கல்கி

இங்கி - பிங்கி - பாங்கி போட்டு தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்தீர்களா?

ஆதித்யா

“இந்த தேசத்தில் தேர்தல் கமிஷன் என்பது ஆளும் அரசுக்கு “ஆமாம் சாமி”  போடும்  ஆட்களையே நியமித்துக்கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு சுதந்திரமும் கிடையாது”  இதைச்சொன்னது வழக்கமாக அரசின் செயல்பாடுகளில் குறைகாணும் சாமானியன் இல்லை. சொல்லியிருப்பவர் உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.எம். ஜோசப். இவர் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தலைவர். 

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அரசியல் சாசன அமர்வில்  நடைபெற்று வருகிறது.

அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘தேர்தல் ஆணையம் பலவீனமாக இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் போன்ற பலமான நபர்கள் பதவிக்கு வரும் வகையில் தேர்தல் ஆணையத்தை வலுவுடன் மாற்ற இந்த நீதிமன்ற அமர்வு விரும்புகிறது என்றார். 

‘”1991ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சேவை மற்றும் சம்பள சட்டமானது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது. “தேர்தல் ஆணைய நியமனங்களில் விதிமுறை மீறல் இருக்கிறது” என்றால் நிச்சயமாக நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால், யாரை நியமிப்பது என்பதில் ஒன்றிய அரசிடம் உள்ள அதிகாரங்கள் மிகவும் முக்கியமானது’ என்ற வாதத்தை முன்வைத்தார் அரசின் அட்வகேட் ஜெனரல் கே.கே. வேணுகோபால். 

 ஆனால் நீதிபதிகள், ‘‘ஒன்றியத்தில் ஆளும் ஒவ்வொரு கட்சியும் தன்னைத்தானே அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது. 1991ம் ஆண்டு சட்டமானது, தேர்தல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் சேவை விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்கிறது. இதை சட்டத்தின் பெயரை பார்த்தாலே தெரியும். ஆனால், இதைத் தாண்டி ஓர் அமைப்பின் சுதந்திரத்தை உறுதி செய்ய பல விஷயங்கள் உள்ளன. அரசாங்கமானது தனக்கு ‘ஆமாம் சாமி’ போடுபவர்களையே தேர்தல் ஆணையர்களாக நியமிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த அந்த சமயத்தில் சட்டம் அவருக்கு சம்பளம், பதவிக்காலம் என அனைத்து விஷயத்திலும் விலக்குகளை வழங்கிறது. அந்த சமயத்தில் ஆணையத்தின் சுதந்திரம் எப்படி உறுதி செய்யப்படும்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் கொலிஜியம் போன்ற அமைப்பு வேண்டும். அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும். அப்போதுதான் ஆணையத்தின் சுதந்திரம் உறுதி செய்யப்படும்  என்ற ஆலோசனையும் சொல்லியிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமர்வின்  இந்த கோபத்துக்கு காரணம் இப்போதைய  தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்தான்.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார். இவர் ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாள், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 

 நீதியரசர்கள் “எவ்வாறு தேர்தல் ஆணையராக நியமனம் செய்தீர்கள்? இங்கி-பிங்கி போட்டு நியமித்தீர்களா? என்றெல்லாம் மிக கடுமையாக விமர்சித்து கேள்விகள் எழுப்பினர். அதோடு அவரது நியமனம் சம்பந்தப்பட்ட கோப்பை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டிருக்கின்றனர். 

ஒன்றிய அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல்  இதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோது, “தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகளை அறிந்து கொள்ளவே அந்த ஆவணங்களை கேட்கிறோம்’ அதனால் உடனடியாக சமர்பிக்க வேண்டும்”  என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்.

மோடி அரசு கொலிஜியம் முறை ஆலோசனையை ஏற்குமா? மறுக்குமா? என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT