Postal Letters  
கல்கி

உனக்காக காத்திருக்கும் தபால் பெட்டி!

ரா.வ.பாலகிருஷ்ணன்

'அஞ்சலகங்கள்' நமது எழுத்துகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுமந்து சென்று தகவலை பரிமாறுவதில் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், மன்னர் ஆட்சியில் தகவலைப் பரிமாற புறாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. படிப்படியாக தந்தி முறை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. தந்தி முறையில் தகவலானது, சொல்ல வரும் செய்தியை குறுகிய அளவில் மிகக் குறைந்த எழத்துகளில் தட்டச்சு செய்து அனுப்பப்படும். ஒவ்வோர் எழுத்துக்கும் விலை இருந்ததால் குறுகிய அளவில் தந்தி அனுப்பப்படும். தந்திக்குப் பிறகு தபால் கடிதங்கள் மூலம் தகவல் பரிமாறப்பட்டு வந்தது. முதலில் உருவானது மஞ்சள் நிற அஞ்சல் அட்டை தான்.

அஞ்சல் அட்டையில் கடிதங்கள் எழுதிய அழகிய நாட்கள் மறக்க இயலாத நினைவலைகள். அடுத்ததாக அஞ்சல் உறையில், அஞ்சல் வில்லை (Stamp) ஒட்டி கடிதங்கள் அனுப்பியதில் கடிதங்கள் அழியாமல் காக்கப்பட்டது மட்டுமின்றி, நம்மிடையே எழுத்து ஆர்வமும் மேலோங்கி நின்றது. எழுதும் பழக்கம் இருக்கையில் வாசிப்புப் பழக்கம் இல்லாமல் போய்விடுமா என்ன!

இந்திய அளவில் சாதனை செய்த மாபெரும் தலைவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெருமையைப் போற்றும் விதமாக அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகளை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பித்துள்ளது. கடிதத்தின் எடைக்கு ஏற்ப அஞ்சல் வில்லை ஒட்டப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்துமே விரைவில் நிகழ, அஞ்சல் சேவைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, விரைவு அஞ்சல் (Speed Post), பதிவு அஞ்சல் (Register Post) என‌ இரு வகை சேவைகள் அதிவேக தகவல் பரிமாற்றத்திற்கு உதவி வருகின்றன . இதற்கான தொகை அஞ்சலின் எடைக்கு ஏற்பவும், சென்றடைய வேண்டிய தொலைவுக்கு ஏற்பவும் மாறுபடும். அதோடு மட்டுமல்லாமல், அஞ்சல் எப்போது சென்றடைந்தது என்பதை அஞ்சல் எண்ணைக் கொண்டு www.indiapost.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்தும் கொள்ளலாம். காக்கி சட்டை அணிந்து கொண்டு, மிதிவண்டியில் அஞ்சல்களை சுமந்து கொண்டு வீடு வீடாக முகவரிப் பார்த்து உரியவரிடம் ஒப்படைக்கும் அஞ்சல் அலுவலரைக் (PostMan) காண்பதே தற்போது அரிதாகி விட்டது. அனைத்து தகவல்களும் நொடிக்கு நொடி சமூக வலைதளங்கள் மூலம் கண நேரத்தில் பரிமாறப்படுகிறது. இதனால் நம்மிடையே எழுதும் ஆர்வம் குறைந்து வருவதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதற்காக, நம்மிடையே இருக்கும் எழுத்தார்வத்தை தொலைக்க வேண்டாம். அவ்வபோது சிறு சிறு கடிதங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்களின் கைப்பட எழுதி அனுப்பி, தபால் கடிதங்களையும், உங்களின் எழுத்து ஆர்வத்தையும் ஊக்குவித்துக் கொள்ளுங்கள். இதனால், பேச்சு மொழியாக மட்டுமே உள்ள நம் தாய்மொழி தமிழ் எழுத்து முறையிலும் முன்னேற்றம் அடையும்.

தபால் பெட்டி நமது கடிதங்களுக்காக காத்துக் கிடக்கிறது, நீ என்றாவது ஓர் நாள் வருவாய் என்று. அதன் நம்பிக்கையை வீணடிக்க வேண்டாம். கடந்த கால கடிதங்களை மறந்து விட வேண்டாம். தொலைந்து போன நம் கையெழுத்தையும், தபால் கடிதங்களையும் மீட்டெடுக்க இன்றிலிருந்தே முயற்சி மேற்கொள்வோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT