அதிபர் எனப்படும் ஜனாதிபதி அங்கு(ம்) சர்வ சக்தி படைத்தவர் அல்ல. அரசை நடத்துபவரும் அல்ல. பிரதமருக்குதான் அந்த அதிகாரம். பெரும்பாலும் அலங்காரப் பதவி. எனினும் நாட்டின் தலைமைப் பதவி ஒரு தமிழருக்குக் கிடைத்தது விசேஷம் தான்.
1993ல்தான் முதல் முறையாக ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது (அதற்கு முன் பாராளுமன்றம்தான் ஜனாதிபதியை நியமித்து வந்தது). 1959ல் இருந்து சிங்கப்பூரை ஆட்சி செய்வது மக்கள் செயல் கட்சி (பீப்பிள்ஸ் ஆக் ஷன் பார்ட்டி) என்ற கட்சிதான். இதன் ஆதரவில் சமீபத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம். அதிகாரபூர்வமாக கட்சியின் சார்பில் இவர் நிற்க முடியாது. இதனால்தான் அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார். என்றாலும் கட்சி ஆதரவு வெளிப்படை. அறுபத்தாறு வயதான தர்மன் சண்முகசுந்தரம் அந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமராகவும் இருந்திருக்கிறார். இவர் மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி. ஜப்பானியத் தந்தைக்கும் சீனத் தாய்க்கும் பிறந்தவர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிங்கப்பூர் அரசு கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர் என்றால் அமைச்சர், தலைமை நீதிபதி, அட்டார்னி ஜெனரல் அல்லது பிற உயர்மட்ட பதவிகளில் குறைந்தது மூன்று வருடங்கள் பதவி வகித்திருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றால் சராசரியாக 500 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக மூன்று வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
தர்மன் கல்வி மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றியவர். 2011 முதல் 2019 வரை துணை பிரதமராகவும் இருந்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியம், உலகப் பொருளாதார மன்றம், ஐ.நா. போன்றவற்றில் பதவிகள் வகித்திருக்கிறார். ஜுராங் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
2016ல் அந்த நாட்டு அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருப்பவர்கள் மாறி மாறி பல்வேறு இனப் பிரிவுகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டது இந்தத் திருத்தம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக இருந்திருக்கவில்லை என்றால் அந்த இனத்தைச் சேர்ந்தவர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்.
2017ல் ஜனாதிபதி தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். சிங்கப்பூர் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பேர் சீனர்கள். மீதமுள்ளவர்கள்தான் மலாய் இனத்தவர், இந்தியர்கள் மற்றும் பிறர். சுமார் 27 லட்சம் பேர் வாக்களித்தனர். முதல் முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்களுக்கும் வாக்களிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. இதற்காக சீனா ( சீனாவில் மட்டும் மூன்று தேர்தல் மையங்கள்) ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் அன்று தேர்தல் மையங்கள் இயங்கின.
சிங்கப்பூர் ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகள். உலகிலேயே அரசுப் பதவியில் மிக அதிக ஊதியம் பெறுவது (ஆண்டுக்கு 11 லட்சம் அமெரிக்க டாலர்) சிங்கப்பூர் ஜனாதிபதிதான் என்கிறார்கள்.