Building  
கல்கி

கட்டிட அனுமதி பெற என்னென்ன விதிமுறைகள் இருக்கு தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் எண்ணற்ற கட்டிடங்கள் உள்ளன. பொதுவாக கட்டிடம் கட்டுவதற்கு அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டியது அவசியம். இதனை எளிமைப்படுத்தும் விதமாக தற்போது ஆன்லைனிலேயே விண்ணப்பித்து கட்டிட அனுமதியைப் பெற முடியும். இதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இணைய வழியாக தமிழக அரசிடம் கட்டிட அனுமதி பெற www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பித்து அரசின் அனுமதி கிடைத்த பிறகு, 5 ஆண்டு காலம் வரை இது செல்லுபடியாகும். அதற்குள் கட்டிட வேலைப்பாடுகளை முடித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும், கட்டிட அனுமதி பெற சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள்:

1.விண்ணப்பதாரர்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதை கட்டிட அனுமதிச் சான்று உறுதிப்படுத்தாது.

2. கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் விவசாய நிலங்களாகவோ, சாலை அமைக்க ஒதுக்கப்பட்டதாகவோ, பொழுதுபோக்கு பயன்பாட்டு நிலமாகவோ மற்றும் வேறு ஏதேனும் நிறுவனத்திற்கு சொந்தமானதாகவோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் கட்டிட அனுமதி தானாகவே ரத்து செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

3. கட்டிட வரைபட அனுமதி மற்றும் விண்ணப்பதாரரின் சுய சான்றொப்பம் இட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உரிய தண்டனை அளிக்கப்படும்.

4. ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை மதித்து, அதற்கேற்ப தான் கட்டிடங்களைக் கட்ட வேண்டும். கட்டிட வேலையின் போது ஏதேனும் விதிமீறல்களைக் கண்டறிந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

5. கட்டிட வரைபட விண்ணப்பத்தில் காட்டப்பட்டிருக்கும் கட்டிட வடிவமைப்பு, கம்பி, கான்கிரீட், பயன்படுத்தப்படும் மரங்கள், அடித்தளம், தண்ணீர் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஆகியவை உரிய விதிகளின் படி தான் அமைக்கப்பட வேண்டும்.

6. சாலையோரங்களில் கட்டுமான பொருள்கள் மற்றும் கழிவுகளைக் கொட்டுதல் கூடாது. குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

7. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, அடுத்த 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரர் சொத்து வரியை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

விண்ணப்ப கட்டணம்:

தமிழக அரசிடம் கட்டிட வரைபட அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரை செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தரநிலையைப் பொறுத்து மாறுபடும். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் கட்டிடத்திற்கான லைசென்ஸ், வளர்ச்சிக் கட்டணம், சாலை சேதத்தை சீரமைக்கும் கட்டணம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதி என அனைத்தும் அடங்கிவிடும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT