சேர். அல்ஃபிரடை உங்களுக்கு தெரிந்திருக்காது. அது அவன் பெயர் அல்லவே! அவன் 1945ல் ஈரானில் பிறந்தபோது அவனுக்கு வைத்த பெயர் மெஹ்ரான் கரிமி நாசேரி. அவன் தந்தை ஈரானின் Anglo-Iranian எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்களுக்கான டாக்டராக வேலை பார்த்ததால் வீட்டில் செல்வம் குடிகொண்டது. அவனுக்கு நான்கு சகோதரர்களும் இரு சகோதரிகளும் இருந்தனர். அவனது 20வது வயதில் தந்தையை இழந்தது மட்டுமல்லாமல், அவன் பிறப்பின் பின்னால் மறைந்திருந்த ஒரு பெரிய ரகசியத்தையும் அவன் அறிந்து அதிர்ந்தான். தான் தாய் என எண்ணியவள் தன் தாயல்ல...... தன் தந்தைக்கும் அவருடன் பணிபுரிந்த ஸ்கட்லாந்தைச் சேர்ந்த தாதிக்கும் மகனாய் பிறந்தேன் என்ற உண்மையை அவன் அறிந்துகொண்டான். இதைச் சொன்னதே அவன் 'தாய்'தான் என்றான்! அக்காலங்களில், ஈரானிய சமூகக் கட்டமைப்பில் இது போன்ற பாதை மாறிய உறவுகள் பந்திக்கு வருவதில்லை. இது தண்டனைக்குரிய குற்றம் கூட. எனவேதான் அவன் கண்களுக்கு இது மறைக்கப்பட்டது என்றான். தந்தையின் மறைவிற்குப்பின் இவன் குடும்பமே இவனை தனியனாக்கியது என்று கூறிக்கொண்டான்.
அவன் வாழ்வு பல மர்மங்கள் நிறைந்தது. இவற்றில் இதுவும் ஒன்று. எப்படியும் தாயை கண்டடைவேன் என்ற வேட்கையின் வித்து அன்று அங்கு விதைக்கப்பட்டது.
இவனின் முதல் வெளிநாட்டுப் பயணம் 1973ல் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்பதற்கே. கல்வியை ஒரு வருடத்திலேயே பாதியில் இடைநிறுத்திக்கொண்டு நாடு திரும்பினான்.
1977ம் ஆண்டு. ஈரானின் ஆட்சி பீடத்தில் மன்னர் முகமது ரேசா ஷா வீற்றிருந்த நாட்கள் அவை. ஈரானிய புரட்சி துளிர்விட்டு நாடே எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த கோர நாட்கள். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டான்..... சிறை கண்டான்... அடுத்த நிகழ்வு அவன் வாழ்வில் இடியாய் இறங்கிற்று.
நாடு கடத்தல் உத்தரவு!
பத்து மாதங்களில் காலாவதியாக இருக்கும் கடவுளச்சீட்டுடன் 1988ல் பிரான்ஸ் நாட்டில் தடம்பதித்தான். அவன் திட்டம் லண்டன் நகரை அடைந்து அங்கிருந்து ஸ்காட்லாந்தில் தன் அன்னையை காண்பதுதான். ஆனால் விதி நினைத்ததோ வேறு!
பிரான்ஸின் சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்திலிருந்து லண்டன் விமானத்தில் வந்திறங்கியவனுக்கு அங்கு ஓர் அதிர்ச்சி. அவனிடம் லண்டனுக்குள் நுழைவதற்கான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் வந்த வழியே திரும்பி சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டான். பிரான்ஸ் வீதியில் எல்லா ஆவணங்களையும் பறிகொடுத்த கதையை நம்பவா போகின்றனர்? "இவன் ஒரு அகதி" என்று ஐ.நா வழங்கிய ஆவணங்களையுமல்லவா தொலைத்துவிட்டான்?
எங்குதான் போவான் இவன்?
பிறந்த நாடும் 'வராதே, போ' என்கிறது.
பெற்ற அன்னையை காண்பதற்கான கதவுகளும் மூடிக்கொண்டன.
ஆனால், அவன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தின் கதவுகள் அகலத் திறந்துகொண்டன.
அவனை திருப்பி அனுப்பியபோது பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம் அவன் கைகளில் திணித்த உத்தியோகபூர்வ கடிதத்தைப் பிரித்துப்படிக்கிறான்: "Sir, Alfred Mehran" என்று தொடங்குகிறது அக்கடிதம். ஏன் இதையே என் புனைப்பெயராக வைத்துக் கொள்ளக்கூடாது என்கிறது அவன் குறும்பு மனது. இனி அவன் பெயர் : சேர், அல்ஃபிரட் மெஹ்ரான்!
விமான நிலையத்தின் கதவுகளைத் கடந்து வீதிக்கு வருகிறான். அவன் கையில் எந்த ஆவணங்களும் இல்லை. சுற்றிவளைத்துக்கொள்கிறது பிரெஞ்சு போலீஸ். "சட்டவிரோதமாய் குடியேறினான்" என்ற நாமத்துடன் ஆறு மாதங்கள் சிறை காண்கிறான். மாதங்கள் கழிய சிறைக்கதவுகள் திறந்துகொள்கின்றன. விடுதலை! எங்கு போவான் இவன்?
அவனுக்குத் தெரிந்த ஒரு இடம் சார்ல்ஸ் டி கால் விமான நிலையம் ஒன்றே.
விமானநிலையத்தின் கதவுகள் விரிந்து அவனை வரவேற்கின்றன. இனி இதுதான் சேர். அல்ஃபிரட் மெஹ்ரானின் இராட்சியம்!
எத்தனை நாட்கள் இங்கு தங்குவதாம்?
கேள்வி தவறு. எத்தனை வருடங்கள் என்று மாற்றி வாசியுங்கள். ஆம், இந்த டெர்மினல் -1 இல் 26 ஆகஸ்ட்1988 முதல் 2006 வரை வாழ்வை கரைக்கப் போகிறான் இவன்.
பிரெஞ்சு சட்டத்தின் கரங்கள் இவனை விமான நிலையத்தினுள் தொட முடியாது. நாடற்றவனை எப்படி நாடு கடத்துவதாம்? அதை அவன் அறிவான். அவனை அங்கிருந்து நகர்த்த எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
விமான நிலையத்தினுள் ஒதுக்கப்புறமாய் இருந்த ஒரு செந்நிற இருக்கையே அவன் வாழ்விடம். அந்த 18 வருடங்களில் அவனைச் சுற்றி காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன. உலக தலைவர்கள் தோன்றி மறைந்தனர். பங்குச்சந்தைகள் ஏறி இறங்கி துள்ளிக் குதித்தன. உறவுகள் துளிர்த்தன....உதிர்ந்தன. போர்கள் வெடித்தன. மழலைகள் பேசின. கல்லறைகள் மெளனமாகின. ஆனால், அவன் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.
தன் அனுபவங்களை நாட்குறிப்பில் பதிந்தான். அவன் நிலையை உலகு கண்டுகொண்டது. பல பத்திரிகைகளில் அவன் பேட்டிகள் வெளிவந்தன. ரசிகர் கடிதங்கள் குவிந்தன. ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 1998ல் இவன் வாழ்க்கை "Flight" எனும் பெயரில் நாடகமாய் மேடையேறியது. அவன் கதையை கருவாக வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 2003ல் The Terminal எனும் திரைப்படத்தை தயாரித்து தன் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொண்டார். நிஜத்தை நிழலாக்கும் இந்த முன்னெடுப்பில் அவன் பங்கு $250,000. விமானநிலைய சேமிப்பு வங்கியில் இப்பணத்தை வைப்பிலிட்டான். பல பயணிகளும் நல்ல மனங்களும் இவனுக்கு நன்கொடையளித்தனர். இவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. நடைபிணமாய் நாட்களை நகர்த்தும் இவனுக்கு பணத்தின் வலிமை பூஜ்யமே!
அவன் மாறிக்கொண்டே இருந்தான். இல்லை... தவறு. இந்த சுற்றமும் சூழலும் அவனை மாற்றிவிட்டது. இப்போது அவன் தான் ஈரானை சேர்ந்தவன் என்று தன்னை அடையாளப்படுத்துவதே இல்லை. ஆங்கிலத்திலேயே பேசுகிறான். ஈரானிய பாசி மொழியில் பேச மறுக்கிறான். தன்னை புறம்தள்ளிய நாட்டை ஒதுக்கிவிட்டான். தன்னை சேர், அல்ஃபிரட் மெஹ்ரான் என்றே அறிமுகப்படுத்துகிறான்.
முன்னரைப் போல் எல்லாப் பயணிகளோடும் உரையாடி காலங்கடத்தாமல் பத்திரிகையாளர்களிடமும் எழுத்தாளர்கள் மற்றும் அவனைப் பற்றி எழுத ஆர்வமுள்ளவர்களிடமே பேசுகிறான். 'நான் பிரபலமாகிவிட்டேன்' என்று அவர்களிடம் கூறுகிறான். தினமும் முகச்சவரம் செய்து தலைவரி சுத்தமான ஆடைகளை அணிகிறான்.
ஆம், அவன் மாறித்தான்விட்டான்!
ஜுலை 1999ல், தொலைந்துபோன இவனது ஆவணங்கள் பெல்ஜியம் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆவணங்களில் இருப்பது நானல்ல என "நான் அவனில்லை" பாணியில் மறுதலித்தான். தன் கடந்த காலங்களை தொலைத்துவிட்டான்.
பல ஆண்டுகளாக எழுதிய தனது சுயசரிதையை “The Terminal Man” எனும் பெயரில் 2004ல் வெளியிட்டான். இதைப்படித்தவர்கள் ஒரு நிஜ மனிதன் தான் உருவாக்கிய அனுமாஷ்ய உலகில் எப்படி வாழ்கிறான் என்பதையே கண்டனர்.
தான் வாழும் சூழலுக்கு ஏற்றாற்போல் நிறம் மாறும் பச்சோந்தியாய் வாழப்பழகிக் கொண்டான் அவன். அவனை தேடி வந்த சகோதரர்களையும் உறவினர்களையும் மறுதலித்தான். “அவன் வளர்ப்புத்தாய்தான் அவனைப் பெற்றதாய்” என்ற உண்மை பின்னர் வெளியாகியும் கூட அதை நம்ப மறுத்தான். அவன் சொன்னாற்போல் ஈரானில் அவன் கைது செய்யப்படவும் இல்லை நாடு கடத்தப்படவும் இல்லை.
எல்லாம் இவன் உருவாக்கிய ஒரு மாய உலகே. அந்த அனுமாஷ்ய உலகே அவனை ஆட்கொண்டு விழுங்கி ஏப்பம்விட்டுவிட்டது!
ஜுலை 2006ல் கடும் சுகவீனமுற்ற இவனை விமானநிலையத்தில் இருந்து அண்மையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். பல மாத சிகிச்சையின் பின் 2007ல் அரச விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஒரு சுதந்திரப் பறவையாக தன் வாழ்வை தொடங்கினான். எப்போது அவன் தன் மாய உலகை விட்டு வெளியேறினானோ அன்றே அவனைப் பற்றிய ஆர்வம் முடிவுக்கு வந்தது. அவனை தேடுவாரில்லை.
இம்மாதம் பிரான்ஸின் சார்ல்ஸ் டி கால் விமானநிலையத்தின 2F தளத்தில் தன் 77வது வயதில் மீண்டும் கால்பதித்தான் மெஹ்ரான் கரிமி நாசேரி எனும் சேர், அல்ஃபிரட் மெஹ்ரான்! 18 ஆண்டுகளாய் அவன் உருவாக்கிய அந்த அமானுஷ்ய உலகில் அவன் சுவாசக்காற்று இறுதியாய் 12ம் தேதி விடைபெற்று விண்ணில் கலந்தது!
அவனை எழுப்பாதீர்;
அமைதியாய் தூங்கட்டும்!
ஆழ்ந்த துயிலினிலே
அமைதியினை காணட்டும்.
- கவிஞர் கண்ணதாசன்