கல்கி

தேவமனோகரி – 19

கே.பாரதி

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

"உன்னைப் போய் எனக்குப் போட்டினு நினைச்சு நிறைய காயப்படுத்தியிருக்கேன் மனோகரி. நீ யாருக்குமே போட்டியா இருக்க விரும்பலைன்னு இப்பதான் புரியுது." சொல்லும்போதே பத்மாவதிக்கு கண்கள் கலங்கியது.

மனோகரிக்கு இது ஏதோ அதிசயம்போல் தோன்றியது.

கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தபோது எல்லாம் கனவு என்பது புரிந்து போனது. மனோகரி சிரித்துக் கொண்டாள். மனிதர்கள் மாறுவது என்பது அவ்வளவு சுலபமா என்ன?

மாத இறுதியில் ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

கணேசமூர்த்தி உரையாற்றும்போது தான் இதுவரை சாதிக்காததையெல்லாம் டேவிட்டும்,  மனோகரியும் சாதிக்க வேண்டும் என்று பேசினார்.

ரத்னசாமியின் முகம் ரத்தம் சுண்டியதுபோல் இருந்தது. ஓய்வு பெறும் யதார்த்தத்துக்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்று தோன்றியது.

பத்மாவதி மனோகரியைப் பார்த்த பார்வையில் குரோதம் பொங்கிக் கொண்டிருந்தது.

கனவில் பார்த்த பத்மாவதிக்கும், இந்த நிஜத்துக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!

அன்று முழுக்க மனோகரி தான் ஓய்வு பெறும் நாளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன எதிர்கால திட்டம் வைத்திருக்கிறாய் மனோகரி" என்று தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொண்டாள்.

ஏதேனும் தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. சம்பளத்துக்கு இப்போது வேலைபார்ப்பதுபோல் ஓய்வூதியத்துக்கும் வேலைபார்க்க வேண்டாமா? அது சமூகப்பணியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

தெளிவாக முடிவெடுத்துவிட்ட திருப்தியில் அன்றிரவு மாத்திரையின் தயவின்றி அவளுக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைத்தது.

••• ••• •••

டுத்த மூன்று வாரத்தில் இனியாவின் தீஸிஸ் வேலை முடிந்துவிட்டது. ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துக்கொள்ள மனோகரிக்கு அழைப்பு வந்திருந்தது. மேடையில் அமர்ந்து நெறியாள்கை செய்யும் வாய்ப்பு அது.

ஏற்கெனவே சிவநேசன் இவளிடம் சொன்ன அதே மாநாடு. தத்துவத்துறையும்,  ஆங்கிலத்துறையும் சேர்ந்து நடத்துகிறார்கள்.

இனியா,  மணிகண்டன், மாரிமுத்து, நிர்மலா என்று ஒரு மாணவப் பட்டாளமே  மனோகரியுடன் புறப்பட்டது.

மாணவர்களுக்கும் இவளுக்கும் தனித்தனியாக தங்கும்  இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவநேசனுக்கு நிறைய வேலைகள் இருந்ததனால் அதிகம் பேசமுடியவில்லை.

முதல் நாள் மாலை தான் தங்கியிருந்த இடத்துக்கு மனோகரி வந்து சேர்ந்த பிறகு அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"நீங்கள் அதற்குள் கிளம்பிட்டீங்களா தேவா? நான் இங்கே அரங்கத்துல உங்களைத் தேடிக்கிட்டிருக்கேன்."

"ஓ! நான் புறப்பட்டு அறைக்கு வந்து பத்து நிமிஷம் ஆகிறது."

"டின்னருக்கு என்ன ஏற்பாடு?"

"இங்கேயே பார்த்துக்க வேண்டியதுதான்."

"எங்க வீட்டுக்கு வரமுடியுமா?"

ஒரு கணம் மனோகரி தயங்கினாள்.

"நீங்களும் உங்க ஸ்டூடன்ட்டும் தயாராக இருந்தா நானே வந்து அழைச்சுக்கிட்டுப் போறேன்."

அவர் குறிப்பிடுவது இனியாவைத்தான் என்பது புரிந்தது. சம்மதித்தாள் மனோகரி.

ஏழு மணி சுமாருக்கு காரில் வந்து இறங்கினார் சிவநேசன்.

பதினைந்து நிமிட பயணத்தில் அவருடைய வீடு இருந்தது. சுற்றிலும் சின்னத் தோட்டம் சூழ்ந்த வீடு.

"உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?"

மனோகரி திகைத்தாள். இனிமேல்தான் ஏற்பாடு செய்யப்போகிறாரா என்ன!

"சௌத், நார்த் எதுவா இருந்தாலும் பரவாயில்லையா?"

"எங்களுக்குப் பரவாயில்லை. உங்க மனைவிக்குதான் கஷ்டம்"

சிவநேசனின் முகம் சட்டென்று இறுகியது. அடுத்த கணமே சமாளித்துக் கொண்டு புன்னகைத்தார்.

உள்ளே பெரிய ஹால். தவிர டைனிங் ஹால், இரண்டு பெரிய அறை, சமையல் அறை என்று அழகாக திட்டமிடப்பட்டிருந்த வீடு அது.  படியேறினால் மாடிக்கும் போகலாம்.

ஹாலில் மாட்டியிருந்த ஓவியங்களை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் இனியா.

சமையலறையிலிருந்து நேபாளி இளைஞன் எட்டிப் பார்த்தான். அவனுக்கு உத்தரவுகள் பிறப்பித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தார் சிவநேசன்.

வெறிச்சோடியிருந்த அந்த பெரிய வீட்டில் சிவநேசனைத் தவிர வேறு யாரும் வசிக்கவில்லை என்பதை ஊகிக்க முடிந்தது.

பொதுவான உரையாடலுக்குப் பிறகு உணவருந்தினார்கள். புல்காவும், பனீர் சப்ஜியும் சுவையாகத்தான் இருந்தது.

"தேங்க்யூ ஸார். சாப்பாடு நல்லா இருந்துச்சு." என்றாள் இனியா.

"உனக்கு ஐஸ்கிரீம் கூட வாங்கி வெச்சிருக்கேன்" என்று சொல்லிக்கொண்டே ஃப்ரிட்ஜைத் திறந்து ஐஸ்கிரீம் பெட்டியை வெளியில் எடுத்தார் சிவநேசன். தானே அதற்கான சிறிய கிண்ணங்களில் ஐஸ்கிரீமை நிரப்பி ஸ்பூனுடன் ஒரு ட்ரேயில் வைத்து கொண்டு வந்தார்.

"நீங்க ரொம்ப நல்லா நெறியாள்கை செய்ததா எல்லோரும் சொன்னாங்க. எனக்குத்தான் வேறு வேலை இருந்ததால உங்க செஷன்ல கலந்துக்க முடியலை."

"கொஞ்சம் சவாலாதான் இருந்தது. சில பேர் தலைப்புக்கு சம்பந்தமில்லாம கட்டுரை வாசிச்சாங்க."

"என்ன செய்யறது? நம்ம ஊர்ல எல்லா நிறுவனங்களுமே தரம் குறைஞ்சிகிட்டுதான் வருது. ஆராய்ச்சித்துறையிலும் அதே நிலைமைதான்."

"உங்களை மாதிரி சிலபேர் அந்த சரிவை தூக்கி நிறுத்தணும்னு முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கீங்க. அதுக்கெல்லாம் பலன் இல்லாம போகாது."

தன் அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக உதட்டை சுழித்து தோள்களை உதறிக்கொண்டார் சிவநேசன்.

அன்றிரவு மனோகரி வெகுநேரம் வரை சிவநேசனின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவருடைய அம்மா இறந்து போயிருக்க வாய்ப்பிருக்கிறது. மனைவி என்னவானாள்? ஏன் அதைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்?

மூன்றாம் நாள் மதியத்துடன் மாநாடு முடிவடைந்தது. வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களுக்காக உள்ளுர் சிற்றுலா என்று ஏற்பாடாகியிருந்தது.

அரவிந்தர் ஆசிரமம்,  ஆரோவில், பாண்டிச்சேரி கடற்கரை என்று எல்லா இடத்தையும் சுற்றிப் பார்க்க பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"இதையெல்லாம் நான் ஏற்கெனவே பார்த்திருக்கேன். மத்தவங்ளோட நீ போயிட்டு வா இனியா." என்றாள் மனோகரி.

அறைக்குத் திரும்பிப் போய் ஓய்வெடுக்க நினைத்தாள்.

"எனக்கு இஷ்டமில்லை மேடம். மணிகண்டன் பேச்சே ஒரு தினுசா இருக்கு. என்னை டீஸ் பண்ற மாதிரி பேசறான்."

"ஜஸ்ட் இக்னோர் ஹிம். இங்கே மத்த கல்லூரியிலிருந்து நிறைய பேர் வந்திருக்காங்க. அவங்களையெல்லாம் அறிமுகம் செஞ்சிக்க இது ஒரு வாய்ப்பு."

இனியா தயங்கினாள்.

"உன் உலகம் விரியணும் இனியா. அது விரிய விரிய மணிகண்டன்கள் உன்னை பாதிக்கமாட்டாங்க."

"ஆனாலும் அவன் ஏன் இப்படி மாறிப்போனான்னு தெரியலை மேடம்."

"எல்லோரையும் நீ கேட்கிற மாதிரி இப்ப நான் உன்னைக் கேட்கிறேன்,  'வானம் என்ன நிறம்?' "

இனியாவால் நீலம் என்று சட்டென்று சொல்லமுடியவில்லை.

"உன்னால ஏன் பதில் சொல்ல முடியலை? ஏன்னா வெளியில நீலம் மாதிரி தெரிஞ்சாலும் உள்ளே பல நிறங்கள் மறைஞ்சு நிக்குது. இல்லையா?"

ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் இனியா.

"அதேபோல தான் மனுஷங்களும். வெளிப்பார்வைக்கு சில குணங்கள் மட்டும்தான் தெரியும். நாம அதை நம்பிப் பழகுவோம். சந்தர்ப்பம் வரும்போது வேற நிறத்தைக் காட்டுவாங்க."

பஸ் ஏறி மாணவர்கள் புறப்பட்டதும் மனோகரி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குத் திரும்பினாள்.

சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகு முகம் கழுவி தயாரானாள். பாண்டிச்சேரி மண்ணில் காலார நடக்க வேண்டும்போல் தோன்றியது.

அறையிலிருந்த ஃபோன் ஒலித்தது. ரிஸப்ஷனிலிருந்த பெண்தான் அழைத்திருந்தாள்.

"மேடம், உங்களைப் பார்க்க டாக்டர் சிவநேசன்னு ஒருத்தர் லாபியில் காத்துக்கிட்டிருக்காரு."

மனோகரி இறங்கிக் கீழே வந்தாள்.

"சும்மாதான் உங்களோடு பேசிக்கிட்டிருக்கலாம்னு வந்தேன்." என்றார் சிவநேசன்.

"நானும் வெளியில் எங்காவது போகலாம்னு நினைச்சேன்."

"பாண்டிச்சேரி கடற்கரைக்குப் போகலாமா? நடந்துகிட்டே பேசலாமே?"

மனோகரி தலையசைத்துவிட்டு அவருடன் புறப்பட்டாள்.

காரை அவர் பார்க் செய்தபோது கம்பீரமான ட்யூப்ளே சிலை கண்ணில் பட்டது. வெயில் தணிந்து காற்றில் மெல்லிய குளிச்சி எட்டிப்பார்த்தது.

சிவநேசன் பழைய தொடர்பில் தன்னை தேவா என்று அழைத்தாலும்கூட தன்னை புது மனுஷியாகத்தான் பார்ப்பதா மனோகரிக்குத் தோன்றியது.

தரணி சம்பவத்தால் அந்தத் தெருவே குலுங்கியது. கூட்டத்தோடு கூட்டமாக சிவநேசனும் அங்கே நின்றிருக்கக்கூடும். ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் பேசாதது மனோகரிக்கு ஆறுதலாக இருந்தது.

"இப்பவும் நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா தேவா? நீங்க இன்னும்கூட ஆராய்ச்சித்துறையில் சாதிக்கணும்."

"சாதிச்சு?"

இது என்ன கேள்வி என்பதுபோல் அவளைத் திரும்பிப் பார்த்தார் சிவநேசன்.

"தனிநபர் வளர்ச்சிதானே நிறுவனத்தை வளர வைக்குது?  நமது கல்வித்தரம், ஆராய்ச்சித்தரம் எல்லாம் உயர வேணாமா?"

"சென்னையில் காபி சாப்பிட போனப்ப என் மாணவன் ஒருவனை சந்தித்தோமே, உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

நெற்றியை சுருக்கி யோசித்தார் சிவநேசன். "ஆங்! ஞாபகம் வருது. செக்யூரிட்டியா வேலை செய்யறதா சொன்னான் இல்லே?"

"டிகிரி படிக்க வந்துட்டு அவன் ஏன் செக்யூரிட்டியா வேலை செய்யணும்?"

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கூர்ந்து கவனித்தார் சிவநேசன்.

"அந்தப் பையன் ரொம்ப ஆர்வமா படிச்சான். சப்ஜெக்ட் எல்லாத்துலேயும் நல்ல மார்க் வாங்கினான். ஆனா இங்கிலீஷ்ல பாஸ் பண்ண முடியலை. மூணு நாலு தடவை அரியர்ஸ் எழுதியும் முடியலை."

"ப்ளஸ் டூ ல இங்கிலீஷ் எழுதி பாஸ் பண்ணிட்டுதானே டிகிரிக்கு வந்திருக்கான். அப்புறம் ஏன் முடியலை?"

"முடியலைங்கிறதுதான் யதார்த்தம். இங்கே நிறைய பள்ளிக்கூடங்கள்ல அடிப்படைகளை கற்றுக் கொடுக்கிறதில்லை. மனப்பாடம் செய்யப் பழக்கறாங்க. மேற்படிப்புக்கு வரும்போது அவங்களால சமாளிக்க முடியறதில்லை."

"ட்ரூ." என்று ஆமோதித்தார் சிவநேசன்.

"என் கவலையெல்லாம் இந்த மாணவர்கள்தான். இவங்க டிகிரி கூட வாங்க முடியாம பின்தங்கி நிக்கற போது நான் மட்டும் சம்பளம் வாங்கிக்கிட்டிருக்கிறது எனக்கு உறுத்தலா இருக்குது."

கண்கள் விரிய அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவநேசன்.

(தொடரும்)

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT