பூவா? தலயா?’ நாடகம்  
கல்கி

‘பூவா? தலயா?’ – நாடக விமர்சனம்! (டைரக்டர் கே.ஆர்.பரமேஷ்வரின் பகிர்வு)

மும்பை மீனலதா

டந்த 45 வருட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ITC (Indian Theatre Centre) நாடகக் குழுவின் ‘பூவா? தலயா?’ நாடகம் சமீபத்தில் சென்னை குரோம்பேட் கல்ச்சுரல் சென்டர், நாரத கான சபா, வாணி மஹால் ஆகிய மூன்று இடங்களில் அருமையாக நடந்தேறியது. பல பிரபலங்கள் வந்து நாடகத்தைச் சிறப்பித்தனர். நூற்றுக்கணக்கான ரசிகப் பெருமக்கள் பாராட்டினர்.

மராத்தி மொழியில் ‘இராவத் கர்ணிக்’ என்பவர் இயக்கிய ‘சாப்பா காட்டா’ என்கிற பிரபல மராத்தி நாடகத்தின் தமிழாக்கம்தான் ‘பூவா? தலயா?’ இந்நாடகத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, இதனை திறம்பட தயாரித்து இயக்கிய கே.ஆர். பரமேஷ்வர் பற்றி சில வரிகள்...

நாடகமே மூச்சு என நினைக்கும் கே.ஆர். பரமேஷ்வர், பேங்க் ஆஃப் பரோடாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சீனியர் சிட்டிசன் என்றாலும், சுறுசுறுப்பான மனதுடன் செயல்படும் இவருக்கு கோவிட் சமயம் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது. இப்போதும் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார். எனினும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் இந்நாடகத்தை இயக்கியுள்ளார்.

சிறு வயது முதலேயே படிப்படியாக நாடகம், டப்பிங், சினிமா, வெப் சீரிஸ், சீரியல் என எல்லாத் துறைகளிலும் அமர்க்களமாக பங்கேற்று வருகிறார். நாடகத்தில் ஈடுபாடு வந்தவிதம், தயாரித்து இயக்கியது மற்றும் பல சுவாரசியமான விஷயங்களைக் குறித்து அவர் பகிர்ந்தது பின்வருமாறு:

கே.ஆர். பரமேஷ்வர்

அவரே கூறுகிறார்:

“பள்ளி நாட்களில் இருந்தே நாடகம் என் வாழ்வில் புகுந்துவிட்டது. கே.பாலசந்தர், நாகேஷ்,  மேஜர் சுந்தரராஜன், சோ, க்ரேஸி மோகன் ஆகியோர் நடித்த நாடகங்கள் மும்பை ஸ்ரீசண்முகானந்தா சபாவில் நடக்கையில், அரை டிரெளஸர் அணிந்து தந்தை வழி மாமாவுடன் சென்று பார்ப்பது வழக்கம். அவர்களின் நடிப்பை கூர்ந்து கவனிப்பேன்.

நான் பயின்ற SIWS பள்ளியில், ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும், கலை நிகழ்வு வகுப்பு நடப்பதுண்டு. அதை உன்னிப்பாக பார்த்த எனக்கு, அது அவ்வளவாக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. சற்றே வளர்கையில், நாடகக்கலை குறித்து பயின்று அதில் சிறந்த ஆளாக வரவேண்டுமென முடிவெடுத்தேன். ஆனால், வீட்டில் ஊக்கமளிப்பு கிடைக்காத காரணம் 1970ஆம் ஆண்டு பேங்க் ஆஃப் பரோடா வேலையில் சேர்ந்தேன். மாலை நேரங்களில் UNESCO Course in Theatreல் சேர்ந்து படித்தேன். Parisலிருந்து சான்றிதழ் கிடைத்தது.

நாடகத்துறையில் மேலும் பயிற்சி பெற, NSD டெல்லியில் சேர எண்ணினேன். அங்கே ஸ்காலர்ஷிப் கிடைக்காத காரணம், UNESCO Courseல் இருந்த என்னுடைய ஆசிரியர் ஒருவருடன் இணைந்து மாலை 6 முதல் இரவு 12 மணிவரை, மூன்று வருடங்கள் அறிவியல் மற்றும் தொழில்ரீதியாக பயிற்சி எடுத்தேன். பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

பின்னர், அம்பேத்கர், போதார், எல்ஃபின்ஸ்டன், St.ஸேவியர், SNDT ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 6 வெவ்வேறு மொழிகளில் டிரெயினிங் கொடுக்க ஆரம்பித்தேன். Inter-College Drama, One-act Play போன்ற போட்டிகளில் அவர்கள் பங்கேற்க நாடகம் எழுதி டைரக்ட் செய்தேன். சிறந்த நடிகர் விருது அவர்களுக்குக் கிடைக்க, சிறந்த டைரக்டர் விருது எனக்கும் கிடைத்தது.

பிரபல நாடகக் கலைஞர்களுடன்...

பிரபல தமிழ் எழுத்தாளர்களாகிய ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், பாலகுமாரன், கோமல் ஸ்வாமிநாதன், வைரமுத்து ஆகியோர் எழுதிய சிறு கதைகள், நாவல்கள் போன்ற வற்றை நாடகத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தேன்.
ஸ்ரீ சண்முகானந்த சபாவின் 50ஆம் வருட கோல்டன் ஜுபிலி விழா சமயம், ஒரிஜினல் மராத்தி நாடகத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து ‘அம்மா ரிடையர் ஆகிறாள்’ நாடகத்தை டைரக்ட் செய்ய, அது வெற்றிகரமாக நடந்தது.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் 100ஆவது பிறந்தநாள் விழாவின்போது, அவரது வாழ்வினை பிரதிபலிக்கும் விதத்தில் நாடகம் தயார் செய்து போட்டதை அனைவரும் பாராட்டினார்கள்.

என்னிடம் பயின்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி பெற்றவர்களில் பலர் முழுநேர தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் சத்யா, அண்ணாமலை, பாட்ஷா போன்ற பிரபல படங்களை டைரக்ட் செய்த சுரேஷ் கிருஷ்ணா.

நாட்கள் செல்ல செல்ல, சுலபாதேஷ் – பாண்டே, நானா படேகர், பக்தி பர்வே, அம்ரிஷ் புரி, டாக்டர் லாகூ, எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் போன்றோர் புரமோட் செய்த ‘சபில்தாஸ்’ தியேட்டரில் நாடகங்கள் செய்ய, பட்டம் பெற்றேன்.

முரண்டு; சாலிகிராமம்; காக்கை சிறகினிலே; கிராம ராஜ்யம், சப்தபதி; இதுவரை நான் போன்ற பல நாடகங்களை இயக்கினேன். எல்லாமே பாராட்டப்பட்டன.

ஆஸ்திரேலிய நாடக ஆசிரியர் எழுதிய ஆங்கில நாடகமான ‘அன்னா ஹசாரே’யை அவரின் அனுமதி பெற்று வாங்கி தமிழாக்கம் செய்து இயக்கி மேடையேற்ற, நல்ல வரவேற்பு கிடைத்தது.

(மறைந்த) டைரக்டர் கே. பாலசந்தர் சார் கூட, தன்னுடைய நாடக க்வாலிட்டி மாதிரியே என்னுடையது இருக்கிறதெனக் கூறுவதுண்டு. மராத்தி நாடகங்களிலும் க்வாலிட்டி இருக்குமென சொல்வார். எனது ‘முரண்டு’ நாடகத்தை மேடையில் கண்ட டைரக்டர் பாரதிராஜா, ஒரு சினிமாவை பார்த்த மாதிரியே இருக்கிறதென பாராட்டினார். நடிகை ரேவதி, என்னுடைய ஒரு நாடகத்திலாவது நடிக்க வேண்டுமெனக் கூறியதுண்டு.

என் பணி ஓய்விற்குப் பிறகு ஹரே கிருஷ்ணா மூவ்மெண்ட் (ISKCON) குழுவில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மே மாதத்தில் நாடகப் பயிற்சி அளித்து வருகிறேன். ஒரு நாடகம் போடுவதற்கு செலவு அதிகம்தான் ஆகிறது. ஸ்பான்ஸர் கிடைத்தால் உதவியாக இருக்கும். நாடகக் கலையும் வளரும். எங்கள் நாடகக் குழுவின் 45ம் ஆண்டு நிகழ்விற்கு என்னுடைய நெருங்கிய நண்பர்களே உந்து சக்தி. எனக்கு ஊக்கமளித்து, முடிந்த நிதியுதவியும் செய்ததை மறக்க இயலாது.”

பூவா? தலயா? - விமர்சனம்

பொதுவாகவே, உலகில் பலவகைப்பட்ட தாய்மார்கள் உண்டு. Emotional (உணர்ச்சி) மற்றும் Selfish (சுயநலம்) அட்டாச்மெண்டு அவர்களிடம் இருக்கும். இந்த நாடகத்தில் இரண்டாவது அட்டாச்மெண்டு காட்டப்படுகிறது. முதிர் கன்னியாகிய தனது ஒரே மகளை தன்னுடன் வைத்துக்கொள்ள தாயார் போடும் நாடகம், மகளின் பாசம், இயலாமை, கோபம் என அம்மா – பெண் இருவரின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு, இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வழி வகுக்கிறது.

நாடகத்தில் நடித்த நான்கு ஆர்ட்டிஸ்ட்களும் அவரவர் கதாபாத்திரமறிந்து சிறப்பாக நடித்தனர். இரண்டு பேர்கள் சென்னை, ஒருவர் பெங்களூரு, இன்னொருவர் மும்பை. Zoom, வாட்ஸ் ஆப் வழியே ரிகர்ஸல் நடைபெற்றது.

(குடும்ப மருத்துவர் ராகவனாக பெங்களூரைச் சேர்ந்த பாலாஜி; அன்பும் அக்கறையும் கொண்ட காதலன் அஷோக்காக சென்னையைச் சேர்ந்த நீலகண்டன், அம்மாவையும், காதலனையும் விட்டுக் கொடுக்க இயலாமல் தவிக்கும் பெண் ரஞ்சனியாக சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா; மகளின் மீது கொண்ட பாசத்தினால், அவளை விட முடியாமல் பரிதவிக்கும் தாயார் சரோஜாவாக மும்பையைச் சேர்ந்த ஆர். மீனலதா ஆகியோர் நன்கு நடித்தனர்.)

லைட்; மியூஸிக், Back stage உதவி, தேவையான பொருட்கள் ஏற்பாடு போன்றவைகளை கே.குமார், கணேசன், சந்தர், பாலா ஐயர், ராஜேஷ், சங்கர் ஐயர், முரளி, சாரி சார் போன்றோர் அருமையாக கையாண்டனர். அநேக மும்பை மற்றும் சென்னை நண்பர்கள் மிகவும் உதவியாக இருந்து செயல்பட்டனர். Settingsம் நன்றாக போடப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பில் உதவியவர் ஜி. ராமகிருஷ்ணன் (ராம்கி) ஆவார். புதுமாதிரியான மெலோ டிராமா ‘பூவா? தலயா?’ (Chapa – Khata).

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT