good friday Image
good friday Image Image credit - pixabay.com
கல்கி

புனித நாளாம்... புனித வெள்ளி!

கே.என்.சுவாமிநாதன்

புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் நாள். இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் துக்கம், தவம் மற்றும் நோன்பு அனுசரிக்கும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலான கிறிஸ்துவ தேவாலயங்களில், இன்றைய தினம் விசேஷ பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, அவர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சி, சிலுவையில் இருந்த போது அவர் மக்களுக்கு விடுத்த கடைசி செய்தி ஆகியவை பிரசங்கங்களின் மூலமும், பாடல்கள் மூலமும் நினைவு கூறப்படுகின்றன. சிலர் இந்த நாளில் விரதமிருக்க, சிலர் இந்த நாளில் மாமிச உணவைத் தவிர்ப்பர்.

இந்த நாள் துக்ககரமான நாள் என்றால், ஏன் இந்த நாளை “நல்ல வெள்ளி” என்று கூறுகிறோம்? இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டது, அவர் மனித குலத்தின் நன்மைக்காக விரும்பி ஏற்றுக் கொண்ட தியாகம் என்பது கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கை. மேலும், இது நடந்த மூன்றாவது நாள் இயேசு பிரான் உயிர்த்தெழுந்தார். அவர் உலக மக்களுக்கு அறிவித்த செய்தி, “மனிதனே, நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். உங்களுக்கு நல்லது செய்வதே எனது நோக்கம்.” இறந்த பிறகும் இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். ஆகவே, இந்த நாள் புனித நாள், மனித குலத்திற்கு நல்ல நாள். இந்த நாள் கருப்பு வெள்ளி, பெரிய வெள்ளி, ஈஸ்டர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.

இயேசு பிரான் சிலுவையில்...

புனித வெள்ளி எல்லா வருடமும், கிரிகோரியன் காலண்டரில், குறிப்பிட்ட ஒரே நாளில் வருவதில்லை. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த மூன்றாவது நாள் “ஈஸ்டர் சன்டே” எனப்படுகிறது. அந்த வருடம் “ஈஸ்டர் சன்டே” என்று வருகிறது என்று கணக்கிடப்பட்டு, அதற்கு மூன்று நாட்கள் முன் வரும் வெள்ளிக் கிழமையில் “புனித வெள்ளி” அனுசரிப்பார்கள். வசந்த உத்தராயணத்திற்கு பின்பு வருகின்ற பௌர்ணமி கழிந்த அடுத்த ஞாயிற்றுக் கிழமை, “ஈஸ்டர் சன்டே” எனப்படும். இதன் படி, இந்த வருடம் மார்ச் 31ஆம் தேதி, “ஈஸ்டர் சன்டே”. ஆகவே, மார்ச் 29ஆம் தேதி “புனித வெள்ளி”.

இந்த நாளில் உணவை குறைவாக எடுத்துக் கொள்பவர்கள் உண்டு. பெரும்பாலான நாடுகளில் விடுமுறை அனுசரிப்பர். விடுமுறை இல்லாத இடங்களில், பொதுவாக மாலை மூன்று மணிக்குப் பிறகு சில மணி நேரங்கள் வேலை நிறுத்தப்படும். தேவாலயங்களில் மணிக்குப் பதிலாக, மரத்தாலான தட்டினால் ஒலி எழுப்பபடுகிறது. இயேசு கிறிஸ்துவை நினைவு கூறும் விதமாக சிலுவையை முத்தமிடுவார்கள். சமூகப் பணிகளுக்கு உதவி செய்ய தேவாலயங்களுக்கு நன்கொடை வழங்குவார்கள்.

கத்தோலிக்க நாடான அயர்லாந்தில், புனித வெள்ளி அன்று எல்லா விதமான மதுபான விற்பனைகளும் தடை செய்யப்படும். ஜெர்மனியில், புனித வெள்ளியன்று, நடனம், நாடகங்கள், திரையரங்குகள் நடத்துவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. பழமைவாதி கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி மற்றும் அதற்கு அடுத்த நாள் மிகவும் கடுமையான விரதம் கடைப்பிடிக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்கர்கள், இந்த நாளில் நோன்பிருந்து மிகக் குறைந்த உணவு உண்கிறார்கள். ஆங்கிலம் பேசும் நாடுகள் சிலவற்றில், இந்த நாளில் சூடான இனிப்பு சப்பாத்திகள் உண்ணப்படுகின்றன.

உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக இயேசு பிரான் தன்னுடைய உயிரை பலியாகக் கொடுத்ததாக நம்புகிறார்கள். அதற்கான நன்றிக் கடனாக இந்த புனித நாளை அனுசரிக்கிறார்கள்.

ஃபேஷன் உலகில் டிரெண்டாகி வரும் புதுவித சோக்கர் நெக்லஸ்கள் பற்றி பார்க்கலாம்!

விமர்சனம்: உயிர் தமிழுக்கு - சமகால அரசியல் நையாண்டி!

புதிய பார்வை எப்பொழுது ஏற்படும் தெரியுமா?

கால்களை ஏன் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்?

மனச்சோர்வை விரட்டும் மகத்தான 7 வழிகள்!

SCROLL FOR NEXT