national housewife day
national housewife day https://www.daysoftheyear.com
கல்கி

இல்லத்தரசிகளைக் கொண்டாடுவோம்!

கே.என்.சுவாமிநாதன்

குடும்பம் என்ற வண்டியின், கடையாணி என்று சொல்லக்கூடிய இல்லத்தரசிகளை கொண்டாடும் தினம் இன்று. வீட்டு வேலை என்பது என்ன, சாதாரணமாக எல்லாப் பெண்களும் செய்கின்ற வேலைதானே. நான் அலுவலகத்தில் செய்யும் வேலையை விடவும் இது எளிது. மேலும், மதியம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் அல்லது தொலைக்காட்சி பார்க்கலாம். ஆனால், என்னுடைய வேலை மன அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்தது என்று நினைப்பவர்கள், சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் தாய், சகோதரி அல்லது மனைவி, ஒரு நாள் இல்லத்தில் செய்கின்ற வேலைகளைப் பட்டியலிட்டால், இல்லத்தரசியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

‘நான் என்றுமே நேரம் தவறி அலுவலகம் வந்ததில்லை.’ ‘அலுவலகம் வந்தபின்பு நான் வீட்டைப் பற்றி நினைப்பதேயில்லை.’ ‘என் குழந்தைகள் நல்ல நடத்தையுடன் இருப்பதுடன், நன்றாகவும் படிக்கிறார்கள்.’ ‘வீட்டிற்குத் தேவையான மாத சாமான்கள், மின்சாரக் கட்டணம், கைபேசி கட்டணம், தொலைபேசி கேபிள் கட்டணம் எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதில்லை. அவை நேரம் தவறாமல் நடந்து விடுகின்றன.’ இவ்வாறு மார் தட்டிச் சொல்லும் ஆண்கள் சற்றே நினைத்துப் பார்க்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்வனே  நடத்துவது யார்? இல்லத்தரசிகள்.

நாடு மேலும் முன்னேறுவதற்கு, வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறினார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள். இதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 40 மணி நேரம் வேலைக்கு ஊதியம் வழங்கி, 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்கிறார் ஒரு தொழில் அதிபர். ஆனால், சம்பளம் எதுவுமில்லாமல், வாரத்திற்கு குறைந்த பட்சம் 90 மணி நேரம் முதல் 100 மணி நேரம் பணி செய்யும் இல்லத்தரசிகள் பணி பற்றி சிறிதேனும் நினைத்துப் பார்க்கிறோமா?

இல்லத்தரசி, வணிக மேலாண்மை மற்றும் ‘ஜஸ்ட் இன் டைம்’ போன்றவற்றை படித்ததில்லை. ஆனால், அவளுடைய அன்றாடப் பணிகளில், குறித்த நேரத்தில் பணி முடித்தல், அதற்கேற்ப திட்டமிடுதல், அன்றாடத் தேவைக்கான உணவுப் பொருட்களை தயாராக வைத்திருத்தல் ஆகியவை முக்கியமானவை. கணவன் மற்றும் குழந்தைகள், அலுவலகம் அல்லது பள்ளிக்கு வீட்டிலிருந்து கிளம்ப வேண்டிய நேரத்தை கருத்தில் கொண்டு, அதற்கு முன்னால் அவர்கள் தேவைகள் கிடைக்க உறுதி செய்வது வீட்டு மேலாண்மை அல்லவா? பள்ளி செல்லும் குழந்தைகள், வீட்டு வேலையை சரிவரச் செய்திருக்கிறார்களா, அன்றைய வகுப்பிற்குத் தேவையானவற்றை கொண்டு செல்கிறார்களா என்று சரி பார்ப்பதும் இல்லத்தரசிகள் தான்.

child with mother

சமையல் வேலை என்பது பெரியதா? அன்றாடம் செய்வது தானே என்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவு. வாரத்திற்கு 21 வேளைக்கு உணவு தயார் செய்ய வேண்டும். எல்லா வேளைகளிலும், ஒன்றே போன்ற உணவு இல்லாமல், பல்வேறு உணவு வகைகள் செய்ய வேண்டும். இவற்றை செய்வதற்குத் தேவையான காய், கறிகள் மற்றும் மளிகைச் சாமான்கள் ஆகிய மூலப் பொருட்கள் எத்தனை தேவைப்படும் என்று அறிந்து கொள்முதல் செய்ய வேண்டும். இந்த திட்டமிடுதலுக்கு உதவுவது மனம் என்ற அவளுடைய கணிணி. உணவில் சேர வேண்டிய உப்பு, புளி, காரம் சரியான அளவுகள் இருக்க, இல்லத்தரசி எடைக்கருவியை உபயோகிப்பதில்லை. அவளின் மனம் மற்றும் கைதான் அவள் நம்புகின்ற எடைக்கருவி.

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் நல் ஒழுக்கத்துடன் வளர்ந்து, நன்றாகப் படிப்பவர்களாக இருந்தால், அதற்கு முக்கிய காரணம் அவர்களை வழிநடத்தும் இல்லத்தரசியான அவர்கள் தாயார். இவர்கள் தான் குழந்தையின் முதல் ஆசிரியர் என்று சொல்லலாம்.

பொதுவாக, குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக வெளியே சென்று வந்தால், வீடு திரும்பியவுடன் மற்றவர்கள் ஒய்வெடுக்க இருக்கைகள் தேட, இல்லத்தரசிகள் நுழைவது சமையலறைக்கு. அவர்களுக்குத் தெரியும் களைத்து வந்துள்ள குடும்பத்தினர் காபி, டீ கேட்பார்கள் என்று. அவளும் நம்முடன் வந்தாளே, அவளுக்கு களைப்பு இருக்காதா என்று ஒருவரும் கவலைப்படுவதில்லை.

வீடு என்பது இரும்பு, செங்கல், மண், சிமெண்ட் வைத்து கட்டப்பட்டது. அந்த வீடு இல்லம் என்ற பெருமையை அடைவது இல்லத்தரசிகளால். தேசிய இல்லத்தரசிகள் தினம் மட்டும் அவர்களைக் கொண்டாடி, பரிசளிப்பதை விட, சீரான வாழ்க்கைக்கு அவர்களின் பங்கை உணர்ந்து, அவர்கள் செய்யும் பணிகள் சிலவற்றை பகிர்ந்து கொண்டு, அனுசரணையாக இருப்பது நல்லதல்லவா?

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT