1941ம் ஆண்டு கல்கி அவர்களின் அறிமுகம் மாணவர் சுப்பிரமணியத்துக்குக் கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த அந்த அறிமுகத்தில், கல்கி பத்திரிகையில் ஓவியம் வரைய வாய்ப்பு கோருகிறார் இளைஞர் சுப்பிரமணியம். அவர் ஓவியர்தான் என்பதற்கு அடையாளமாக அந்த இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஓவியங்கள் வரையப்பட்ட ஒரு நோட்டுப் புத்தகமே சாட்சியாக இருந்தது. அதை வாங்கிப் பார்த்த ஆசிரியர் கல்கி அவர்கள், அந்த இளைஞரின் ஓவிய ஆர்வத்தைக் கண்டு, ‘‘இப்படி ஓவியம் வரைவதற்கு வாய்ப்பு கேட்பதற்கு பதிலாக, பேசாமல் கல்கி பத்திரிகையிலேயே ஓவியராக சேர்ந்து விடு. மாதாமாதம் சம்பளம் கிடைக்கும்” என்று கூறுகிறார்.
அச்சமயம் ஓவியக் கல்லூரியில் பயின்றுக்கொண்டிருக்கும் அந்த மாணவர் சுப்பிரமணியமோ, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் யோசித்த அந்த இளைஞர், ‘‘ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் எனது படிப்பு முடிந்தால் எனக்கு டிப்ளமோ சான்றிதழ் கிடைக்குமே’’ என்று அப்பாவியாகக் கூறுகிறார். அதைக் கேட்ட ஆசிரியர் கல்கி அவர்கள், “ஓவியக் கல்லூரியில் நீ வாங்கப்போகும் டிப்ளமோ சான்றிதழ் ஓவியம் வரையப் போகிறதா? அல்லது நீ ஓவியம் வரையப் போகிறாயா? ஓவியக் கல்லூரியில் உனக்குக் கிடைக்கும் பயிற்சியை விடவும், இந்தப் பத்திரிகையில் ஓவியனாகப் பணியாற்றுவதால் உனக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். உனக்கு சான்றிதழ் முக்கியமா அல்லது பத்திரிகை வேலை முக்கியமா என்பதை நீயே யோசித்து முடிவு செய்துகொள்” என்று முடிவை அந்த மாணவர் சுப்பிரமணியத்தின் வசமே விட்டு விடுகிறார்.
சற்று நேரம் யோசித்த அந்த மாணவர் சுப்பிரமணியம், ‘ஓவியக் கல்லூரி சான்றிதழை விடவும், அலுவலக ஓவியப் பணியே முக்கியம் என்று முடிவு செய்து, கல்கி அலுவலகப் பணிக்கு ஒப்புக்கொள்கிறார். இப்படித்தான் ஓவியத்தின் மீது அவருக்கு இருந்த தீராத காதல் கல்லூரி சான்றிதழை விடவும், பத்திரிகையில் ஓவியம் வரைவது முக்கியம் என அவரை உந்தித் தள்ளியது.
அன்றிலிருந்து மாணவர் சுப்பிரமணியம், ஓவியர் மணியம் ஆக உருமாற்றம் பெறுகிறார். அந்த நிமிடம் அவருக்கு ஓவியராக வேலை மட்டும் கிடைக்கவில்லை; அவரது வாழ்க்கையையே மாற்றப்போகும் கல்கி என்கிற ஒரு நல்ல குருவும் அவருக்குக் கிடைக்கிறார். சிஷ்யனுக்கு ஒரு நல்ல குரு கிடைப்பதைப் போலவே, குருவுக்கும் ஒரு நல்ல சிஷ்யன் அமைய வேண்டும். அப்படி குருவுக்கேற்ற சிஷ்யனாகவும், சிஷ்யனுக்கேற்ற குருவாகவும் அவர்கள் இருவரது எண்ண அலைகளும் ஒன்றாகவே இருந்தது வியப்புக்குரிய விஷயம்.
அக்காலத்தில் ஒரு பெரிய பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஆசிரியர் கல்கி அவர்கள், ஒரு ஓவியக் கல்லூரி மாணவரை தனது பத்திரிகையில் வேலைக்கு சேர்த்ததே பெரிய விஷயம். அது மட்டுமின்றி, அந்த மாணவரின் ஓவிய ஆர்வத்தைக் கண்டு, தாம் எழுதிய மிகப் பிரபலமான, ‘சிவகாமியின் சபதம்’ சரித்திர நாவலுக்கு ஓவியம் வரைவதற்காக அஜந்தாவுக்கே தம்முடன் அந்த மாணவரை அழைத்துச் சென்றது ஓவியர் மணியம் பேரில் ஆசிரியர் கல்கி அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை உணர்த்தும் மாபெரும் விஷயம்! அதற்கேற்றாற்போல் ஓவியர் மணியமும், கல்கி அவர்களிடம் மாறாத அன்புடனும் பெரிய விசுவாசத்துடனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு ஓவியர் மணியத்தின் பங்களிப்பு குறித்தும் அவரது ஓவிய அனுபவங்கள் பற்றியும் நாளைக்குச் சொல்லட்டுமா?
நேர்காணல்: எம்.கோதண்டபாணி