கல்கி

தேவமனோகரி – 22

கே.பாரதி

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

சிவநேசன் முகத்தில் ஆழ்மனதின் போராட்டம் அவ்வப்போது உணர்வு அலைகளாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

"விவாகரத்து வேணும்னு அவங்க வீட்டுல கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நிலைமையை சீர் செய்யணும்னு முயற்சி செய்தேன். ஆனா அவங்க அப்பா, அம்மா எதையும் காது கொடுத்துக் கேட்கலை."

"இப்போ அவங்க எங்கே இருக்காங்க?"

"அமெரிக்காவுல. தூரத்து சொந்தக்காரப் பையனுக்கு கட்டி வெச்சுட்டாங்க. இப்போ அவ சந்தோஷமாதான் இருக்கணும்.  இழப்பு எனக்குதான்."

"உங்க அம்மா?"

"நடந்ததுக்கெல்லாம் அவங்கதான் காரணம்னு பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. என் மனைவி எழுதி வெச்சிருந்த டைரிக் குறிப்பை படிச்சு அதிர்ந்து போனேன். என் அம்மாவா இப்படி? எவ்வளவு மோசமா நடந்துகிட்டிருக்காங்க? அவங்க மேல எனக்கு கண்மூடித்தனமாக ஆத்திரம் வந்தது."

கேட்டுக் கொண்டிருந்த மனோகரிக்கு சங்கடமாக இருந்தது.

"ஒரு பத்து வருஷம் அவங்களை விட்டு கண்காணாம போயிடணும்னு சிங்கப்பூருக்குப் போயிட்டேன். நான் திரும்பி வந்தப்ப அவங்களுக்கு உடம்பு ரொம்ப நலிஞ்சு போயிருந்தது. கடைசி காலத்துல அவங்களை நல்லவிதமா வெச்சுக் காப்பாத்தணும்னு முடிவு செஞ்சேன். இப்பதான் அஞ்சு வருஷத்துக்கு முன்னால இறந்து போனாங்க."

"சில சமயம் நாமும் ஓவராதான் ரியாக்ட் செய்யறோம். பிறகு அதோட விளைவையும் நாமதான் அனுபவிக்க வேண்டியிருக்கு. ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட் யுவர் ஃபீலிங்ஸ்."

"வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையின் சில சூட்சுமங்களை தெரிஞ்சுக்க உதவறதில்லை. ஆழம் தெரியாமல் நாமும் நீந்தக் கிளம்பிடறோம். சுழல்ல சிக்கின மாதிரி ஆகிப்போகுது."

ஆயாசப் பெருமூச்சுடன் சொன்னார் சிவநேசன். மனோகரி எழுந்து போய் இருவருக்குமாக சுக்கு காபி தயாரித்துக் கொண்டுவந்தாள்.

"தேங்க்யூ தேவா. எனக்கு இப்போ இதுதான் தேவைப்படுதுன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?"

"வீட்டிலிருந்தால் மதிய உணவுக்குப் பிறகு நான் சுக்கு காபிதான் அருந்துவேன். உங்களுக்காக யோசித்து தயாரிக்கவில்லை."

"இது வேண்டுமானால் தற்செயலாக இருக்கலாம். ஆனா உங்களுக்கு நுட்பமா மனுஷங்களைப் புரிஞ்சுக்கத் தெரியுது."

பொதுவாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் சிவநேசன். ஷுவை அணிந்து கொண்டே மனோகரியை நிமிர்ந்து பார்த்தார்.

"இன்னொரு வாய்ப்பு கிடைச்சா ஒரு பெண்ணோட மனசைப் புரிஞ்சு நடக்கணும்னு நான் ஆசைப்படறேன் தேவா. மிச்சமிருக்கும் இந்த வாழ்க்கையை நான் நம்பிக்கையோடுதான் பார்க்கிறேன்."

இதை ஏன் இவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்? சரேலென்று வெளிப்பட்ட எச்சரிக்கை உணர்வுடன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள் மனோகரி.

சிவநேசன் அவளைக் குறிப்பாக கவனித்ததாகத் தெரியவில்லை. கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்.

******

னியா கிராமத்தில்  இருந்தாள். அவளைத் தொலைபேசியில் அழைத்தாள் மனோகரி.

"நம்ம டிபார்ட்மென்டுல ஒரு கெஸ்ட் லெக்சரர் போஸ்ட் உருவாயிருக்கு. உன் பெயரை ரெக்கமென்ட் செய்திருக்கேன். நீ ஒரு லெட்டர் கொடுக்க வேண்டியிருக்கும் இனியா."

இனியாவுக்கு திடீரென்று சிறகுகள் முளைத்துக் காற்றில் பறப்பது போல இருந்தது.

"நாளைக்கே நான் கிளம்பி வர்றேன் மேடம்." என்றாள்.

மறுநாள் ஆர்வம் படபடக்க மனோகரியின் எதிரில் வந்து நின்றாள் இனியா.

துறை நூலகத்தில் நிர்மலாவின் உதவியுடன் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள் மனோகரி. புதிதாக வாங்கப்பட்ட புத்தகங்கள்.

"உனக்கு விஷயம் தெரியுமா இனியா? நிர்மலா இப்போ என்னோட பி.ஹெச்.டி ஸ்டூடன்ட்."

நிர்மலாவுக்குக் கைகொடுத்தாள் இனியா. வராந்தாவில் இவர்களைப் பார்த்தும் பாராமல் போய்க் கொண்டிருந்தான் மணிகண்டன்.

"இவனுக்கு என்னதான் ஆகிப்போச்சு? இப்படி மாறிட்டானே?" இனியா முணுமுணுத்தாள்.

"இது ஒரு போட்டி உலகம் இனியா. நீ அவனை நண்பனா நினைக்கிறே. ஆனா அவன் உன்னை போட்டியாளா நினைக்கிறான். எங்கே நீ அவனை முந்திகிட்டு வேலைவாய்ப்பை தட்டிகிட்டுப் போயிடுவியோன்னு அவன் பொறாமைப்படறான்."

"அப்போ நட்புக்கு அர்த்தமே இல்லையா மேடம்?" என்று ஆற்றாமையுடன் கேட்டாள் இனியா.

"பொறாமைன்னு வந்துட்டா அங்கே நட்பு செத்துப் போகும். இது உனக்கு முதல் அனுபவம். அதனால அப்சட் ஆகற. நானெல்லாம் இதை நிறையப் பார்த்தாகிவிட்டது."

இனியாவின் முகத்தில் சமாதானம் தென்படவில்லை.

******

ரத் வீட்டு விசேஷம் ஒன்றில் மாதவி முத்துக்குமரனை சந்தித்தாள் மனோகரி.

"முன்னைக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லை மனோகரி. எங்க மகன் ரமேஷ் இப்போ பழையபடி ஆகிட்டு வர்றான். அவருக்கு உதவியா தொழிற்சாலை நிர்வாகக் கூட்டத்தில் கலந்துக்க ஆரம்பிச்சிருக்கான்."

மாதவி மேடத்தின் முகத்திலும் தெளிவு ஏற்பட்டிருந்தது.

"அவ என்னதான் போதனை செஞ்சாலும் எங்க பிள்ளைக்கு பாசம் போகுமா?"

சட்டென்று எழுந்த எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டாள் மனோகரி.

"மேடம்,  உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நீங்க எக்ஸாம் நடத்தும்போது ஸ்டூடன்ஸுக்கு ஒரு அட்வைஸ் பண்ணுவீங்களே?"

"என்ன அட்வைஸ்? எனக்கு ஞாபகம் இல்லையே மனோகரி."

"ஒரு மணிக்கு எக்ஸாம் முடியுதுன்னா அதற்கு கால் மணிநேரம் முன்னதாகவே சில பேர் எழுதி முடிச்சிட்டுக் கிளம்புவாங்க. நீங்க அவங்களை சுலபத்தில் போகவிடமாட்டீங்க. 'நீ எழுதினதை நீயே ஒருமுறை நிதானமா படிச்சுப் பாரு. ஏதாவது தப்பு தெரியும். அதை சரி செஞ்சுக்க இந்த நேரத்தை பயன்படுத்திக்க.'  அப்படின்னு சொல்லி மாணவர்களை மடக்கி உட்கார வெச்சுடுவீங்க."

கண்களை சுருக்கி கேட்டுக் கொண்டிருந்தார் மாதவி மேடம். முகத்தில் ஒரு குழந்தைத்தனமான புன்னகை.

"நீங்க சொன்னது வாழ்க்கைக்கும் பொருந்தும். சிலரைப் பற்றி அவங்க இப்படிதான்னு நினைக்கிறோம். ஆனா அது சரிதானான்னு திரும்ப ஒரு முறை யோசிச்சா உறவை நேர் செய்துக்கிற வாய்ப்பு இருக்கு."

இவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் நெற்றியைச் சுருக்கினார் மாதவி மேடம்.

"ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு. அவளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை நீங்களும் தவற விடக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்."

"அதிகமாகப் பேசிவிட்டோமோ" என்ற எண்ணம் மனோகரியை சங்கடப்படுத்தியது.

மாதவி மேடம் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி. இதை சொல்லாமல் கடந்து போக தன்னால் முடியாது என்று அவளுக்குத் தோன்றியது.

தூரத்தில் திவ்யா இவளை அழைக்க அங்கிருந்து நகர்ந்து போனாள் மனோகரி.

******

இரண்டு நாளுக்குப் பிறகு சிவநேசன் தொலைபேசியில் அழைத்தார்.

மிகுந்த எச்சரிக்கையுடன் அளவான வார்த்தைகளில் உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் மனோகரி. ஆனால் சமீபத்தில் தான் வாசித்த கட்டுரை ஒன்றைப் பற்றி அவர் பேசியபோது தன்னையறியாமல் கலகலவென்று வார்த்தைகள் உதிர்ந்தது.

உரையாடலின் முடிவில் "அடுத்த வாரம் சென்னைக்கு வரலாம்னு இருக்கேன் தேவா. உங்களை நேரில் சந்திக்கணும்."

"அடுத்த வாரமா? எனக்கு ஒரு செமினார் இருக்கு. கொஞ்சம் வேலை அதிகம்" என்று தவிர்க்கப் பார்த்தாள் மனோகரி.

"சரி, பார்க்கலாம். அடுத்த வாரம் இல்லாவிட்டால் அதற்கும் அடுத்த வாரம் சந்தித்தால் போகிறது."

இப்போதைக்கு தப்பித்த உணர்வுடன் உறங்கப் போனாள் மனோகரி.

******

வேலைக்கான உத்திரவை கையில் வாங்கியபோது உணர்ச்சிப் பெருக்கில் இனியாவுக்குக் கண்கலங்கியது.

"எல்லாம் உங்களால்தான் மேடம்."

"அதை உன் அம்மா அப்பாவுக்குச் சொல்லு. கிராமத்துலேர்ந்து எவ்வளவு நம்பிக்கை வெச்சு உன்னை படிக்க அனுப்பியிருக்காங்க."

ஆமோதிப்பாக தலையசைத்தாள் இனியா.

லீலாவதி இவளை தேடிக் கொண்டு வந்தாள்.

"ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எப்படி போயிட்டிருக்கு லீலா?"

"ஆரம்பத்துல டிபார்ட்மென்டுல எல்லோரும் முணுமுணுத்தாங்க. ஆனா நம்ம சிவநேசன் ஸார் இருக்காரே அவர் ரொம்ப ஸ்மார்ட். வெறும் ஸ்போக்கன் இங்கிலீஷோட நிறுத்தாம சிலபஸையும் கொஞ்சம் கவர் செஞ்சிருக்காரு.  அதனால இவங்களுக்கும் வசதியாப் போச்சு."

"எங்க ஸ்டூடன்ஸ்கிட்டே நிறைய மாற்றம் தெரியுது. வகுப்புல இங்கிலீஷ்ல பேச முயற்சி செய்யறாங்க."

"எப்படியோ நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க மனோகரி."

"உங்க எல்லோருடைய பங்கும் இதுல இருக்கு. முக்கியமா உன்னுடைய பங்கு லீலா."

******

சிவநேசனிடமிருந்து மெயில் வந்திருந்தது. உள்ளுணர்வு படபடக்க அதை வாசித்தாள் மனோகரி.

"அன்புள்ள தேவா,

அன்று உங்கள் வீட்டில் மதிய உணவுக்குப் பிறகு உங்களுடன் பேசிக் கொண்டிருந்தது மிகுந்த ஆறுதலாக இருந்தது.

உறவுகளை சரியாகக் கையாளத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கும் என் மனதின் பாரத்தை சற்று இறக்கி வைக்க முடிந்தது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அன்று உங்கள் பால்கனித் தோட்டத்தில் சம்பங்கிப்பூ ஒன்று புதிதாகப் பூத்திருந்தது.

திவ்யா அதை கவனித்துவிட்டு கேட்கும் வரை உங்களுக்கு அந்தச் செடி பூத்திருந்ததே தெரியவில்லை.

"ஓ! சீசன் கூட முடிந்துவிட்டது. இனி இது பூக்காது என்றில்லையா நினைத்துக் கொண்டிருந்தேன்! இப்படி ஓசைப்படாமல் என் கண்ணுக்கும் தெரியாமல் இன்றைக்குப் பூத்திருக்கிறதே!" என்று நீங்கள் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னது இப்போதும் என் நினைவில் நிற்கிறது.

இப்படி காலம் கடந்து நாமே உணராத தருணத்தில் உறவுகளும் கூட பூக்கக்கூடும்.

என் மனதில் சமீப காலமாக பூத்துக் குலுங்கும் ஒரு உணர்வைதான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்குப் புரிகிறதா தேவா? மிச்சமிருக்கும் இந்த வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்து வாழ விரும்புகிறேன்.

உங்கள் இயல்பு எனக்குத் தெரியும். அவசரப்பட்டு மறுத்துவிடாதீர்கள். கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு பிறகு பதில் சொன்னால் போதும். நான் காத்திருக்கிறேன்.

அன்புடன்

சிவநேசன்"

கலவையான உணர்வுகள் கொப்பளித்துக் கிளம்ப அதை சமாளிக்க முடியாமல் திணறினாள் மனோகரி.

(தொடரும்)

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT