இன்று இசை பேரறிஞர் மதுரை சோமுவின் பிறந்த நாள். எப்பேர்ப்பட்ட சங்கீதம்! ரொம்ப ஒஸ்தி! ரொம்ப ஒஸ்தி! ஏ கிளாஸ் வித்வத்! கர்நாடக இசையில் நிறைய பாணிகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஒருவர் பாடும் விதத்தை வைத்து இவர் அந்த பாணியை பின்பற்றுகிறார் என்று சுலபமாக கூறி விடலாம். ஆனால், மஹாவித்வான் மதுரை சோமுவின் பாணியை பின்பற்றி ஒருவராலும் பாட முடியாது. ஒரு சில சங்கதிகளை பாடலாம் அல்லது முயற்சிக்கலாம். ஆனால் முழுமையாக அவர் மாதிரி பாட முடியாது.
காட்டாற்று வெள்ளம் மாதிரி ஒரு சமயம் சங்கதிகள் வரும். அடுத்த நிமிடம் நடு இரவில் ஜொலிக்கும் பூரண சந்திரனை போன்ற அமைதியான இசை தவழ்ந்து வரும். புள்ளி மான் துள்ளி ஓடுவதை பார்க்கும்பொழுது வரும் உற்சாகம் அவருடைய வேகமான ப்ருகாக்களின் மூலமாக ரசிகர்களை தொற்றிக் கொள்ளும். கச்சேரியில் சக வித்வான்களை உற்சாகபடுத்தும் அழகே தனி. 'இன்னும் கொஞ்சம் வாசிங்கோ' என்று ஊக்குவிப்பார்.
‘குருநாதா’ என்று குருவை வணங்குவார். அம்பாள், முருக பக்தர். அபூர்வ ராகங்களை அநாயசமாக கையாள்வார். வந்தே பாரத் ரயிலின் வேகம் போல நடுவில் துரித கதியில் ஒரு உருப்படி பாடி அசத்துவார். கர்நாடக இசையை பல கிராமங்களுக்கு எடுத்துச் சென்று பரப்பியவர்.
எவ்வளவு கேட்டாலும் போதவில்லை. ஒரே பாட்டை திரும்ப திரும்ப கேட்டாலும் அலுக்கவில்லை. புதிய பரிமாணங்கள் புலப்படுகிறது. பல சமயத்தில் நம்மை அழ வைத்து விடுவார். ஆத்மாவை தொடும் சங்கீதம் அல்லவா! அப்படிதான் இருக்கும்.
அபூர்வ ராகங்களை அனாயாசமாக கையாள்கிறார். வானவில்லாய் தோன்றி மறையும் கிரஹபேதத்தை கேட்கும்போது பிரமிப்பாக இருக்கு. இவரும் வயலின் மேதை எம்.சந்திரசேகர மாமாவும் சேர்ந்தால் அமர்க்களமேட்டிக்தான்! பரஸ்பரம் இருக்கும். அன்பு கலந்த மரியாதை, வார்த்தைகளால் வெளிப்படும் மேடையில்.
குரு தட்சணையாக ஒரு சவரன் தங்க காசு குடுத்து வித்வான் சித்தூர் சுப்ரமணிய பிள்ளையிடம் சேர்ந்தார். 14 வருட குருகுலவாசம். இசையுடன் குருவிடமிருந்து தெலுங்கு பாஷையையும் கற்றுக் கொண்டார். அது பின்நாளில் தியாகராஜ க்ருதிகளை பாட மிக உபயோகமாக இருந்தது.
1940வது வருடம் முதல் கச்சேரி. குருவின் ஆசிகளுடன் மதுரை காளி அம்மன் கோயிலும், அடுத்த கச்சேரி திருச்செந்தூர் முருக பெருமானின் கோயிலிலும் அரங்கேறின. அதற்கு பிறகு ஏறுமுகம்தான்.
பாரம்பரியமிக்க நமது கர்நாடக சங்கீதத்தை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் சென்றவர். கூட்டம் அலை மோதும். சிலம்பம், குஸ்தி சண்டை கற்றதால் மேடையிலும் வூடு கட்டுவார். செல்லமாக தாள வாத்யக் கலைஞர்களிடம் சங்கீத குஸ்தி போடுவார். ஃபுல் பெஞ்ச் கச்சேரியில் தம்புரா, பின் பாட்டு, வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல், மோர்சிங் கலைஞர்களுடன் மேடையை அலங்கரிப்பார். இவருடைய ராகம், தாளம், பல்லவி எல்லாம் ரொம்ப ரொம்ப ஒஸ்தி.
(இப்பொழுது கொன்னக்கோல் கலை மிக வேகமாக அழிந்து வருகிறது. ஒருசில சிறப்பு நிகழ்ச்சியில் தவிர, வேற எங்கேயும் காணோம்)
1978வது வருஷத்தில் சிலோனில் இரவு பத்து மணிக்கு தொடங்கிய கச்சேரி அடுத்த நாள் விடியற்காலை 4.30க்குதான் முடிந்தது!
தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் கச்சேரியை முடித்துக்கொண்டு இரவில் ரயில் பயணம். பக்கத்து பெட்டிகளிலிருந்து ரசிகர்கள் இவரை பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். ஒரு ரசிகர், ‘‘அண்ணா, இதுவரை 50 முறை நீங்கள் பாடிய ‘கோடி மலைகளில் கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டை 50 முறை கேட்டிருக்கிறேன” என்று கூற, “அப்படியா! இந்தா பிடி. 51வது முறையாக அந்தப் பாட்டைக் கேள்” என்று உடனடியாக பாடி அந்த ரசிகரை மகிழ்வித்தாராம்.
இன்னொரு ரசிகர், “ஆடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ பாட்டை சமீபத்தில்தான் கேட்டு மகிழ்ந்தேன்” என்று கூற, உடனடியாக அந்த பாட்டை சிறிது பாடிவிட்டு, “தம்பி இந்த பாட்டில் 21 ராகங்கள் வரும். நேரமின்மையால் கல்யாணி, சங்கராபரணம், காம்போதி, மோகனம் மற்றும் தோடி ராகங்களை மட்டும் பாடினேன். முமுவதுமாக பாட வேண்டுமென்றால் சுமார் 45 நிமிடங்கள் தேவை. அடுத்த கச்சேரியில் கண்டிப்பாக பாடறேன். சரி. இப்ப சாப்பிடலாமா?” என்று முடித்தார். அதுதான் சோமு!
சென்னை சங்கீத ஸிஸனில் கிருஷ்ணகான சபாவில் சிறப்பான கச்சேரியை வழங்கினார். இரண்டு நாள் கழித்து செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் பாடுவதாக இருந்தது. உடல் நிலை சரியாக இல்லாததால் கச்சேரி கேன்ஸல். அவர் யக்ன ராமணனிடம், “எனக்கு பதிலாக மதுரை சோமு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று விண்ணப்பித்தார். மதுரை சோமுவையும் தொலைபேசியில் கூப்பிட்டு, “எனக்கு பதிலாக நீங்கள்தான் அவசியம் பாடணும்” என்று வேண்டுகோள் விடுத்தார். சோமுவிற்கு மலைப்பாக இருந்தது எப்படி பாடப்போகிறோம் என்று. ஆனால் அந்த கச்சோரி முதல் கச்சேரியை விட பிரமாதமாக அமைந்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சபா கொடுத்த சன்மானத்தை அப்படியே செம்மங்குடி வீட்டிற்கு சென்று சமர்பித்தார். ஆனால் செம்மங்குடி அதை வாங்க மறுத்தார். ஓரு சிறு தொகையை மற்றும் வைத்துக்கொண்டு, மீதி தொகையை சோமுவிடமே கொடுத்து விட்டார். சோமு அதை பெரும் பொக்கிஷமாக கருதி, தனது இறுதி மூச்சு வரை பாதுகாத்தார்.
ஹிந்துஸ்தானி இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர் சோமு. உஸ்தாத் படே குலாம் அலி கானின் பரம ரசிகர். ஒரு முறை பம்பாய் ஷண்முகாநந்தா சபாவில் கச்சேரி. முதல் வரிசையில் சாட்சாத் படே குலாம் அலி கான்! சோமு அகமகிழ்ந்து, சில உருப்படிகளை ஹிந்துஸ்தானி ராகங்களில் உஸ்தாத் பாணியில் பாடி அசத்தினார். கச்சேரி முடிந்தவுடன் படே குலாம் அலி கான் சோமுவை வெகுவாக பாராட்டி விட்டு, விலை உயர்ந்த சால்வையை போர்த்தி ஆசி வழங்கினார். இதை விட என்ன விருது வேண்டும் ஒரு கலைஞனுக்கு வாழ்நாளில்!
சோமுவிற்கு மிகவும் பிடித்த ராகம் தோடி. ‘மஹா வித்வான் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் தோடியை கேட்ட பிறகு, தோடியின் மீது காதல்’ என்கிறார். ‘தியாகராஜ ஸ்வாமியின் 'எந்துகு தய ராதா' என்ற க்ருதி எனக்கு மிகவும் பிடித்தது’ என்பார்.
அதிரடியாக வரும் ப்ருகாக்கள் நம்மை மிரள வைக்கும். இவருடைய சங்கீதம் 'வேற லெவல்!’ சே… இந்த மஹா வித்வானுக்கு அவர் வாழும் காலத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்ல என்பதை நினைக்கும்போது மனது கனக்கிறது. ‘அந்த’ விருதுவுக்கு கொடுத்த வைக்கவில்லை! அவ்வளவுதான். இவரோட மஹோன்னதமான சங்கீதத்திற்கு அழிவு இல்லை.