தெரிந்த சுதந்திரம் தெரியாத சேலம் கவிச்சிங்கம்...
நம் இந்திய சுதந்திரத்திற்கு அடிப்படையானது எண்ணற்ற வீரர்களின் தியாகங்கள் என்பதை அறிவோம் . அவர்களில் மக்களின் கவனத்திற்கு வந்ததுடன் புகழ் வெளிச்சத்திற்கும் வந்த காந்தி .நேரு , இராஜாஜி போன்ற தலைவர்களைப் பற்றித் தெரியும் .ஆனால் அந்தத் தலைவர்களுக்கே ஊக்கம் தந்து அவர்களின் செயலுக்குப் பின்புலமாக மக்களைத் தங்கள் உழைப்பாலும் செல்வாக்காலும் திரட்டிய பெருமைக்குரிய வீரர்களைப் பற்றி நாம் அறிந்துள்ளோமா என்றால் பதில் இல்லை என்றுதான் வரும் அப்படி இன்னும் வெளிச்சத்திற்கு வராத சேலம் வீரர் அர்த்தநாரீச வர்மா என்பவரைப் பற்றிய தகவல்தான் இது .
விடுதலைப் போராட்ட வீரர் என்பதுடன் மது ஒழிப்பு போராளி கவிஞர் பத்திரிக்கையாளர் சமூக சேவகர் எனப் பன்முகம் கொண்டவரான அர்த்தநாரீச வர்மா 1874 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பிறந்தார். தேச நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சிறப்புமிகு இவர் பிறந்தது சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபுரியில் என்பது சேலம் மக்களின் பெருமை .
மகாத்மா காந்தியைக் கடவுளாகவே நேசித்தவர் . அவர் வழியைப் பின்பற்றி தன் வாழ்நாள் முழுவதும் கதராடைகளையே அணிந்தவர் காந்தி மீது மிகுந்த பற்றுடன் (17 2 1934 அன்று) காந்தியடிகள் திருவண்ணாமலை வந்தபோது அவருக்கு பாராட்டு பத்திரம் வழங்கி பெருமை செய்தார்.காந்தியை நேசித்தாலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் திலகரின் தீவிரவாதத்தினால் ஈர்க்கப்பட்டு “கழறிற்றறிவார் சபை” எனும் அமைப்பைத் தோற்றுவித்தவர் .
ஆங்கிலேயரின் மிரட்டலுக்கு அஞ்சி பாரதியாரின் மறைவுக்கு யாரும் வராமலும் அவரைப் பற்றி பேசப் பயந்த நிலையிலும் துணிச்சலுடன் பாரதியாருக்காக இரங்கல் கவிதை எழுதி அதை சுதேசமித்ரனில் வெளியிட்ட ஒரே கவிஞர் சேலம் அர்த்தநாரீச வர்மா மட்டுமே..அரசியல் மூதறிஞரான இராஜாஜி அவர்களால் இராஜரிஷி எனப்பட்டம் பெற்றவர் .”மகாகவி பாரதிக்கு இணையான தேச பக்தி கவிஞர்” என திரு. வி .க அவர்களால் புகழப்பட்டவர்
மதுவிலக்கிற்காக முழுமூச்சுடன் போராடியவர் .தனது நண்பரான ராஜாஜியை வற்புறுத்தி இந்தியாவிலேயே முதன் முறையாக 1937 ஆம் ஆண்டு சேலத்தில் மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்தக் காரணமானவர். .சேலம் மாவட்டம் மேச்சேரியில் சுமார் 300 கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து மாபெரும் மது ஒழிப்பு மாநாட்டை நடத்திக் காண்பித்தவர் .இதுவே ராஜாஜிக்கு மதுவிலக்கைக் கொண்டுவரத் தூண்டுகோலாகியது எனலாம் .
இவர் நடத்திய வீர பாரதி பத்திரிக்கை 1931ல் கொண்டு வரப்பட்ட பிரஸ் எமர்ஜென்சி ஆக்டின் மூலம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டதே இவருடைய வீரமிக்க எழுத்தின் வீர்யத்துக்கு சான்று.தேச விடுதலை மது ஒழிப்பு தமிழ்நாட்டின் எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றுடன் கல்வி சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றையும் வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார்.
சத்திரியன் ,சத்திரிய சிகாமணி , தமிழ்மன்னன் ,வீரபாரதி , எனப் பல பத்திரிக்கைகளை நடத்தியவர் .இவர் “மதுவிலக்கு சிந்து” எனும் நூல் எழுதி பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டின் திருப்பதி சித்தூர் பகுதிகளை ஆந்திராவுடன் இணைப்பதை கடுமையாக எதிர்த்தவர் ..
இப்படி பல சிறப்புகளைப் பெற்ற இவர் தனது வாழ்வின் இறுதிக் காலத்தை திருவண்ணாமலையில் கழித்து 90ஆவது வயதில் (7 12 1964) காலமானார்.இவரின் மறைவு குறித்து இராஜாஜி அவர்கள் நமது கல்கியில் புகழஞ்சலி கட்டுரை எழுதியுள்ளார் என்பது சிறப்பு .
தனது வாழ்க்கை முழுவதும் சுதந்திரத்திற்காகவும் மது ஒழிப்புக்காகவும் அர்ப்பணித்த தன்னலம் கருதாத அர்த்தநாரீச வர்மா மீது இன்னும் அதிக கவனம் இல்லை என்பது வேதனை தரும் விஷயம் .இவருக்குத் தகுந்த அங்கீகாரம் தந்து இவரின் புகழும் பெருமையும் நிலைத்து நிற்க தமிழக அரசு ஆவன செய்தால் மகிழ்வாக இருக்கும் என்பது சேலம் மக்களின் கோரிக்கை .