மௌனத்தில் மூழ்கினாள் மனோகரி. அவளுக்கு நீண்ட மௌனம் தேவைப்பட்டது. இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவது என்று முடிவு செய்தாள்.
என்ன நடக்கிறது தன்னைச் சுற்றி? இதன் ஆரம்பப் புள்ளி எது?
சிவநேசன் இப்படிக் கேட்பதற்கு முன்பே இதைத்தான் கேட்கப் போகிறார் என்று அவள் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருந்ததே? அது எதனால்?
ஒருவேளை நவீன் இவளிடம் அவ்வப்போது பிதற்றிக் கொண்டிருப்பதெல்லாம் அவர் காது வரை போய்விட்டதோ? அதனால் வந்த தைரியத்தில்தான் இப்படிக் கேட்டுவிட்டாரோ?
யார் அவருக்குச் சொல்லியிருக்க முடியும்?
நிச்சயம் இனியாவாக இருக்க முடியாது. நவீனின் பேச்சில் அவளுக்கு உடன்பாடு கிடையாது. அதனால் அவள் சொல்லியிருக்க மாட்டாள்.
திவ்யா?
ஒருவேளை திவ்யாவாக இருக்கக்கூடுமோ? சிவநேசனுடன் உட்கார்ந்து நாள் கணக்கில் வேலைபார்த்திருக்கிறாளே? அவள் எதையாவது சொல்லி வைத்திருப்பாளோ?
மனோகரியின் கோபம் நவீன் பக்கம் திரும்பியது. இவளிடம் சொல்வது போதாதென்று இவளைச் சுற்றியிருப்பவர்களிடமும் ஓயாமல் ஓதிக்கொண்டிருக்கிறான். அதன் விபரீதம் தெரியுமா அவனுக்கு?
கோபம் மூண்டெழுந்து தலையை பாரமாக்கியது. கண்களில் கரகரவென்று நீர் தன்னையறியாமல் பொங்கியது.
மறுநாள் மாலை இவளைத் தேடிக்கொண்டு திவ்யா வந்தாள்.
"சரத்துக்கு பெங்களுருக்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது ஆன்ட்டி. அடுத்த மாசம் கிளம்புகிறோம். உங்களிடம் நேரில் சொல்லத்தான் வந்தேன்."
"ஓ! அப்படியா? இதற்குத்தான் பயந்து கொண்டிருந்தாள் உன் அம்மா."
"ஆனா, இப்ப கதையே மாறிப்போச்சு ஆன்ட்டி. அம்மா இந்த செய்தியை சாதாரணமா எடுத்துகிட்டாங்க. அவங்க இப்போ ரொம்ப பிஸி."
"எப்படி?"
"பிளாட்ல இருக்கிற குழந்தைங்க சிலபேர் மாலை நேரத்துல அம்மாவைத் தேடிக்கிட்டு வந்திடறாங்க. அவங்கவங்க பேரண்ட்ஸ் வர்ற வரைக்கும் அம்மாதான் கேர்டேக்கர்"
"வெரி இன்ட்ரஸ்டிங்க். நான் ஏதேதோ அவளுக்கு சஜஸ்ட் பண்ணியிருக்கேன். அவள் காது கொடுத்துக் கேட்டதேயில்லை. இப்ப பாரு, அவளே யோசிச்சு உருப்படியா எதையோ செய்ய ஆரம்பிச்சிருக்கா. நல்லதுதான் திவ்யா"
"ஆமாம் ஆன்ட்டி. குழந்தைங்க பொறுப்பு தீர்ந்ததுமே எல்லாருக்கும் மிடில் ஏஜில் ஒரு வெறுமை வந்துடுது. தங்கள் நேரத்தை எப்படி ஆக்கப்பூர்வமா பயன்படுத்துறதுன்னே தெரியமாட்டேங்குது. அதைக் கண்டுபிடிக்கிறதுதான் முக்கியம்"
"நானும் கூட இன்னும் நாலு வருஷத்துல ரிடையர் ஆயிடுவேன். இப்பவே நிறைய பிளான் வெச்சிருக்கேன் திவ்யா."
"உங்களுக்குப் பிரச்சினையே இல்லை ஆன்ட்டி. எல்லா விஷயத்திலுமே உங்களுக்கு ஒரு கிளாரிட்டி இருக்கு. குழப்பிக்கவே மாட்டீங்க."
இப்போது தான் குழம்பிய குட்டையாகக் கிடப்பது இவளுக்குத் தெரியுமா? இவளிடம் சொல்லலாமா?
"திவ்யா, உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும். டாக்டர் சிவநேசன் உன்னோடு உட்கார்ந்து வேலை செய்யும்போது என்னைப் பற்றி பர்ஸனலாக ஏதாவது விசாரித்தாரா?"
மனோகரி திடீரென்று கேட்டதால் திவ்யா யோசனையில் ஆழ்ந்தாள்.
"அவர் தனசேகரன் கல்லூரிக்காக வீடியோ தயாரிக்கணும்னு சொன்னபோது நான்தான் சொன்னேன் உங்களை எனக்குத் தெரியும்னு. எதுக்கு ஆன்ட்டி கேட்கறீங்க? ஏதாவது பிரச்னையா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை திவ்யா."
"ஆங், இப்போ ஞாபகம் வருது ஆன்ட்டி. ஒருநாள் அவர் என் எதிரில் உட்கார்ந்திருந்தபோது நவீனிடமிருந்து ஃபோன் வந்தது. வேலையில் இருந்ததால் நான் அதிகம் பேசமுடியலை. அப்போ சிவநேசன் சார்கிட்டே நவீன் யாருன்னு சொன்னேன்."
"ஓ! என்னிடம் கூட ஒருநாள் அவனைப் பற்றி விசாரித்தார்."
"அவருக்கு கல்யாண வயசுல பொண்ணு இருக்காளா என்ன?"
திவ்யாவின் இந்தக் கேள்வி மனோகரிக்குப் பல விஷயங்களைப் புரியவைத்தது.
"ஆனா ஒண்ணு ஆன்ட்டி, நான் அவர்கிட்டே இதெல்லாம் தெரியாமலேயே சில விஷயங்களைச் சொன்னேன்."
"என்னன்னு?"
"நீங்க எப்படி நவீனை வளர்த்தீங்கன்னு சொன்னேன். உங்க அப்ரோச் எப்படி எங்கம்மா கிட்டேயிருந்து வித்தியாசமா இருந்துச்சுன்னு எனக்குத்தானே தெரியும். அதைத்தான் நான் சொன்னேன். அவரு ரொம்ப ஆச்சரியமா கேட்டுகிட்டாரு."
"அதற்கு அவர் என்ன சொன்னாரு?"
"அவருடைய அம்மா எங்கம்மாவைவிட டென் டைம்ஸ் பொஸசிவா இருந்தாங்களாம். நவீன் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கான். அவன் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு சொன்னாரு."
திடீரென்று திவ்யாவுக்கு மறுபடியும் அந்த சந்தேகம் எழுந்தது.
"ஏன் ஆன்ட்டி, சீரியஸாவே கேட்கிறேன். அவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடறாரா?"
"ஐ டோன்ட் திங்க் ஸோ" என்று மறுப்பாகத் தலையசைத்தாள் மனோகரி.
'தானே மாப்பிள்ளையாகும் கனவில் அவர் இருக்கிறார் என்று சொன்னால் அது திவ்யாவுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்' என்று தோன்றியது.
மெல்லிய அவமானம் தலைத்தூக்கியது. மனோகரி தன்னைத்தானே சமாளித்துக் கொண்டாள்.
திவ்யா புறப்பட்டுப் போனதும் ஒருவித வெறுமை சூழ்ந்தது.
யாரிடம் பேசுவது?
மீனாட்சி?
மீனாட்சியால் நிச்சயம் புரிந்துக்கொள்ள முடியாது. அவள் பரிகாசமாக ஏதாவது சொல்லி வைப்பாள். அதைத் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
இரவு உணவு டேபிளில் வெகுநேரம் காத்திருந்தது. மனோகரிக்கு சாப்பிடக் கூடத் தோன்றவில்லை. அப்படியே போய் படுக்கையில் சாய்ந்தாள். தூக்கம் சுலபத்தில் வரவில்லை. இருட்டில் குறுக்கும் நெடுக்குமாக சற்று நேரம் நடந்து கொண்டிருந்தாள்.
ஜன்னலுக்கு வெளியே மரங்கள் கூட அசைவே இல்லாமல் இருந்தது.
சூழ்ந்திருந்த புழுக்கத்தை மனதிலும் உணர்ந்து கொண்டிருந்தாள் மனோகரி. நடந்து நடந்து களைத்துப்போய் மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.
*****
நாக்பூர் முகவரியுடன் வந்திருந்த அந்தத் தபால் மனோகரியை ஆச்சரியப்படுத்தியது. அண்ணன்தான் எழுதியிருக்கிறார்.
"அன்புள்ள தேவா,
இந்தக் கடிதம் உன்னை ஆச்சரியப்படுத்தும். விட்டுப்போன தொடர்பு என்றாவது ஒருநாள் மறுபடியும் துளிர்க்கத்தானே செய்யும்! சிலது சீக்கிரமே துளிர்த்துக் கொள்ளும். சிலது வருடக்கணக்கில் ஆகும்.
இங்கே கோபாலின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று நேர்ந்திருக்கிறது. வீட்டு வேலை செய்து கொண்டிருந்த 'சோனாலி' என்ற பெண் அவனிடம் மிகுந்த பரிவு காட்டிவந்தாள். அவளுடைய அன்பு அற்புதம் செய்யக்கூடியதாக இருந்தது.
கோபாலிடம் நிறைய மாற்றங்கள். இப்போது அவன் பழைய அதிர்ச்சியின் சுவடு கூடத் தெரியாத அளவுக்கு மாறிவிட்டிருக்கிறான். கலகலப்பான பேச்சும் உற்சாகமும் மீண்டுவிட்டது.
நானும் உன் அண்ணியும் தெளிவாக ஒரு முடிவெடுத்திருக்கிறோம். ஜாதி, வர்க்கம் என்று எதையும் குழப்பிக் கொள்ளாமல் சோனாலியை கோபாலுக்குக் கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்திருக்கிறோம்.
கல்யாண வயதை அவன் தாண்டிவிட்டான் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத இந்தத் திருப்பம்.
பொறுமையாக இருந்தால் வாழ்க்கை பல அற்புதங்களை நமக்காக நிகழ்த்திக் கொடுக்கும் என்பது எங்கள் விஷயத்தில் பலித்துவிட்டது.
நானும் அண்ணியும் இங்கே நாக்பூரிலேயே தொடர்ந்து இருப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.
உன்னால் முடிந்தால் ஒருமுறை இங்கே வந்து போக முடியுமா?
உன் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்."
கடிதத்தை படித்து முடிப்பதற்குள் உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் நிறைந்து எழுத்துக்கள் குழம்பியது.
மனதிலிருந்த ஒரு பெரிய பாரம் இறங்கியது போல் தோன்றியது மனோகரிக்கு. யார் அந்த சோனாலி? எங்கிருந்து வந்தாள் அந்த தேவதை? எவராலும் அவிழ்க்க முடியாத சிக்கல் ஒன்றை எப்படி தீர்த்து வைத்தாள்?
அன்பு என்ற ஒரு மகாசக்தியின் வல்லமை அவளை பிரமிக்க வைத்தது.
மறுநாள் நீண்ட யோசனைக்குப் பிறகு அண்ணனுக்குப் பதில் எழுதினாள்.
கோபாலின் வாழ்க்கை மீண்டதற்கு தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.
"இப்போதுதான் சரியாகிக் கொண்டிருக்கும் அவன் வாழ்க்கையில் திடீரென்று என்னுடைய பிரவேசம் பழைய அதிர்ச்சிகளை நினைவூட்டக்கூடும் என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆகவே, நான் நாக்பூருக்கு வரத் தயங்குகிறேன். இன்னும் சிறிது காலம் போகட்டும். பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம்."
ஒரு சமயம் மீனாட்சி பூ தொடுத்துக் கொண்டிருந்தாள். பூக்கூடைக்கு இந்தப் புறம் விழுந்திருந்த ஒற்றைப்பூவை அவள் கவனிக்கவில்லை. தொடுத்து முடித்து எழுந்திருக்கும்போது அது கண்ணில்பட்டது.
"அடடா! இது ஒண்ணு மட்டும் பூச்சரத்தோட சேராம போயிடுச்சே."
எதிரில் உட்கார்ந்திருந்த மனோகரி அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
"இந்தப் பூவும் என்னை மாதிரிதான் மீனாட்சி, குடும்பத்தோட சேரமுடியாம ஒத்தையா நின்னுடுச்சு." அவளையறியாமல் வார்த்தைகள் வெளிப்பட்டது.
மீனாட்சியின் நெற்றி சுருங்கியதைப் பார்த்தபோதுதான் 'தான் இப்படி சொல்லியிருக்க வேண்டாம்' என்று மனோகரிக்குத் தோன்றியது.
"ஸாரி மீனாட்சி, எதையோ சொல்லி உன்னை கஷ்டப்படுத்திட்டேன்."
"உன் மனசுல இருக்கிறதைத்தானே சொன்னே? தப்பில்லை மனோகரி" என்றாள் மீனாட்சி.
'இப்போது பூச்சரத்தோடு சேருவதற்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு வந்திருக்கு மீனாட்சி. ஆனாலும் என்னால் சேர முடியவில்லை.' என்று தனக்குள் முனகிக் கொண்டாள் மனோகரி.
தன்னை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு குற்ற உணர்வு இனி மெல்ல மெல்ல விலகிவிடும். இந்த நல்ல விஷயத்தை மீனாட்சியிடம் நேரில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
மறுநாள் அவள் மீனாட்சியை சந்தித்தாள்.
"எல்லாம் கூடிவந்தபோதும் உனக்கு அங்கே இடமில்லைன்னுதானே ஆயிடுச்சு. இப்போ உன்னைக் கூப்பிடுற உன் அண்ணன் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால கூப்பிட்டிருந்தா கூட நல்லா இருந்திருக்கும்" என்று படபடத்தாள் மீனாட்சி.
"கோபாலைப் பொறுத்தவரைக்கும் இப்போ நான் போய் நிக்கறது சரியில்லை. அவன் நல்லா இருந்தால் போதும். நான் பொறுப்பாதான் முடிவெடுத்திருக்கேன்னு தோணுது. எனக்கு இதுல வருத்தம் எதுவும் இல்லை மீனாட்சி."
"நீ தனியா இருக்கக்கூடாதுன்னு நவீன் சொன்னது சரிதான்னு எனக்கே இப்ப தோண ஆரம்பிக்குது மனோகரி."
மனோகரிக்கு மெல்லிய ஆச்சரியம். பேசுவது மீனாட்சிதானா!
"இவரு ஃப்ரெண்ட் அறுபது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சொன்னேன் இல்லையா, அந்தப் பெண்ணோட இங்கே வந்திருந்தாரு. அவங்களைப் பார்க்கவே சந்தோஷமா இருந்துச்சு மனோகரி. உனக்குக் கூட இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு. அதுதான் சொன்னேன்."
யதார்த்தமாகத்தான் சொன்னாள் மீனாட்சி. மனோகரியின் மனதில் பட்டாம்பூச்சி ஒன்று மென்மையாக சிறகடித்தது.
(தொடரும்)