்ச்சி வேகம் அப்படி இருந்தது. மேலும், படிக்கவில்லை என்று தாழ்வு மனப்பான்மை ஏற்படாமலிருக்க அப்பாவும் ரொம்ப முயற்சி எடுத்துக்கொண்டார்.”
“அம்மா, குட் ஷெப்பர்ட் கான்வென்டுக்கு தினசரி போய் ஆங்கிலம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது” என்றேன்.
“ஆங்கிலம் தெரிந்த ஒருவர் டியூஷன் எடுத்தால் போதாது; ஆங்கிலத்தையே தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் டியூஷன் எடுக்க வேண்டும் என்பதால் அப்பா செய்த ஏற்பாடு அது. மதர் சிசிலியாவுக்குத்தான் அம்மாவுக்குக் கற்றுத் தரும் வாய்ப்பு கிடைத்தது.”
“கன்னடமும், தெலுங்கும் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமே?”
“அர்த்தம் புரியும்; பேசவும் முடியும். ஆனால் எழுதிப் படிக்கப் பழக வில்லை. சமஸ்கிருதம் படிக்கவும் எழுதவும் கற்றுத் தர அப்பா ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்தார்.”
“ஹிந்தி மீரா படப்பிடிப்பின் போது ஹிந்தி வகுப்பு எடுக்க வீழிநாதன் வருவார் இல்லையா?”
“ஆமாம்; டயலாக் பேசினால் போதாது; அந்த பாஷையையே தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஈடுபாடு ஏற்படும் என்பது அப்பாவின் கருத்து.”
“அம்மாவுடைய விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுவிட்டு, ‘பல வருஷங்கள் வேத அத்யயனம் பண்ணினவர்கள் கூட இப்படி ஸ்பஷ்டமாக உச்சரிக்க முடியாது’ என்று அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சன்னதில் ஆச்சர்யமில்லை” என்றேன்.