Teacher Gopinath 
கல்கி

Interview - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர் கோபிநாத்... கடந்து வந்த பாதை - பிரத்தியேகப் பகிர்வு!

தா.சரவணா

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா ராஜா குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத்திடம் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கேட்ட போது, அவர் kalkionline தளத்திற்காக அளித்த பிரத்தியேகப் பகிர்வுகள்...

"நான் பிஎஸ்சி, பிஎட், பி.லிட் மற்றும் டி.டி.எட்., முடித்துள்ளேன். கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வேலுார், மாதனுார் யூனியன் கல்லாபாறை அரசு தொடக்கப் பள்ளியில் முதன் முதலாக ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். இதை அடுத்து 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி பணி மாறுதலில் குடியாத்தம் யூனியன் ராஜாகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டேன். ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் முதலில் இருந்தே பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்தல், மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்டவகைகளில் முழு கவனம் செலுத்தி முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வந்தேன்.

கொரோனா காலகட்டத்தில் கல்வி கற்கும் சூழலே தடைபட்டிருந்த காலத்தில் தான் தன்னார்வலராக முன்வந்து மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் முழுபாதுகாப்போடு மாணவர்களின் இருப்பிடத்துக்கே சென்று நடமாடும் பள்ளி நடத்தி வந்தேன்.

2008ம் ஆண்டு புத்தகப் பூங்கொத்து திட்டத்தில் பங்கேற்று 20 புத்தகங்களை படத்துடன் வரைந்து உள்ளேன். சமச்சீர் கல்வி புத்தகத்தில் ஓவியராக பணியாற்றியுள்ளேன்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இடம்பெறும் புத்தகங்களிலும் ஓவியராக பணியாற்றினேன்.

2011ம் ஆண்டு முதல் பள்ளி மாணவர்கள் அணிந்து வரும் சீருடை போன்று நானும் அணிந்து பள்ளிக்கு செல்வேன். இன்றுவரை அதனை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

பொம்மலாட்டம் மூலம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம், பெண்கல்வி உள்ளிட்டவகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'தோல்பாவை கூத்து' மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். 2013ம் ஆண்டு அசாமில் நடைபெற்ற (ரோல் ஆப் பப்பட்ரி ) பொம்மலாட்ட பயிற்சியில் தமிழகத்திலிருந்து ஆசிரியர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு பங்கேற்க சென்றோம். அங்கு எனது பங்களிப்பு நன்றாக இருந்ததால் இந்தியா முழுவதிலும் இருந்து அங்கு வந்திருந்த ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி அளித்தேன்.

இதேபோல் 2018ம் ஆண்டு அசாமில் நடந்த (சிசிஆர்டி) கலாச்சார வளாகங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சியில் கலந்து கொள்ள 10 பேர் கொண்ட குழு சென்றோம். அதில் எனது பங்களிப்பாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் முக்கிய தலைநகரங்களில் உள்ள பிரதான சின்னங்களை வரைந்து பாராட்டு சான்று பெற்றேன்.

நான் வகுப்பறையில் பாடம் எடுக்கச் செல்லும்போது அன்று எடுக்கும் பாடத்துக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் வேடம் அணிந்து மாணவர்களுக்கு பாடம் எடுப்பேன். அதாவது, திருக்குறள் எடுப்பதாக இருந்தால் திருவள்ளுவர் வேடம் அணிந்தும், பாரதியார் பாடல் எடுப்பதாக இருந்தால் பாரதியார் வேடமும், ஆத்திச்சூடி பாடம் நடத்துவதாக இருந்தால் சேலை கட்டி பெண் வேடம் அணிந்தும், வரலாறு பாடம் எடுப்பதாக இருந்தால் அரசர் வேடம் அணிந்து பாடம் எடுத்து வருகிறேன்.

அதேபோல் வகுப்பறையில் செய்யுள், இறைவாழ்த்து, தேசிய கீதம் மற்றும் புத்தகத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு பறை இசை அடித்து மாணவர்களுக்கு கற்பிப்பேன் அவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ராஜாகுப்பம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் படத்தை ஒண்ணரை மணி நேரத்தில் வரைந்தேன். இதை பாராட்டி (டிசிபி) வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு சார்பில் உலக சாதனை ஓவியராக பதிவு செய்யப்பட்டது."       

நல்லாசிரியர் விருது பெரும் கோபிநாத்துக்கு கல்கி குழுமம் சார்பாக வாழ்த்துகள்!

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT