என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாமனிதர் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல்.
நான் பள்ளி பயின்ற காலம் 1980லிருந்து 1988 வரை எங்கள் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடிய நேரம். இரவு ஒரு வேளை மட்டுமே உணவு என்பதுதான் எங்கள் வாழ்க்கையாக இருந்தது. பட்டினி எங்களோடு குடும்பம் நடத்தியது.
இக்காலகட்டத்தில் பள்ளி படிப்பில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் மன வைராக்கியத்துடன் சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல் பள்ளிக்குச் செல்வேன். அங்கே மதியம் தரப்படும் சத்துணவுதான் என் ஒரு வேளை சாப்பாடாகவும் இருந்தது, பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை பொன்மனச் செம்மலின் லட்சிய திட்டமான சத்துணவு திட்டம் மூலம்தான் நான் பசியாறினேன் என்பதை இன்றும் நான் நன்றியுடன் நினைக்கிறேன்.
இன்று பத்திரிக்கை துறையிலும், நான் பணியாற்றும் இடங்களிலும், துடிப்போடு செயல்படுகிறேன் என்று சொன்னால், அதற்கு அது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களின் சத்துணவு திட்டத்தால் கிடைத்த ஊட்டச்சத்துதான் காரணம்.
எத்தனை ஏழைகளின் பசியை போக்கியவர் தெரியுமா? அதில் நானும் ஒருவன் என்பதை பெருமைகொள்கிறேன். இன்றைக்கும் அவரின் மறைவு நாள் மற்றும் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்கி கொண்டுதான் இருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அற்புத மனிதரைக் காண்பது இனிமேல் கடினம்.
என்னைப் போன்ற ஏழைகளின் பசியை போக்கியவர். என்னைப் போலவே லட்சக்கணக்கான மக்கள் இதயத்தில் இன்னும் இதயக்கனியாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் பொன்மனச் செம்மல்.
இன்றும் அவரைப் பற்றி நினைத்தாலும் கடந்த கால வாழ்க்கையை நினைத்தாலும் கண்களில் நீர் கசிகிறது. ஐயா உங்களைப் போன்ற மனித நேயர்கள் இனி பூமியில் பிறக்க மாட்டார்கள். அவரின் மறைவு நாளிலே குடும்பத்துடன் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்.