கல்கி

“எழுத்து சமூகத்தை இணைக்க வேண்டும்!” எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது பாராட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

S CHANDRA MOULI

ரஸ்வதி சம்மான் விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு, சென்னை வானவில் பண்பாட்டு மையம் சார்பில் விமரிசையான பாராட்டு விழா நடைபெற்றது.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விழாவில் கலந்துகொண்டு எழுத்தாளர் சிவசங்கரியை பாராட்டி, கௌரவித்தார்.

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அரங்கில் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமை வகித்தார்.  தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர். நட்ராஜ், சவேரா ஓட்டலின் நீனா ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சிவசங்கரியைப் பாராட்டிப் பேசினார்கள்.  

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் உரையில், “இன்று மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டதாக பலரும் குறைபடுகிறார்கள். அது சரியில்லை. இன்று வாசிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. அச்சுப் புத்தக வாசிப்பு குறைந்து, டிஜிட்டல் வாசிப்பு அதிகரித்துள்ளது. எழுத்து என்றுமே நிரந்தரமானது. சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் இவற்றை யெல்லாம் பல நூற்றாண்டுகள் கடந்து, இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எழுத்து என்பது சமுதாயத்தில் வெறுப்புகளை அகற்றி, நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். சிவசங்கரி, ஆத்மார்த்தமாக எழுதுபவர். அவரது எழுத்து காலம் கடந்து நிற்கும்!” என்று பாராட்டினார்.

வானவில் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கே.ரவி, “ சிவசங்கரி, எதையும் மேலோட்டமாக எழுதுபவர் அல்ல; தீவிரமாக இறங்கி ஆராய்ச்சிகள் செய்து, அந்தக் களப்பணி அனுபவங்களையே எழுத்தில் கொண்டு வருபவர்.  தனது கதைகளுக்காக  சாராயம் காய்ச்சும் இடங்களுக்கும்,  போதைப் பொருட்கள் ’டென்’ களுக்கும் நேரில் சென்று, சமந்தப்பட்டவர்களோடு பேசி, தகவல்கள் சேகரித்த அவரது துணிச்சல் யாருக்கு வரும்?” என்று பாராட்டினார்.

“இலக்கியம் மூலம் இந்திய இணைப்புக்காக, அவர் மணிப்பூர் சென்றபோது, அங்கு நிலவிய தீவிரவாத  நடவடிக்கைகள் காரணமாக, அவரைப் போக வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியபோதும், அவர் துணிச்சலோடு சென்று அந்த ஊரின் இலக்கியவாதிகளை சந்தித்தார்! ” என்று அவர் குறிப்பிட்டார்.  

சிவசங்கரி தனது ஏற்புரையில், “எனது வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பான சூரிய வம்சம்” புத்தகத்துக்காக இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.  இது எனது வாழ்க்கை வரலாறு அல்ல; நினைவலைகள்! இதில் பொய்யாக எதையும் நான் எழுதவில்லை; என் அனுபவங்களை அப்படியே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்!” என்று கூறினார்.

விழாவினைத் தொகுத்து வழங்கிய பர்வீன் சுல்தானாவின் மொழி நடையையும், தொகுத்து வழங்கிய பாங்கினையும் குறிப்பிட்டுப் பாராட்டினார் நிதி அமைச்சர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT