Michael Shermer 
கல்கி

பிரபல நாத்திகரை அயரவைத்த காதல் கீதம்!

கல்கி டெஸ்க்

- ச. நாகராஜன்

நாத்திகர் மைக்கேல் ஷெர்மர்:

உலகின் பிரபல நாத்திகர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பவர் மைக்கேல் ஷெர்மர் என்பவர். பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகுத்தறிவுப் பகுதியை 2001-ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாதந்தோறும் இவர் எழுதி வந்தார். இவரது 214 கட்டுரைகள் பகுத்தறிவுவாதிகளிடையே பேசப்படும் கட்டுரைகளாக ஆயின. அறிவியல் ரீதியல்லாத எதையும் நம்பாதே என்பதே இவரது கோஷம்.

இவரது கழகத்தில் சுமார் 55,000 உறுப்பினர்கள் உண்டு.

ஆனால், இவரையே அயர வைத்து இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவர் வாழ்வில் நிகழ்ந்தது.

மிகவும் நாணயமானவர், நேர்மையானவர் என்பதால் இந்தச் சம்பவத்தை அவரே தனது பகுத்தறிவு பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் மிகவும் சுவையான ஒரு விஷயம்!

காதல் திருமணம்:

ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபின் மீது காதல் கொண்டார் மைக்கேல் ஷெர்மர். அவரை மணமுடிக்கத் தீர்மானித்தார்.

2014-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதியன்று அவரது திருமணம் நடந்தது.

ஜென்னிபருக்கு அவரது தாத்தா வால்டர் என்றால் உயிர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது பதினாறாம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார். அவரது மரணத்திற்குப் பின் அவரது டிரான்ஸிஸ்டரை அவர் எடுத்துப் பாதுகாத்து வந்தார் ஜென்னிபர். 1978-ம் ஆண்டைச் சேர்ந்த அந்த பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டர் பாடிக் கொண்டிருந்தது. ஆனால் சிறிது காலம் கழித்து அது இயங்கவில்லை.

மைக்கேல் என்னன்னவோ செய்து பார்த்தார். பாட்டரியை மாற்றினார். இணைப்புகளைச் சரி பார்த்தார். அது பாடவில்லை.

இயங்காத டிரான்ஸிஸ்டர் ஒலித்த கீதம்:

கல்யாண நாளன்று தனது வீட்டிற்குத் திரும்பி வந்தவர் ஒரு பாடல் ஒலிப்பதைக் கேட்டு வியந்தார். அந்தப் பாடல் எங்கிருந்து ஒலிக்கிறது என்பதை அவர் ஆராய ஆரம்பித்தார்.

படுக்கை அறையில் டிராயர் ஒன்றில் இருந்த தாத்தாவின் பழைய டிரான்ஸிஸ்டரிலிருந்து தான் ஒரு காதல் கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஜென்னிபரும் மைக்கேலும் அயர்ந்து போயினர். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.

மண நாள் முழுதும் இசைப்பாடல்களை நன்கு ஒலித்த அந்த டிரான்ஸிஸ்டர் மறுநாளிலிருந்து பாடவில்லை.

தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.

ஷெர்மரின் ஒப்புதல்:

2014 செப்டம்பர் மாத ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் அவர் நடந்ததை எழுதினார்:

“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும்! என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை!!”

ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை இவ்வாறு அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

இறந்தவர்களை ஆடியோ சாதனங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ள தாமஸ் ஆல்வா எடிஸன் முயன்றது குறிப்பிடத் தகுந்தது.

“சாதாரண ஒரு நிகழ்ச்சி தான் என்றாலும் கூட உணர்வுபூர்வமாக இதை எடுத்துப் பார்க்கும் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆகிறது. அறிவியல் பூர்வமாக திறந்த மனதுடன் பகுத்தறிவுடன் இதை ஆராயும் போது இந்தப் புதிர் விடுவிக்கப்படாமல் இருக்கும் போது நமது பார்வையின் கதவுகளை மூடி விடாமல் இருந்தால் அது மர்மமான அற்புதங்களை நமக்குத் திறந்து காட்டும்” என்கிறார் மைக்கேல் ஷெர்மர்.

விளக்க முடியாத அற்புதங்கள் என்றும் நிகழும்!

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

சிறுகதை - தன்மானக் கவிஞன் ராஜாமணி!

SCROLL FOR NEXT